லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, அதர்வா, ராஜ்கிரண் , ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் சற்குணம் எழுதி இயக்கி இருக்கும் படம்.
ஒரு கிராமத்துக்கே கபடி விளையாட்டில் ஆர்வத்தை உருவாக்கிய பொத்தாரி என்பவருக்கு (ராஜ்கிரண்) இரண்டு மனைவிகள் . முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் (ஜெயப்பிரகாஷ், துரை சுதாகர்) ஒரு மகள் . . இரண்டாவது மனைவிக்கு ஒரே மகன் (ஆர் கே சுரேஷ்)
தந்தையால் இரவு நேரத்தில் கபடிக் களத்துக்கு அனுப்பப்பட்ட அந்த – இரண்டாவது மனைவியின்- மகன் கபடி ஆடும்போது விபத்தில் இறந்து விட , அதற்கு பொத்தாரியே காரணம் என்று எண்ணுகிறார் விதவை மருமகள் (ராதிகா)
அந்த மருமகளின் தகப்பன் (ஜி எம் குமார்) தன் மகளுக்கான சொத்துகளை பிரித்துத் தரச் சொல்கிறார் . தாரம் வழி பாகப்பிரிவினை புழக்கத்தில் உள்ள பகுதி என்பதால் பொத்தாரியின் முதல் மனைவிக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளுக்கு சொத்தில் பாதியும் , விதவை மருமகளுக்கும் அவளது ஒரே மகனான சிறுவனுக்கும் மட்டும் பாதி சொத்தும் போகிறது .
இதனால் பொத்தாரி , அவரது முதல் மனைவியின் மகன்கள் மருமகள்கள் அனைவரும் விதவை மருமகளையும் அவளது மகனும் தற்போதைய இளைஞனுமான நாயகனாய் ( அதர்வா) வெறுக்கின்றனர். பொத்தாரிக்கும் முதல் மனைவிக் குடும்பத்துக்கு ஏற்படும் வறுமையும் அதற்குக் காரணமாகிறது.
தாத்தா மற்றும் பெரியப்பாக்கள் குடும்பத்தோடு இணைய நாயகன் எடுக்கும் முயற்சிகளில் அவமானமே மிஞ்சுகிறது .
பொத்தாரி மீது பொறாமை கொண்ட ஒருவரின் மகனும் கபடியில் ஆர்வம் காட்டியும், பொத்தாரியின் மூத்த மகனின் பேரனின் திறமை காரணமாக அவன் முன்னேறுவது அந்த பொறாமைக்காரக் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லை .
எனவே பொத்தாரியின் பேரனை நம்ப வைத்துக் கழுத்தறுத்து அவனை ஊருக்குத் துரோகியாக சித்தரித்து பொத்தாரி குடும்பத்தை அவமானப்படுத்த அவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான் . அது மட்டுமின்றி பொத்தாரி குடும்பத்துக்கு அவமானங்கள் தொடர, அந்தக் குடும்பம் பஞ்சாயத்தில் கை கட்டி நிற்க, அவமானத்தை சரி செய்ய நாயகன் களம் இறங்குகிறான் .
நவீன கபடியில் பயிற்சி பெற்ற – மாநில அளவில் ஆடும் வாய்ப்பு பெற்ற வீரர்களைக் கொண்ட ஊர் அணியை எதிர்த்து , வயதான பொத்தாரியைத் தவிர யாருக்குமே கபடி தெரியாத தனது குடும்ப நபர்களை வைத்துக் கொண்டு பொத்தாரி கபடி ஆடி வெல்ல வேண்டும் என்று முடிவாகிறது .
அவர்களுக்கு உதவி , பொத்தாரியின் இரண்டாம் தாரத்து மகனின் மரணத்துக்குத் தெரியாமல் காரணமான கபடி வீரரின் மகள் (ஆஷிகா ரங்கநாத்) மட்டுமே .
நடந்தது என்ன என்பதே படம் .
வெற்றிலைக் கொடி வயல்களின் வாழ்வியல் பின்னணியில் கிராமத்து பழக்க வழக்கங்கள் தோய்ந்த – தமிழர்களின் விளையாட்டான கபடிக்கு முக்கியத்துவும் தரும்- கதை திரைக்கதை எழுதி தனக்கே உரிய பாணியில் இயக்கி இருக்கிறார் சற்குணம். கலாச்சாரப் பழக்க வழக்கங்களை காட்டும் விதம் அருமை.
பொத்தாரி கேரக்டரில் ராஜ்கிரண், நாயகன் கேரக்டரில் அதர்வா, நாயகனின் அம்மாவாக ராதிகா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை தாங்கிப் பிடிக்கிறார்கள் .
ஜிப்ரானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமை.
லோகநாத் சரவணனின் ஒளிப்பதிவு கதை நிகழும் இயற்கைக் களத்தை சிறப்பான உணர வைக்கிறது.
சண்டைக் காட்சிகள் சும்மா பட்டையைக் கிளப்புகின்றன.
பெரியவர்கள் அடித்துக் கொண்டாலும் இளையதலைமுறை நட்பாக இருப்பதாகக் காட்டிய விதம் அருமை.
இந்தக் கதை இப்படித்தான் முடியும் என்று தெரிந்தாலும் அது நிகழும்போது நெகிழ வைக்கிறது .
உறவுகளின் அருமை சொல்லும் விதம் பாராட்டுக்குரியது .