நேர் கொண்ட பார்வை @ விமர்சனம்

அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,  ரங்கராஜ் பாண்டே , அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தாரியாங், வித்யா பாலன், நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் ஹெச் . வினோத் இயக்கி இருக்கும் படம் .

மேற்கத்திய நடனமாடும் மீரா கிருஷ்ணன் ( ஷ்ரத்தா ஸ்ரீநாத்).  அவருடன் ஒன்றாக வசிக்கும் பெண்களான  கோவையைச் சேர்ந்த ஃபமிதா பானு(அபிராமி வெங்கடாசலம்) மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியா (ஆண்ட்ரியா தாரியாங்) ஆகியோர். 
 
ஒரு நடன நிகழ்வுக்கு பிறகு இந்த பெண்கள் மூவரும்,  மாபெரும் அரசியல் செல்வாக்கு மிக்க ராமஜெயம் ( ஜெயபிரகாஷ்) என்பவரின் மருமகனான ஆதிக் மற்றும் நண்பர்கள் வைக்கும்  பார்ட்டியில்,  ஒரு ரிசார்ட்டுக்குப் போய் கலந்து கொள்கின்றனர் .  
 
அனைவரும் குடிக்கிறார்கள் . தம் அடிக்கிறார்கள் . செக்ஸ் ஜோக் பேசிக் கொள்கிறார்கள் . 
 
இந்த நிலையில் ஆதிக், மீராவை உடல் உறவுக்கு அழைக்க, அவள் மறுக்க, அவன் பலவந்தம் செய்ய முயல , பாட்டிலை எடுத்து அடித்த அடியில் படுகாயத்துக்கு ஆளாகி உயிர் பிழைக்கிறான் ஆதிக் . 
 
தோழிகள் மூவருக்கும் கொலை மற்றும் கற்பழிப்பு மிரட்டல் விடுக்கிறது, ஆதிக் அண்ட் கோ! அவர்களுக்கு பல தொந்தரவுகள் தருகிறது .  பண பல அதிகாரத்துக்கு போலீஸ் வளைந்து கொடுக்க,  கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள் மீரா . 
 
அவளை மீட்க தோழிகள் முயல , அவர்களுக்கு யாரும் உதவவில்லை . 
 
இந்த நிலையில் சமூக அக்கறை வழக்கறிஞராகச்  சிறந்து விளங்கி, எதிர்பாராதவிதமாக  மனைவியை ( வித்யா பாலன் ) இழந்து , பல வித மன உபாதைகளுக்கு ஆளாகி , மாத்திரை எடுத்துக் கொள்ளாவிட்டால் முரட்டுக் கோபத்துக்கு ஆளாகும் நிலையில் உள்ள,  பரத் சுப்பிரமணியம் ( அஜித் குமார் )  என்பவர்,  அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்குகிறார் . 
 
அவரால் மீராவை மீட்க முடிந்ததா ? ஆதிக் அண்ட் கோவுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடிந்ததா என்பதே இந்த படம் . 
 
முதலில் சொல்ல வேண்டிய விசயம் . இது வழக்கமான அஜித் ரசிகர்களுக்கான வழக்கமான படம் அல்ல . அந்த கமர்சியல் கண்ணாடியை கழட்டி வைத்து விட்டுப் பார்த்தால் ,அவர்களுக்கே இது வித்தியாசமான விதிர் விதிர்ப்பான அனுபவமாக இருக்கும் . 
 
2016 ஆம் ஆண்டு இந்தியில் வந்த பிங்க் படத்தை எடுத்துக் கொண்டு அதில் பல விசயங்களை,  பொருத்தமாக சுயமாக அழுத்தமாக சேர்த்து மாற்றம் செய்து  எழுதி இயக்கி இருக்கிறார் வினோத் . 
 
ஆனால் அதற்காக மட்டும் அவர் பாராட்டப் பட வேண்டியவர் அல்ல . 
 
இவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ கிடைத்த நிலையில் அவரை வைத்துக் கொண்டு தானும் ஒரு கமர்ஷியல் கைமாவை கொடுக்காமல்  , இதை  ஓர் இயக்குனரின் படமாகவும் பொதுப் புத்தியின் தவறுகளை உடைக்கும் விதத்திலும் செய்து இருக்கிறாரே … அதுதான் அபாரம். 
 
நடந்த சம்பவத்தை முதலில் காட்டாமல் , விளைவுகளின் வழியே இழை இழையாகப் புரியவைத்து , அதன் வீரியத்தை உணர வைத்து திரைக்கதையை நகர்த்தி…  எல்லாம் முடிந்து படம் முடியும் வேளையில் நடந்த சம்பவத்தை காட்டும் வகையில்  தேர்ந்த இயக்குனராக ஜொலிக்கிறார் வினோத் . 
 
சிறு சிறு காட்சிகளையும் அழுத்தமாக நிதானமாக திட்ட வட்ட தீர்மானத்தோடு நகர்த்தும் விதம் படத்துக்கு பலம் சேர்க்கிறது . 
 
நீதி மன்ற விசாரணை காட்சிகளின் விவரணை  அருமை . 
ஒரு காட்சியில் என்றாலும் வினோத் பேசி இருக்கும் வடகிழக்கு இந்திய அரசியல் அபாரம் . அதையும் இந்துத்வ  குரலான ரங்கராஜ் பாண்டேவை வைத்தே பேசி இருப்பது அதிபுத்திசாலித்தனம் 
 
நோ என்பது ஒரு வார்த்தை அல்ல .. வாக்கியம் என்று துவங்கி அஜித் பேசும் வசனம் அருமை,  நெகிழ்வு, கனம். 
 
தமிழ் சினிமாவுக்கு ஒரு கேம் சேஞ்சர் படத்தை கொடுத்திருகிறார் இயக்குனர் வினோத் . அருமை . சிறப்பு !
 
சபாஷ் அஜித் !
 
‘எத்தனை வருடம் ஆனாலும் எத்தனை வயசு ஆனாலும் வழக்கமான் ஹீரோயிச சேட்டைகள் செய்து கொண்டு எல்லா காட்சிகளிலும் நான்தான் வருவேன்’ என்று அடம் பிடிக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் , 
 
 வேறு பாத்திரங்களுக்கு(ம்)  முக்கியத்துவம் தரும் கதையில்,  தானும் ஒரு பங்காக இணையும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம்,  தனக்கான நடிப்புப் பாதையின் நீளம் அகலம் இரண்டையும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறார் அஜித் . 
”அமிதாப் பச்சன் பாருங்க வயசுக்கு பொருத்தமாக விதம் விதமான கதைகள் பண்றாரு .  தமிழ் சினிமாவில் அப்படி யாரும் இல்லையே” என்ற கேள்விக்கு ஒரு நல்ல பதிலாக … 
 
தமிழ் சினிமாவின் அமிதாப் பச்சனாக மாறி இருக்கிறார் அஜித் . அஜித்தின் இந்த மாற்றம் மூலம் அவருக்கு மட்டுமல்ல .. தமிழ் சினிமாவுக்கே   பல நல்ல கதைகள் பெரிய படங்களாக உருவாகலாம் . 
 
இந்த பாணிக்கு மற்ற ஹீரோக்களும் இறங்கினால் அது மேலும் நல்ல படங்களைத் தரலாம் . 
 
அந்த வகையில் புதிய பாதை போட்டு இருக்கிறார் அஜித் .  செதுக்கலான நல்ல நடிப்பையும் தந்திருக்கிறார் .. சிறப்பு 
 
ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தை உள் வாங்கி நடித்து இருக்கிறார். அரசு தரப்பு வழக்கறிஞராக கவனிக்கவும் கலகலக்கவும்  வைக்கிறார் ரங்கராஜ் பாண்டே .  
அபிராமி , ஆண்ட்ரியா ஒகே யா . 
 
