படை(த்) தலைவன் @ விமர்சனம்

வி ஜே கம்பைன்ஸ் சார்பில் சார்பில் ஜகன்னாதன்  பரமசிவம் தயாரிக்க, புரட்சிக் கலைஞர்- மக்கள் நேசர்-  விஜயகாந்தின் மகன் தம்பி  சண்முகப் பாண்டியன் கதாநாயகனாக நடிக்க, கஸ்தூரி ராஜா, முனீஸ்காந்த், யாமினி சந்திரசேகர், யூகி சேது , அருள் தாஸ் , கே ஜி எஃப் ராம் , ரிஷி ரித்விக், ஸ்ரீஜித் ரவி , ஏ.வெங்கடேஷ் நடிப்பில் பார்த்திபன் தேசிங்கு எழுத்தில் அன்பு இயக்கி இருக்கும் படம்.

பொள்ளாச்சி பகுதியில் பானை வனையும் தொழில் செய்யும் ஒருவரின் (கஸ்தூரி ராஜா) மகன் (சண்முகப் பாண்டியன் ) மகள் ஆகிய மூவர் அடங்கிய குடும்பம்,  யானை ஒன்றையும்  வளர்க்கிறது . பெரியவரின் இறந்து போன மனைவி உயிரோடு இருந்த காலத்தில்  குட்டியாக  வந்து சேர்ந்த யானை அது. 

வட்டிக்கு கடன் வாங்கி இருந்த பெரியவர் , ஒரு நிலையில் வட்டி அசல் என்று சிக்க, யானையை வைத்து சம்பாதிக்க வேதனையோடு முடிவு செய்கிறது குடும்பம் 

சினிமா ஷூட்டிங் , கல்யாணம் , திருவிழா என்று இவர்கள் முயற்சி செய்ய, ஒரு மலையாள சினிமா புரடக்ஷன் மேனேஜர் யானையை வேறு காரணத்துக்காக விலைக்குக் கேட்கிறார் .  பெரியவர் குடும்பம் மறுக்க, அயோக்கியர்கள் ஒன்று சேர்ந்து யானைக்கு மதம் பிடிக்க வைத்து,  அதை இனி வீட்டில் வைத்து  வளர்க்க முடியாத சூழலை உருவாக்கி , முகாமுக்குக் கொண்டு போய் , மலையாள வனத்துறை அதிகாரிகளை வைத்து, அந்த  யானையை வட  இந்தியாவுக்கு கடத்துகின்றனர் . 

அந்தக் காரணத்துக்குப் பின்னால் ஒரு வட இந்தியக் காடு , அங்கு வாழும் தமிழர்கள் , வழிபாட்டு முறையில் திடீரென வடக்கர்கள் ஏற்படுத்தும் மாற்றம் அதன் பின்னால் இருக்கும்  பலி  என்று ஒரு சூழல் உருவாக , ஏன் எதற்கு எப்படி?  நடந்தது என்ன என்பதே படம் .

யானையை வைத்து ஒரு படம் . அதுவே ஒரு படத்துக்கு நல்ல பலம்தான் . 

பொள்ளாச்சி பசுமை, வட இந்தியக் காடுகள் என்று அட்டகாசமான லொக்கேசன் . 

யானை உள்ள படத்தில் யானை போல  பலமானவரோ என்று நினைக்கும் அளவுக்கு…   உயரம், உடல்கட்டு,  தோற்றத்தில் சண்முகபாண்டியன் . சண்டைக் காட்சியில்  இவர் காண்டா மிருகத்தின் கழுத்தை உடைத்தாலும் நம்பலாம் . 

ஒரு சாதாரண விஷயத்தைக் கூட ஊழலில் பெருத்த அரசு அலுவலர்கள் எப்படி அலைக்கழிக்கிறார்கள் என்று கொஞ்சம் சொல்வதில் விஜயகாந்த் வாசனை . 

ஒரு காட்சியில் அவரைக் கொண்டு வருகிறார்கள் . 

