எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரிக்க, ‘திலகர்’ துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா பிரேம்,
ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ, ஜே.டி சக்கரவர்த்தி ஆகியோர் நடிக்க,
இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’.
தியேட்டருக்குப் போய் நேரடியாக பார்க்கலாமா ? பேசலாம் .
முகம் மறைத்து அல்லது ஹெல்மெட் அணிந்து பைக்கில் சென்று சாலையில் செல்லும் பெண்களிடம் ,
சங்கிலி பறிக்கும் ஏராளமான திருடர்களை வைத்து தொழில் நடத்தும் ஒரு கிரிமினல் (மைம் கோபி).
ஒருநிலையில் அவர்களிடம் மாட்டிக் கொண்டு , அவர்கள் கேங்கிலேயே வேலைக்கு சேர்கிறான் இளைஞன் ஜப்பான் (துருவா)
மேலும் பயிற்சி எடுத்து பொதுமக்களிடம் இருந்து சங்கிலி பறிக்க ஆரம்பிக்கிறான் .
அவனோடு ஆரம்பத்தில் சண்டை போட்ட பாரதி என்ற பெண் (ஐஸ்வர்யா தத்தா) அவனை காதலிக்கிறாள் .
ஜப்பானின் அம்மா பார்வதி (சரண்யா) மருத்துவமனையில் சீரியசான நிலையில் இருக்கிறார் . நடு ரோட்டில் ஜப்பாம் ஒரு பெண்ணிடம் சங்கிலி பறித்ததை பார்த்தும் அவனை காட்டிக் கொடுக்காமல் இருக்கிறாள் பாரதி.
இன்னொரு ஏரியாவில் சங்கிலி பறிப்புத் திருடர்கள் கேங் வைத்து நடத்தும் இன்னொரு தாதாவின் (அருள்தாஸ் ) கீழ் வேலைசெய்யவும் ஜப்பான் போகிறான்
அதே நேரம் சங்கிலி பறிப்பு கொள்ளை சம்பவங்களை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரோடு ( ஜே.டி சக்கரவர்த்தி ) அவனுக்கு தொடர்பு இருப்பதை பாரதி பார்த்து விடுகிறாள் .
அது பற்றி அவள் இன்ஸ்பெக்டரிடம் கேட்க , ஜப்பானுக்கு ஒரு மனைவி (அஞ்சனா பிரேம்) இருந்த கதையை அவர் சொல்கிறார் . அவள் பெயரும் பாரதி .
சங்கிலி பறிப்பு தாதாக்களை இயக்கும் மகா கிரிமினலாக அகர்சந்த் செட்டி என்ற நகைக்கடை அதிபரே (ராதாரவி) இருக்கிறார் .
இந்நிலையில் சங்கிலி பறிப்பு தாதாக்கள் , ஜப்பானை சந்தேகப் பட்டுக் கொலை செய்ய முயல அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ?
சங்கிலி அறுப்பு , செயின் பறிப்பு, பிக் பாக்கெட் திருடர்கள் பற்றிய விழிப்புணர்ச்சியை கொடுக்கும் படம் !
ஒரு நாட்டின் பொருளாதாரமே தங்கத்தை வைத்தே நிர்ணயிக்கப் படுவது .. விலை உயர்ந்தது தங்கம் .. அது என்றும் விலை குறையாத ஒன்று என்ற உண்மை ..
எனவே சில நொடிகளில் பறித்து விடுவதன் மூலம் பெரும் பணம் கிடைத்து விடுவது… உழைப்பில் நம்பிக்கை இல்லாத இளைஞர்களின் சோம்பேறித்தனம் ..
இவையே செயின் பறிப்புக் குற்றங்கள் அதிகம் ஆகக் காரணம் என்பதை தெளிவாகச் சொல்கிறது படம் . வயதான பெண்கள் , கையில் குழந்தை வைத்திருக்கும் பெண்கள் , சேலை அணிந்த பெண்கள்என்று லிஸ்ட் கொடுத்து,
இவர்கள் எல்லாம் பிக்பாக்கெட் ஆட்களின் குறி ; எனவே இவர்கள் சாலையில் கவனமாக போக வேண்டும் என்பதை சொல்வது விழிப்புணர்ச்சி.
(காரணம் வயதான பெண்களால் போராட முடியாது , கையில் குழந்தை வைத்திருக்கும் பெண்களுக்கு எதிர்பாராத ஆபத்து சமயத்தில்,
குழந்தையைக் காப்பதில்தான் கவனம் போகும் , சேலை அணிந்த பெண்கள் அந்த மாதிரி சமயத்தில்
அலங்கோலமான ஆடை விலகலை சரி செய்வதில்தான் கவனம் செலுத்துவார்கள்; துரத்திக் கொண்டு ஓட முடியாது )
அதே போல இரவு நேரங்களில் காவலர் இல்லாத ஏ டி எம் களுக்கு பெண்கள் தனியாக போகக் கூடாது என்பதை,
எல்லாவற்றையும் விட , செயின் பறிப்பு குற்றத்தை சட்டம் கொள்ளையாக மட்டுமே பார்க்கிறது .
