விஜய் மூலன் டாக்கீஸ் வழங்க , கேண்டில் லைட் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் குரு சோம சுந்தரம் , நாசர், ஆனந்த் சாமி, லக்ஷ்மி பிரியா, ஆஷிகா செல்வம் நடிப்பில்,
நிஷாந்த் ரவீந்திரனின் திரைக்கதை மற்றும் படத் தொகுப்பில் சுனில் சி கே- ஜத்தின் ஷங்கர் ராஜ் இருவரின் ஒளிப்பதிவில் , தோஷ் நந்தா என்பவரின் இசையில்
நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜத்தின் ஷங்கர் ராஜ் இயக்கி இருக்கும் படம் ஓடு ராஜா ஓடு . ஓடுமா ? நின்று விடுமா ? பேசலாம் .
வயசான தாதா ஒருவர் (சாருஹாசன்) தன் பெரிய மகன் காளி முத்து (நாசர்) மற்றும் சின்ன மகன் செல்ல முத்து,
இருவரிடமும் ”இனி வன்முறையை விட்டு விடுங்கள்” என்று சொல்லி விட்டுச் சாகிறார் .
சம்மதித்த பெரிய மகன் , தான் கொல்ல இருந்த ஒரு ஆட்டோ டிரைவருக்கு கடைசி நேரத்தில் உயிர்ப் பிச்சை அளிக்கிறார். ஆனால் சின்ன மகன் அப்பா சொன்னதை ஏற்க மறுக்கிறார் .
பெரிய மகனின் மனைவி (சோனா ) இரவெல்லாம் நைட் கிளப் பார்ட்டி என்று அலைபவள் .
ஒரு விபத்து காரணமாக ஜெயிலுக்கு போக வேண்டிய பெரிய மகன், தனக்கு பதிலாக தன் வேலையாளை (அருண்மொழி ) ,
விசுவாசத்தின் பெயரால் ஜெயிலுக்கு அனுப்பத் திட்டமிடுகிறார்.
ஆனால் பதிலாக வேலையாளின் மகன் ( ஆனந்த சாமி) ஜெயிலுக்கு போகிறான் . இந்த நிலையில் அவனது செட்டப்பை (ஆஷிகா) அவனது நண்பனும் கரெக்ட் செய்து விடுகிறான் .
ஜெயிலில் இருந்து வந்தவன் , தான் ஜெயிலுக்குப் போக காரணமாக இருந்த காளிமுத்துவை கடத்தி அவரது நைட் கிளப் மனைவியிடம் பணம் பறிக்க திட்ட மிடுகிறான்
அதற்காக காளிமுத்து வீட்டுக்கு அவர்கள் போகின்றனர் .இது ஒரு பக்கம் போக இன்னொரு புறம் …
வீட்டில் உள்ள தொலைக்காட்சிக்கு ஒரு செட்டாப் பாக்ஸ் வாங்க ஆசைப்படும் செவிலியர் மனைவி (லக்ஷ்மி பிரியா) ,
சோம்பேறி எழுத்தாளனான கணவனிடம் ( குரு சோம சுந்தரம்) அதற்கான பணத்தையும் கொடுத்து விட்டுப் போக,
அவனோ போதைப் பொருள் விற்கும் நண்பனுடன் ஒரு பாடாவதி கடைக்கு செட்டாப் பாக்ஸ் வாங்கப் போகிறான்.
கடை மூடி இருக்க , நண்பனின் வற்புறுத்தலால் போதைப் பொடி நிரப்பிய சிகரெட்டை ஒரு பப் அடிக்கிறான் .
அந்த நேரம் பார்த்து நண்பனுக்கு போதைப் பொருள் சப்ளை செய்யும ஒரு தாதா அங்கு வந்து , ”ஏன்டா, என் சரக்குக்கு ஒழுங்கா பணம் தரல” என்று கேட்க, எழுத்தாளனை காட்டி ”இவன்தான் உங்க சரக்கை ‘அடிச்சுட்டான்” என்கிறான் போதை நண்பன் .
தாதா இந்த இருவரையும் தன்னை விட பெரிய தாதாவிடம் கொண்டு போகிறான் . அந்த பெரிய தாதா ,
எழுத்தாளன் மற்றும் நண்பன் இருவரையும் போதைப் பொருள் உள்ள பெட்டியை ஒரு இடத்தில் கொடுத்து பணம் வாங்கி வரச் சொல்கிறான் .
வாங்கி வருகையில் அந்தப் பெட்டியை ஒரு ஏழை சிறுமியின் ( பேபி ஹரிணி) பிக்பாக்கெட் கேங் திருடிவிடுகிறது .
எனவே காளிமுத்து வீட்டில் பணம் திருடி அதை , தன்னை பெட்டி மாற்ற அனுப்பிய தாதாவிடம் கொடுக்க முடிவு செய்து, எழுத்தாளனும் அவனது போதைப் பொருள் நண்பனும் காளிமுத்து வீட்டுக்கு போகின்றனர் வீட்டில் போதைப் பொருள் நண்பனுக்கும் காளிமுத்து மனைவிக்கும் பற்றிக் கொள்கிறது .