மனிதனுக்கு வைத்தியம் பார்ப்பதை விட மிருகங்களுக்கு வைத்தியம் பார்க்கும் தொழில் புனிதமானது என்ற அந்தப் பார்வை அருமை . வாழ்த்துகள் 

குடும்பப் பெரியவராக கஸ்தூரி ராஜா . போகப் போக சில காட்சிகளில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் எட்டிப் பார்த்தாலும்,  ஒரு நிலை வரை அருமையாக நடித்திருக்கிறார் . கண்களை அவர் பயன்படுத்தும் விதம் அருமை. 

அவர் மட்டுமே கேரக்டராக இருக்கிறார் . மற்ற எல்லாம் வசனம் பேசுகிறார்கள் . பேன்சி டிரஸ் காம்பெட்டிஷன் அல்லது கரும்புள்ளி செம்புள்ளி குத்தியது போல நிற்பது என்று இருக்கிறார்கள் . 

படத்தில் கதாநாயகி என்று சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று குழப்பும் அளவுக்கே வருகிறார் யாமினி சந்தர். இவர் சிவாஜியை வைத்து பல மாபெரும் படங்களையும் எம் ஜி ஆரே இன்னொரு முறை யோசிக்கத் தயங்கிய அன்பே வா படத்தையும் எடுத்த அற்புத இயக்குனர் ஏ சி திருலோகச்சந்தரின் பேத்தியாம்  

படத்தின் ஆகப் பெரும் பலவீனம் திரைக்கதையே .

அப்படி பணத்துக்கு கஷ்டப்படும் குடும்பம் எதற்கு யானையை இப்படி வளர்க்கிறது என்பதற்கு ஒரு சரியான காரணம்,  கதை இல்லை .

சும்மா ஓவர் லேப்பில் ஒரு ஷாட்டில் சொல்வது யானைப் பசிக்கு சோளப் பொறி . 

அட்லீஸ்ட் எம் ஜி ஆர் நடிப்பில் எழுபதுகளில் வந்த  நல்ல நேரம் படத்தில் ஆரம்பத்தில் ஒரு பிளாஷ்பேக் சொல்வார்களே .. அந்த அளவுக்காவது  ஆரம்பத்திலேயே  யானை வந்த கதையை ஒரு குட்டி பிளாஷ்பேக் ஆக சொல்லி படத்தை துவங்கி இருந்தாலாவது இவ்வளவு பலகீனம் ஏற்பட்டு இருக்காது 

படைத் தலைவன் என்பதுதான் சரியான தமிழ் . அது ஏழேழுத்துதான். எட்டெழுத்து ஆபத்து என்ற செண்டிமெண்ட் பயமும் இல்லை. அப்புறமும் எதற்கு ஒற்றெழுத்தை ஒற்றி எடுத்துத் தூக்கி எறிந்து ‘ படை தலைவன் ‘  என ஆறெழுத்தில் பெயர் வைத்தார்கள் என்றும் தெரியாது. 

ஒருவேளை ஆறெழுத்து அதிர்ஷ்டம் என்று நினைத்து இருக்கலாம் .  அதோடு ஆறு உருப்படியான சீன்களாவது  திரைக்கதையில் இருக்க வேண்டும் என்றும் நினைத்து இருக்கலாம்.  

படம் துவங்குவதற்கு முன்பு விஜயகாந்த் பேசிய அரசியல் பேச்சுகள் , சினிமா வசனங்கள் அடங்கிய ஒரு தொகுப்பை காட்டுகிறார்கள். மனசு கனத்துப் போகிறது . 

அடுத்த சில நிமிடங்களில் படத்தில் ஒரு காட்சி வருகிறது. 

சண்முகப்பாண்டியன் பானை வனைந்து கொண்டு இருக்கிறார் . ஒருவர் பானை வாங்க வந்து தயாராக இருக்கும் பானைகளைத்  தட்டிப் பார்க்கிறார். உடனே தங்கை கதாபாத்திரம் அண்ணன் சண்முகப்பாண்டியனைப் பார்த்து , “பாருண்ணா  .. இவரு தட்டித் தட்டிப் பாக்குறாரு ” என்று சொல்கிறது . உடனே சண்முகப் பாண்டியன் ” சும்மா ஆராய்ச்சி பண்ணாம வாங்கிட்டுப் போய்யா…” என்கிறார் . 

