வி.கே.பி.டி கிரியேசன்ஸ் சார்பாக D.வேலு தயாரிக்க, இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக நடிக்க,
கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா நாயகியாக நடிக்க,
முக்கிய கதாபாத்திரத்திரங்களில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி , ஆர்.கே.சுரேஷ், பொன்வண்ணன் காமெடி வேடத்தில் தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு
இவர்களுடன் பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி, காதல் சிவகுமார் ஆகியோர் நடிக்க,
வாசுதேவ் பாஸ்கர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் பள்ளிப் பருவத்திலே
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படம் பற்றிப் பேசிய இயக்குனர், ”கலகலப்பான குடும்ப சூழலையும், பள்ளி மாணவர்களையும் மையப்படுத்தி அமைக்கப் பட்ட காமெடி கலந்த, காதல் கதைதான் பள்ளிபருவத்திலே.
படத்தின் படப்பிடிப்பு ஐம்பது நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஓரத்தநாடு, ஆம்பலாபட்டு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது.
இந்த ஐம்பது நாள் படப்பிடிப்பில் எங்கள் யாருக்கும் எந்த வித சோர்வும் இருந்ததில்லை. காரணம் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல அந்த கிராம மக்களுடன் பழகினோம்.
படத்திற்காக காமெடியாக மட்டும் இல்லாமல் கே.எஸ்.ரவிகுமார் ஊர்வசி, தம்பிராமைய்யா, கஞ்சாகருப்பு உட்பட எல்லா நடிகர்களும் படப்பிடிப்பு தளத்தை சுற்றி,
எங்களையும் ஊர்மக்களையும் சிரிக்க வைத்து சந்தோஷப் படுத்தினார்கள்.
சினிமா மேல் எனக்கு இருந்த காதலால் நான் உதவி இயக்குனராக வேலை செய்ய கே.எஸ்ரவிகுமார், சுரேஷ்கிருஷ்ணா அவர்களிடம் சேர வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியாமல் போனது.
ஆனால் நான் தயாரித்த “ வேதா “ படத்தின் இசை வெளியிட்டு விழாவின் மூலம் எனக்கு அவரது அறிமுகம் கிடைத்தது.
நான் யாரிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று நினைத்தேனோ அதே கே.எஸ்.ரவிகுமார் சாரை எனது இயக்கத்தில் இந்த படத்தில் நடிக்க வைத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன்.
அவரிடம் நான் கதை சொன்னதும், முழுக் கதையையும் கேட்டு விட்டு..இது என்ன விருதுக்காக எடுக்கிற படமா என்று கேட்டார்.
அப்போது இதே வார்த்தையை தான் கவிப்பேரரசு வைரமுத்துவும் என்னிடம் சொன்னார் என்று கே.எஸ்.ரவிகுமார் சாரிடம் கூறினேன்.
அதற்கு அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். இவர்கள் இருவரும் சொன்னதே எனக்கு தேசிய விருது கிடைத்த சந்தோஷம் “என்றார் .
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் பேசும்போது ”
இயக்குனர் பாஸ்கர் எனது பல வருட நண்பர் . ஆனாலும் அவர் என்னை நடிக்க அழைத்தபோது யோசித்தேன் .
காரணம் விஜய் சார், விக்ரம் சார் , சசி சார் படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டு இருக்கும் வேளையில் நமது வேறு படங்கள் அதற்கு எதிராக போய் விடக் கூடாது என்ற பயம்தான் .
ஆனால் படத்தின் கதை கேட்ட உடன் அசந்து விட்டேன் . மிஸ் பண்ணக் கூடாத படம் என்று முடிவு செய்தேன் . நடித்துள்ளேன் .
நான் சண்டைக் காட்சிகளில் இந்தப் படத்தில் ரிஸ்க் எடுத்து நடித்த அளவுக்கு வேறு எந்தப் படத்திலும் நடித்தது இல்லை .
சண்டைக் காட்சிகள் சூப்பராக வந்துள்ளது . மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் மிக சிறப்பாக எடுத்தார் .இளம் நாயகன் நந்தன் ராம் மிக ரிஸ்க் எடுத்து நடித்தார். அவர் மிகச் சிறந்த இடத்துக்கு வருவார் .
படத்தில் விஜய் நாராயணன் இசையில் உருவான பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கிறேன் . அவ்வளவு இனிமை . புரியும் படியான பாடல்கள் .
எனது தயாரிப்பில் வந்த தர்மதுரை படத்தில் வைரமுத்து சார் எழுதிய பாட்டுக்கு தேசிய விருது கிடைத்தது என்றால் காரணம் நல்ல வரிகளும் அதை கேட்கும்படி அமைந்த இசையும்தான் .
அதை விட்டு விட்டு என்னன்னு புரியாத அளவுக்கு என்னததையாவது எழுதி அடிச்சு அசிங்கப்படுத்துறாங்க .
இந்தப் படத்துக்கு பாடல்கள் பெரிய பலம் . கதாநாயகி வெண்பா மிக சிறப்பாக நடித்துள்ளார் . படம் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்றார்





