ஆர் புரடக்ஷன்ஸ் மற்றும் ஏ வி பி சினிமாஸ் சார்பில் தயாரித்து எழுதி முத்துக்குமார் இயக்க, அர்ஜுன் சுந்தரம், சிந்தியா, கஞ்சா கருப்பு, ஜோதிராய் , ஜாகுவார் தங்கம் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.
மோடி அரசாங்கம் பண மதிப்பிழப்புத் திட்டத்தைக் கொண்டு வந்த போது ஏழைகள் மிகவும் அல்லலுற்றார்கள். ஆனால் பணக்காரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் , சூப்பர் நடிகர்கள் போன்றோர் தங்கள் செல்வாக்கு மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக பழைய நோட்டுகள் மற்றும் கறுப்புப் பணத்தை புது நோட்டுகளாகவும் வெள்ளையாகவும் ஆக்கிக் கொண்டார்கள் .
அப்படி பெண் அரசியல்வாதி ஒருவரும் (சசிகலாவைக் குறிப்பிடும் வசனங்களும் பெயரும் ) தொழில் அதிபர் ஒருவரும் மாற்றிக் கொள்வதைப் படம் எடுக்கும் பெண் பத்திரிகையாளர். ஒருவர் அப்போதே மாட்டிக் கொள்ள, அந்தப் பெண் பத்திரிக்கையாளரையும் அவரது மகளான சிறுமியையும் அவர்கள் கொன்று விடுகிறார்கள் .
தொலைந்து போன செல்போன் வழியே அதைத் தெரிந்து கொண்ட இளைஞன் ஒருவன் (அர்ஜுன் சுந்தரம்) குற்றவாளிகளிடம் பேரம் பேசி பல கோடி லஞ்சம் பெற்று காதலியோடு ( சிந்தியா) சுகமாக வாழ்கிறான்.
செத்துப் போன சிறுமி , முருகப் பெருமானின் உதவியோடு ஆவியாக வந்து தங்களைக் கொன்ற நபர்களை நேரடியாகப் பழி வாங்கும் அதே நேரம் பணத்துக்கு சோரம் போன அந்தக் காதல் ஜோடியை வித்தியாசமான முறையில் சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதே இந்தப் படம். இதோடு கந்தசஷ்டிக் கவசம் பற்றி தவறாக வீடியோ போட்டவர்களை முருகனின் அவதாரமாக வந்து கொல்லவும் செய்கிறது
பண மதிப்பிழப்பு அறிவிப்பின் கோர முகத்தைக் காட்டும் கதை எழுதிய இயக்குனருக்குப் பாராட்டுகள் . அதே போல பேய் என்பதற்காக தன்னைக் கொன்றவர்களை கொல்லும் அதே பாணியில் நாயகன் நாயகியைக் கொல்லாமல் சட்டத்தின் பிடியில் வித்தியாசமாக நிறுத்துவதையும் பாராட்டலாம். . நல்ல ஐடியா அது .
இது மட்டுமல்லாமல் கஞ்சா கருப்புவை வைத்து ஒரு காமெடி டிராக் செய்து அதில் ஆன் லைன் பொருள் வாங்குவதில் உள்ள அவலங்கள், நாகரீகம் என்ற பெயரில் டிக் டாக் போன்ற செயலிகள் மூலம் பலர் அடிக்கும் கூத்துகள், விவசாயம் மற்றும் விவசாயிகளை மதிக்க வேண்டிய முறை இவற்றை எல்லாம் சாடிய வகையிலும் முத்துக்குமாரைப் பாராட்டலாம் . இந்த காமெடி டிராக்கில் வசனங்களும் பல இடங்களில் சிறப்பு .
மோடி அரசு செய்த பணமதிப்பிழப்பு விசயத்தை விமர்சிக்கும் அதே நேரம் இந்து மதக் கடவுள்களை தவறாகச் சித்தரிப்பவர்களை கண்டிக்கும் காட்சியும் வைத்து பேலன்ஸ் செய்த வகையில் இயக்குனர் முத்துக் குமார் கில்லாடி (எந்த மதத்துக் கடவுளைக் கிண்டல் செய்தாலும் விட மாட்டேன் என்ற வசனம் இன்னும் சிறப்பான பேலன்ஸ்)
விஜய்யின் ஒளிப்பதிவு, பவர் புஷ்பராஜின் சண்டைப் பயிற்சி ஆல்ட்ரின் இசை, ஆகியவை இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் .
அர்ஜுன் சுந்தரம், சிந்தியா, சுரேஷ் ஆகியோர் உற்சாகமாக நடித்து இருகின்றனர் , எனினும் நேர்த்தி அவசியம் .
ஜோதிராய், கஞ்சா கருப்பு, ஜாகுவார் தங்கம் ஆகியோர் இயல்பான நடிப்பைத் தந்துள்ளனர். சிறுமி நன்றாக நடித்துள்ளார்.
உதவி போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கும் படத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் கணேஷ்குமார் தோற்றப் பொருத்ததில் சிறப்பாகப் பொருத்தி இருக்கிறார் .
இயக்கம் நடிப்பு முதல் கொண்டு மொத்தமாகவே தொழில் நுட்ப ரீதியாகப் போதாமை இருந்தாலும் நாயகன் நாயகியைப் பேய் பழிவாங்கும் உத்தி, அடிப்படைக் கதை இவற்றுக்காக இயக்குனர் முத்துக் குமாரை மனதாரப் பாராட்டலாம் .