அதுவே சண்முகப் பாண்டியன் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் இருந்தால் இப்படியா சொல்லி இருப்பார்?
 

“பானை வாங்கும்போது யாரா இருந்தாலும் தட்டிப் பாத்து நல்லா இருந்தாதான் மா வாங்குவாங்க . இதுக்காக கோபப் படக் கூடாது ” என்று தங்கை கதாபாத்திரத்திடம் சொல்லி இருப்பார்.  அந்தப் புரிதல் கூட இல்லாத வசனங்கள் .

ஆரம்பத்தில் நிறைய போதாமைகள் இருந்தாலும் , யானையை மீட்க அரசு அலுவலகங்களில் நடக்கும் அநியாயங்களை சொல்லும் ஏரியா , படம் நல்லா இருக்கும் போல என்று நம்பிக்கை வந்தது . ஆனால் அவர்களுக்கு அது பயமாக இருந்திருக்கும் போல . ஒரு நிலையில் அதை அம்போ என விட்டு விட்டு எங்கேயோ புழுதி , பொடி , நெடி என்று கிளம்பி விட்டார்கள். 

விஜயகாந்த் தோன்றும் அந்தக் காட்சி … 

அந்த ஒரு காட்சி நன்றாக இருந்திருந்தால் ஓர் உணர்வெழுச்சியையாவது சாதித்திருக்கலாம் .

முக நூல் வீடியோக்களில் செலவே இல்லாத ஏ ஐ டூல்கள் மூலம் குழந்தை விஜயகாந்த் ,ஸ்கூல் போகும் விஜயகாந்த் , வெள்ளை தாடியோடு முதுமையில் கனிந்த விஜயகாந்த் என்று அவர்கள் போடும் போட்டோக்கள் வீடியோக்களே வாய் பிளக்க வைக்கிறது . அந்த அளவுக்குக் கூட இதில் … அதுவும் விஜயகாந்தின் மகன் நடிக்கும் படத்தில் …இல்லை என்பது  வேதனை . இதற்கு கோட் படத்தில் வந்த விஜயகாந்த் எவ்வளவோ மேல். 
சண்முகப் பாண்டியன் கொஞ்சம் நடிக்கவும் முயல வேண்டும் . 

விஜயகாந்தின் மகன் என்ற அன்பில் ஒன்று சொல்லலாம் 

ஒன்று அப்பாவின் இமேஜ்  அடிப்படையில் போக வேண்டுமா ? இல்லை முற்றிலும் வேறு மாதிரி முயல்வதா? சண்முகப் பாண்டியனுக்கு இந்த இரண்டு வழிகளே உண்டு .

அப்பாவின் பாணியில் போக வேண்டும் என்றால் நல்ல கதைகள் திரைக்கதைகள், வசனங்கள் இவற்றை சரியான ஆட்கள் மூலம் பெற வேண்டும் . அவற்றில் நவீனத்தனமையும் வேண்டும் .இதில் அதிகம் பர்ஃபார்மன்ஸ் பற்றிய கேள்வியும் வராது .  சண்டைக் காட்சியிலும் கூட சும்மா மாங்கு மாங்கு என்று அடிக்காமல்,  விஜயகாந்த் எப்படி குதித்து எம்பி சுவற்றில் காலை வைத்து சுழன்று உதைத்து லேண்ட் ஆகி நிற்பாரோ .. அப்படி எதாவது ஒரு தனி பாணியைப பிடிக்க வேண்டும் . 

இல்லை என்றால் முற்றிலும் வேறு கதைகள் , வேறு பாணி, என்று தனிப் பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும் 

பொன் ராம் படத்தில் அவர் நடித்து முடித்து விட்டார் . அது  வெற்றி பெறட்டும் 

அடுத்து சசிகுமார் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் குற்றப் பரம்பரை படமோ , ஏ ஆர் முருகதாஸ் இயக்கவிருப்பதாக சொல்லி  இருக்கும் ரமணா -2 படமோ , தம்பி சண்முகப் பாண்டியனுக்கு   தன் பாதையை முடிவு செய்ய உதவட்டும் என்று வாழ்த்துகிறேன்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *