ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் சார்பில் விக்ரம் பிரபு , சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை , சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்..கே. அஜய் குமார் ஆகியோர் தயாரிக்க,
விக்ரம் பிரபு , நிக்கி கல்ராணி , பொன் வண்ணன், நான் கடவுள் ராஜெந்திரன் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்க, பி.அசோக் குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் நெருப்புடா
இந்த அசோக்குமார் ரோமியோ ஜூலியட் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் . ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடம் இரண்டு படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர் .
அது மட்டுமா ? சி என் என், ஐ பி என் தொலைக்காட்சி நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பத்திரிக்கையாளராகப் பணி புரிந்தவர் .
படத்துக்கு ஒளிப்பதிவாளர் – R.D. ராஜசேகர், இசை – ஷான் ரோல்டன், பாடல்கள் – ரோக்கேஷ், கலை – எம்.பிரபாகரன், படத் தொகுப்பு – தியாகு, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் – நரேன், டிஸைனர், சபீர்,
தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர்கள் சங்கத் தலைவர் டைமண்ட் பாபு , இந்தப் படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார் .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், சத்யராஜ், விஷால், இயக்குனர் விக்ரமன், தனுஷ் , கலைப்புலி எஸ் தாணு விவேக் என்று பல பிரபலங்கள் !
படத்தில் முன்னோட்டமும் பாடல் ஒன்றும் திரையிடப்பட்டது .
ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரபாகரின் கலை இயக்கத்தில் அசோக்குமாரின் இயக்கத்தில் படம் வித்தியாசமாக வந்திருப்பது சிறப்பான முன்னோட்டத்திலேயே தெரிந்தது .
பாடலில் மிக சிறப்பாக ஆடி இருந்தார் விக்ரம் பிரபு .
நிகழ்ச்சியில் பேசிய விஷால், படம் பார்க்கும்போதே பாதியிலேயே படத்தைப் பற்றி தவறாக விமர்சனம் எழுதும் போக்கு மாறவேண்டும் ” என்று சொல்ல,
தொடர்ந்து தாணு. விவேக், ராகவா லாரன்ஸ், விக்ரமன் , ரஜினி காந்த் வரை அந்தக் கருத்தை தங்கள் பாணியில் வலியுறுத்தினார்கள் .
“சான் ரோல்டன் இசை மிக சிறப்பாக உள்ளது . அவர் பெரிய உயரங்களுக்கு போவார்” என்றார் தனுஷ்
சிவாஜி வீட்டு சாப்பாட்டின் சிறப்பு பற்றி சத்யராஜ், விவேக் பலரும் சிலாகித்துப் பேசினார்கள் ” ஒரு முறை மூன்று மணி நேரம் ஷூட்டிங்க நிறுத்திட்டு சாப்பிட்டோம் என்றார் விவேக் .
அதோடு ”பிரபுவிடம் ஓர் அழகிய கள்ளமின்மை உண்டு . தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ஓவர் நைட்டில் பெரிய ஹீரோவான முதல் நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் .
இரண்டாவது நடிகர் சிவாஜியின் பேரனான விக்ரம் பிரபு . வேறு யாருக்கும் இந்தப் பெருமை இல்லை ” என்றார் விவேக்
நான் வாழ் வைப்பேன் படத்தின் சிவாஜியுடன் நடித்த போது முதன் மூதலாக சிவாஜி வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டதை நினைவு கூர்ந்த ரஜினிகாந்த்
” அவர் இப்போது இங்கே உயிரோடு இருந்தால் ‘என்னடா ! எனக்கு போட்டியா தாடி வச்சிட்டியா?’ எனக் கேட்பார்” என்றார் .
ரஜினி உட்பட நிகழ்ச்சியில் பேசிய எல்லோருமே , ” இந்தப் படத்தின் வெற்றி விழாவை இங்கே இதே சிவாஜி வீட்டிலேயே நடத்த வேண்டும் . நாங்கள் அழைக்காமலே வருவோம் ” என்றார்
“படத்துக்கு நெருப்பு என்று ஒரு டைட்டிலை யோசித்து வைத்து இருந்தோம் . இந்த சமயத்தில் ரஜினி சாரின் கபாலி படத்தின் பாடலில் வரும்,
‘நெருப்பு டா’ என்ற வார்த்தை பிரபலமாகி விட, அதையே பெயராக வைத்து விட்டோம் ” என்றார் விக்ரம் பிரபு .
“தீயணைப்பு வீரர் பற்றிய கதை என்பதால் இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக அமைந்தது ” என்றார் இயக்குனர் அசோக் குமார் .
“அப்பா மீது கொண்ட அன்பு காரணமாகவும் எங்கள் மீது கொண்ட நட்பு காரணமாகவும் வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ” என்றார் பிரபு