அதே நேரத்தில் காளிமுத்துவைக் கடத்த வந்த வேலையாளின் மகன், மாற்றி வேறு ஒருவரை கடத்திக் கொண்டு போகிறான்
காளிமுத்துவோ எழுத்தாளன் முன்னிலையில் சறுக்கி விழுந்து அடிபட்டு கண் மூட , அப்படியே போனால்,
அவரைக் கொன்றது தெரிந்து விடும் என்று அவரை காரில் வைத்து கடத்துகிறார்கள், எழுத்தாளனும் போதைப் பொருள் நண்பனும்.
காளிமுத்துவுக்குப் பதில் வேறொருவரைக் கடத்திக் கொண்டு போனவன் , காளிமுத்துவின் மனைவியிடம் பணம் கேட்டு மிரட்ட, அவளோ ‘பணம்லாம் தர முடியாது’ என்று கூறிவிடுகிறாள்.
அதே போல செல்லமுத்து பணத்துக்காக தன் அண்ணன் காளிமுத்துவையே கொலை செய்ய முடிவு செய்ய ,
காளிமுத்து என்ற பெயரில் வேறொருவரைக் கடத்திய அந்த வேலைக்காரன் மகன், செல்லமுத்துவுக்கு போன் செய்து,
”உன் அண்ணனைக் கடத்தி வச்சிருக்கேன் . மூணு கோடி பணம் கொடுத்தா விடுவேன் ” என்கிறான் .
”வேண்ணா பத்து லட்சம் தர்றேன் . என் அண்ணனை என்கிட்டே ஒப்படைச்சுடு” என்கிறான் செல்லமுத்து
கடத்தியவன் அதிர்ச்சியாகும் நேரம் , இன்னொரு அதிர்ச்சியாக தன் செட்டப்புக்கு நண்பனோடும் கனெக்ஷன் இருப்பது,
எழுத்தாளனின் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பேச்சிலர் , எழுத்தாளனுக்கும் அவன் மனைவிக்கும் இடையிலான,
சண்டையைப் பயன்படுத்தி அவளை அடைய முயன்று நெருங்கியும் விடுகிறான் .
இதற்கிடையே நிஜ காளிமுத்துவை கடத்திக் கொண்டு போன எழுத்தாளனும் அவனது போதைப் பொருள் நண்பனும் ,
தங்களை பெட்டி மாற்ற அனுப்பிய தாதாக்களிடம் சிக்குகிறார்கள் .
பணப் பெட்டியை திருடிய ஏழை சிறுமிக்கும் ஒரு சிறுவனுக்கும் (மாஸ்டர் ராகுல்) நேசம் வருகிறது . இந்த சமயத்தில் செல்லமுத்து செய்த ஒரு காரியம் அந்த நேசத்தை சாகடிக்கிறது.
ஒரு நிலையில் எல்லோரும் தவிர்க்க முடியாத அவசியமான காரண காரியத்தோடு காளிமுத்து வீட்டுக்கு வர , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த ஓடு ராஜா ஓடு .
செட் டாப் பாக்ஸ் கனெக்ஷன் கொடுத்து சேனல்களை ஆட்டோ புரோக்ராம் செய்வது போல சில,
முக்கியக் கதா பாத்திரங்களை காட்டும்போதே படம் வித்தியாசமான முயற்சி என்பது புரிந்து விடுகிறது .
செட்டாப் பாக்ஸ் என்பதை செட்டப் பாக்ஸ் என்று எழுத்தில் போடும்போதே , அது எழுத்துப் பிழை அல்ல படம் முழுக்க செட்டப் களின் கதைகள் இருக்கும் என்பது புரிந்து விடுகிறது .(அதே நேரம் சில இடங்களில் தமிழை ஒழங்காக எழுதாமல் சொதப்பியும் இருக்கிறார்கள் . ற் என்ற எழுத்துக்குப் பிறகு க் என்ற எழுத்து வராது .
ஆனால் படத்தில் பல இடங்களில் சேர்த்து எழுதுகிறார்கள் )
அன்புள்ள அரிப்பு , பேன்ட் சட்டை கேங்கு. வேஷ்டி சட்டை கேங்கு, என்று ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வித்தியாசமான பெயர் வைத்திருப்பதும் சிறப்பு .
(அதற்காக படம் முழுக்க யாருக்காவது பெயர் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள் )
ராவாக மண்ணும் மனமும் புழுதியும் அழுக்குமாக இருக்கும் டோன் இந்தப் படத்தின் பெரும்பலம். ஷாட்களுக்கான கேமரா மூவ்மென்ட்களில் அவ்வளவு நேர்த்தி . சபாஷ் .
படத்தில் ஒரே பிரேமில் இரண்டு பிரேம் வரும் காட்சிகளில் வித்தியாசமா கேமரா கோணங்கள் , வித்தியாசமான ரேஞ்ச் கள் மூலம் மரபுகளை உடைத்து இருக்கும் விதம் அசத்தல் .
நடிக நடிகையர் எல்லாரிடமும் ஒரு வித சட்டையாரான அப்நார்மல் நடிப்பை வாங்கிய விதத்தில் படத்துக்கு,
தனியொரு குணாதிசயம் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் இயக்குனர்கள் நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜத்தின் ஷங்கர் ராஜ்
முக்கியமாக இரண்டு நண்பர்களோடும் வாழும் மேரி கதாபாத்திரம் .. கொஞ்சம் அசந்தாலும் அருவருப்பாகி இருக்கும் .
(இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்சி, அபிஷேக் பச்சன், விக்கி நடிக்கும் ‘மன்மஸியான்’ படத்தின் மொத்தக் கதையே இப்படிதான் .ஒரு பெண் ஒரே நேரத்தில் ரெண்டு பேரைக் காதலிப்பது .ஆனால் இங்கே இந்தப் படத்தில் அதையும் தாண்டி…..!
அதுவும் அவள் எப்போதும் லாலி பாப்புடன் இருப்பதன் மூலம் இயக்குனர்கள் சொல்ல வரும் ‘குறி’யீடு… …)
அந்த கதாபாத்திரத்துக்கு இயக்குனர்கள் கொடுத்த இன்னசன்ட் தன்மையாலும் அதே இன்னசன்ட் உணர்வோடு நடித்த ஆஷிகாவாலும் தப்பிக்கிறது அந்த கதைப் போக்கு .
சில காட்சிகளில் மிக சிறப்பான நுணுக்கம் . உதாரணமாக எழுத்தாளன் மனைவியின் தாடைச் சத்தம் .
தோஷ் நந்தாவின் இசை, காட்சிகளுக்கேற்ற உணர்வை சரியாக வெளிப்படுத்துகிறது . உதாரணமாக ஏழைச் சிறுமிகளின் ஏரியாவில் ‘ரிச்’சான பின்னணி இசை. படத் தொகுப்பு ஒன்று படு வேகமாக இருக்கிறது . இல்லாவிட்டால் படம் மிக மெதுவாக இழுப்பதற்கு காரணமாக இருக்கிறது.
சில முக்கியமான விசயங்களைக் கூட , அரை நொடி கால் நொடிக்குள் சொல்லிவிட்டு…. இன்னொரு பக்கம் சிரித்தால் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள் .
கார் ஓட்டினால் ஓட்டிக் கொண்டே இருக்கிறார்கள் . அடுத்தவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து விட்டு,
காரணமே இல்லாமல் ரொம்ப நேரம் சும்மாவே நிற்கிறார்கள். (பில்டப்பாம்) சில சமயம் நாம் ஜென் நிலைக்குப் போக வேண்டி உள்ளது
திரைப்படக் கல்லூரியில் படிக்க எடுக்கப்படும் படங்களுக்கு இதெல்லாம் ஒகே . ஆனால் வணிக ரீதியிலான தமிழ் சினிமாவுக்கு சரி வராது .
படத்தின் கடைசியில் எதிர்பாராத என்ட்ரி கொடுத்து ‘அட!’ போட வைக்கிறார் சிம்ரன் .
இது போன்ற பல்வேறு கதைப் போக்குகளை அமைத்து ஒன்றோடு ஒன்று சந்திக்கும் இடங்கள் மூலம் அசத்தும் பாணியிலான திரைக்கதைகள்,
உலக சினிமாக்களில் பிரபலம் . சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு நார்வே படம் அதில் உச்சம் தொட்டது .
(அதில் அநியாயமாக சம்பாதித்த பணத்தை தொலைக்க நினைக்கும் ஒருவனின் பணம் , மிக அவசியத் தேவைக்காக பணம் இன்றி தவிக்கும்,
ஒரு நல்லவனின் கைக்கு யாருமே எதிர்பாராத ஒரு கணத்தில் போய்ச் சேரும் நேரம் படம் பார்ப்பவரை மெய் சிலிர்க்க வைக்கும் .)இந்தப் படத்தில் இயக்குனர்கள் நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜத்தின் ஷங்கர் ராஜ் இருவரும் ஒரு சேஃப்டிக்கு செட்டப் சமாச்சாரங்களாக போட்டு நிரப்பி இருந்தாலும்,,
இதில் அந்த ஏழைச் சிறுமியின் நேசத்துக்கு சோதனை வரும் இடம் நெகிழ வைக்கிறது . அது தொடர்பான கிளைமாக்சும் அபாரம்.
சண்டை போட்டுக் கொள்பவர்கள் எப்போது பிரிவார்கள் என்பது குறித்த வசனம் சிறப்பு என்றால் ,
கடைசியில் அதை வைத்து உறவின் மீதான நம்பிக்கையை உணர்த்துவது சிறப்பான டைரக்ஷன்.
ஓடு ராஜா ஓடு … வித்தியாசமான ஓட்ட முயற்சி !