ஆனால் அதில் ஒரு கொலை முயற்சிக் குற்றமும் இருக்கிறது (கழுத்தறுபட்டு.. கழுத்து உடைந்து.. கீழே விழுந்து மண்டை உடைந்து … )
– என்பதை சட்டம் ஏன் பார்ப்பது இல்லை என்ற இயக்குனர் ராகேஷின் கேள்வி அபாரம் .. அற்புதம் …
இது போன்ற விஷயங்களில்தான் ஒரு கலைஞன் சமூக அக்கறை விசயத்தில் பூரணத்துவம் பெறுகிறார் . பாராட்டுகள் இயக்குனர் ராகேஷ் .
செயின் பறிப்புக் குற்றங்களுக்கு பல காரணம் இருக்கலாம் .
ஆனால் சில நகைக்கடைகளே , தங்களிடம் நகை வாங்குவோர் பற்றி சமூக விரோதிகளுக்கு தகவல் கொடுத்து நகையை திருட வைத்து ,
உடனே அவற்றை உருக்கி, அன்று இரவே தங்கக் கட்டிகளாக மீட்டுக் கொண்டு , இந்த குற்றத்தை செய்வோருக்கு
‘செய்கூலி’யை மட்டும் தருகின்றன என்று படம் சொல்லும் விஷயம் பதைபதைக்க வைக்கிறது . பிரம்மிப்பு !
படம் முழுக்க வசனங்களில் நல்ல நல்ல விசயங்களை சொல்கிறார் ராகேஷ் . பாராட்டுகள்
அம்மா பெயர் பார்வதி . கிட்டத்தட்ட அதே ஒலி ஒத்திசைவில் வரும் பெயரான பாரதி என்ற பெயரில் மனைவி அமைவது ,
அதே பாரதி என்ற பெயர் கொண்ட பெண் அவனைக் காதலிப்பது என்று இயக்குனர் வைத்திருக்கும் விஷயங்கள் நுணுக்கமான ரசனைக்கு தீனி .
துருவா, ஐஸ்வர்யா தத்தா இயல்பாக நடித்துள்ளனர் . அஞ்சனா பிரேம் அழகு நடிப்பு . அவ்வளவாக யதார்த்தமில்லாத கேரக்டரை தனது நடிப்பால் ரசிக்க வைக்கிறார் சரண்யா .
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு இருட்டுத் திருட்டு உலகங்களை நெருக்கமாக உணரவைக்கிறது .
சத்தம் கொஞ்சம் ஜாஸ்தி என்றாலும் அச்சு இசை அச்சா . ஷான் லோகேஷ் படத்தொகுப்பும் நன்று .
என்ன பிரச்னை என்றால் , அடுத்து அடுத்து என்ன என்ன வரும் என்பதை, ஆரம்பம் முதல் கடைசி வரை,
தெளிவாக முன் கூட்டியே தெரிந்து விடும் அளவுக்கு, திறந்து காட்டிக் கொண்டு திரிகிறது திரைக்கதை.
இடைவேளையில் ஹீரோ யார் என்பதை இயக்குனர் சொல்கிறார் . ஆனால் படம் துவங்கிய பத்தாவது நிமிடத்திலேயே அவர் யார் என்பது புரிகிறது .
ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் இருக்கும் அம்மாவைக் காட்டும்போதே மொத்தக் கதையும் புரிந்து விடுகிறது .
நல்ல விசயங்களை சொல்லும் வசனங்களிலும் கொஞ்சம் நாடகத் தன்மை மற்றும் எக்ஸ்ட்ரா நீளம் .
போலீஸ் அதிகாரி மனைவி ஹீரோவை அடையாளம் காட்டும் காட்சி , அடுத்து போலீஸ் ஹீரோவைப் பற்றி விசாரிக்கும் முக்கியக் காட்சி , இவற்றில் லாஜிக் புண்ணாகிக் கிடக்கிறது .
சரி.. போலீஸ் அதிகாரி மனைவி காயப்படும் அளவுக்கு நிஜமாகவே சங்கிலியை பறிக்கிறானே ஹீரோ…
அந்த பெண் கீழே விழுந்து கழுத்து அறுபட்டு , கழுத்து எலும்பு உடைந்து , அல்லாது கீழே விழுந்து மண்டை உடைந்து செத்தால் ..
அது ஹீரோவுக்கும் , திரைக்கதைக்கும் இயக்குனருக்கும் ஓகேவா ? என்ன கொடுமை சார் !
எனினும் படம் முடியும்போது நம்மால் சமாதானம் ஆகிவிட முடிகிறது . ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி வருகிறது .
அந்த அளவுக்கு மேக்கிங்கில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார் இயக்குனர்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன .. கருத்தழகு.. கதையழகு …. !