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு அழகியல் மற்றும் அவலம் இரண்டுக்கும் நியாயம் செய்கிறது .   
 
பாடல்களில் ஏமாற்றி இருக்கும் யுவன் சங்கர் ராஜா, பின்னணி  இசையில் கரம் கொடுத்து இருக்கிறார் .   
 
ஒரே ஒரு சண்டைக்காட்சி . அதற்கு வினோத் வைத்திருக்கும் பில்டப் காட்சி அபாரம் . ஆனால் சண்டைக் காட்சி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். 
 
படத் தொகுப்பு இரண்டாம் பகுதியில் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் . 
மன நலம் சம்மந்தப்பட்ட மருத்துவ சிகிச்சையில் இருப்பவர் எப்படி வாதாட முடியும் ? என்று லாஜிக் கேள்வி கேட்க விடாமல் , ” இந்தப் படத்தின் நீதி மன்றக் காட்சிகள் நிஜ நீதி மன்றங்களின் பிரதிபலிப்புகள் அல்ல ” என்று ஆரம்பத்திலேயே டைட்டில் போட்டு விடுகிறார்கள். 
 
அதே நேரம் மாத்திரையை தூக்கி எறிந்துவிட்டு அஜித் வாதாடப் போவது போல காட்டும் அஜால் குஜால் பில்டப் களும் உண்டு . 
 
விஷயம் ரொம்ப சிம்பிள் . 
 
 ஓர் ஆண் தனது நண்பர்களோடு வீடு எடுத்து தங்கினால்,  ‘பசிக்குது சாப்பாடு வாங்கித் தா’ என்று  (திடீர்) நட்புக்களிடம் (கூட)  கேட்டால் ,  தண்ணி அடித்தால் , தம் அடித்தால், செக்ஸ் ஜோக் சொன்னால் , பின்னரவில் தனியாக நடந்து வந்தால்….  அதை எல்லாம் சகஜமாக எடுத்துக் கொள்ளும் சமூகம்…  அதன் பொதுப் புத்தி… குறிப்பாக ஆணாதிக்க மனோபாவம் , 
 
 
அவற்றையே  பெண்கள் செய்தால் மட்டும் ‘அவ ஐட்டம் ..  எதுக்கும் தயாரானவ .. கூப்பிட்டா வந்துடுவா ‘  என்று முடிவு கட்டுகிறது . முயல்கிறது . சம்மந்தப்பட்ட பெண் மறுத்தால் , ”யோக்கியம் மாதிரி நடிக்காதடி…  என்கிறது . பலாத்காரம் செய்கிறது   இது தவறு என்பதை சொல்வதுதான் இந்தப் படம் . 
 
அட அவ்வளவு ஏன்… பல பேருடன் செக்ஸ் வைத்துக் கொண்ட பெண் கூட , அவளை முயலும் ஒரு ஆணிடம்,  ‘நோ.. வேண்டாம்” என்று சொன்னால் அவளை விட்டு விட வேண்டும் . அதன் பிறகும் ஆதிக்கம் செலுத்துவது குற்றம். அது மனைவியே என்றாலும் கூட வற்புறுத்தக் கூடாது.  இந்த குணம் ஆண்களுக்கு வர வேண்டும் என்பது தானே நியாயம் ?
 
( ”தானா வந்தா யாரா இருந்தாலும் விடாதே . வேணாம்னு சொன்னா  விலைமாதுவா இருந்தாலும் தொடாதே ” என்று வசந்த மாளிகையில் பால முருகன் எழுதிய வசனம் நினைவுக்கு வருகிறது ) 
 
இதை வெகுஜன சமூகம் ஏற்குமா என்பதில் இருக்கிறது இந்தப் படத்தின் கமர்ஷியல் பெரு வெற்றி . ஏற்க வேண்டும் என்பதே நமது கருத்து . 
 
நேர்கொண்ட பார்வை…. நிமிர்ந்த நன் நடை !
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *