,ஏ.வெங்கடேசன், ரவிமரியா, சமுத்திரக்கனி, டி.பி.கஜேந்திரன், ஐந்து கோவிலான், மாரிமுத்து, இப்படத்தை எழுதி தயாரித்து இயக்கியுள்ள இயக்குநர் இசக்கி கார்வண்ணன் ,ஒளிப்பதிவாளர் வீரக்குமார்,,
நடிகைகள் நமீதா, சாக்ஷி அகர்வால், ‘பகிரி’ நாயகன் பிரபு ரணவீரன், நாயகி ஷார்வியா, ஆதிரா, ரேகாநாயர், படத் தொகுப்பாளர் அத்தியப்பன் சிவா,
‘ஹரிதாஸ்’ வசனகர்த்தா ஏ.ஆர் வெங்கடேசன். ஆகியோரும் கலந்துகொண்டனர்.
புதிதாகத் தேர்வான தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியனின் நிர்வாகிகள் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் A.ஜான்,பொருளாளர் விஜய முரளி, துணைத்தலைவர் வி.கே. சுந்தர்,
இணைச்செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ‘பகிரி’ படக் குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டனர்.
இசக்கி கார்வண்ணன் பேசும் போது-
” ஒரு காலத்தில் செருப்பு தைக்கிற தொழிலைக் கேவலமாக நினைத்தார்கள். சிலர்தான் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள்.
ஆனால் இன்று ஆதிக்க சாதி, ஆண்ட சாதி எல்லாரும் அந்த தொழிலைச் செய்கிறார்கள். காரணம் பணம்.
ஆனால் விவசாயம் செய்ய யாரும் முன்வருவது இல்லை. காரணம் வருமானமில்லை. கவனிப்பாரில்லை.
விவசாயிகள் ‘இந்தப் பிழைப்பு எங்களோடு போகட்டும் நீ போய் வேறு பிழைப்பு பார் ‘ என்று தங்கள் பிள்ளைகளை வெளியே அனுப்பி விடுகிறார்கள். விவசாயம் செய்வது கேவலமாகப் பார்க்கப் படுகிறது.
ஒரு தந்தை தன் மகனை விவசாயி ஆக்க நினைத்து வளர்க்கிறார். மகனும் விவசாயி ஆக ஆசைப்படுகிறான்.

ஆனால் ஒருவன் என்னவாக வேண்டும் என்பது அவன் நினைத்தால் மட்டும் போதுமா?
அவன் என்னவாக வேண்டும் என்று சமுதாயமும் நினைக்க வேண்டுமல்லவா? அந்தப் போராட்டமே ‘பகிரி’ படம்.
இப்படத்துக்கு ஆதிமுதல் அந்தம் வரை உறுதுணையாக இருந்தவர் ஒளிப்பதிவாளர் செழியன் அவர்கள். அவர்தான் எனக்கு இப்படத்துக்கு நாயகன்,
ஒளிப்பதிவாளர் எல்லாரையும் கொடுத்து உதவினார் அவர் தந்த அங்கீகாரமே படத்துக்குப் பெரிய வெற்றி” என்றார்.
விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி பேசும்போது,
“நாங்கள் இந்தப் ‘பகிரி’ இயக்குநர் இசக்கி கார்வண்ணன் எல்லாருமே அண்ணன் சீமான் என்ற ஒரே ஆலமரத்திலிருந்து வந்த விழுதுகள்.
இப்படத்தின் இசையமைப்பாளர் கருணாஸ் ஜல்லிக்கட்டு பற்றி சட்டசபையில் பேசியிருக்கிறார். மகிழ்ச்சி.

இன்று தமிழ் சினிமா குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறது. சிறு படங்களுக்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள்தான்.
ஆனால் படம் பார்த்து விமர்சனங்கள் பத்திரிகைகளில் வருவதற்குள் திரையரங்கில் படம் இருப்பதில்லை. படத்தை தூக்கி விடுகிறார்கள்.
இன்று சினிமாவை யாரும் பார்க்காமலில்லை. திருட்டு விசிடியில் கூட காசு கொடுத்துதான் சினிமா பார்க்கிறார்கள்.
இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யக்கூட காசு கொடுத்துதான் பார்க்கிறார்கள். திரையரங்கில் போய்ப் பார்க்க ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் செலவாகிறது.
ஏன் எல்லாரையும் திரையரங்கு போய் படம் பார்க்கக் கட்டாயப்படுத்த வேண்டும் ? கள்ளச் சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் வந்தது போல் திருட்டு விசிடியை ஒழிக்க அதையும் சட்டப்பூர்வமாக்கிவிடுங்கள்.
அதனால் வரும் வருமானத்தை ஏன் இழக்க வேண்டும்? திரையரங்கிற்கு மக்கள் வரவில்லை என்கிறார்கள். சினிமா டிக்கெட்டை விட பார்க்கிங் கட்டணம் அதிகம்.
பார்க்கிங்கிற்கே 250 ரூபாய் செலவாகிறது. .பின் திரையரங்கிற்கு எப்படி வருவார்கள்?
தியேட்டர்காரர்கள் தங்கள் கேண்டீனில் வியாபாரம் இல்லை என்ற காரணத்துக்காக படத்தைத் தூக்கி விடுகிறார்கள். தியேட்டர் படம் பார்ப்பதற்கா ? இல்லை கேண்டீன் வியாபாரம் செய்வதற்கா ?
நாங்கள் கதையை தேர்வு செய்து நடிக நடிகையருக்கு சம்பளம் கொடுத்து படம் எடுப்பது எதுக்கு? இவர்கள் கேண்டீனில் பாப்கார்ன் விற்பதற்கா ?
இவர்கள் கேண்டீன் வியாபாரம் செய்வதற்கா தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் எடுக்கிறார்கள்?
தயாரிப்பாளர்கள் இவ்வளவு கஷ்டப் பட்டு படம் எடுக்கிறோம். ஆனால் காலைக் காட்சிக்குக் கூட முழுதாக கூட்டம் வரவில்லை. ஆனால் அதில் நடித்த நடிகர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்கிறார்.
முதல் நாள் காலைக் காட்சிக்கு தியேட்டரை நிரப்ப முடியாத நடிகருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் எதுக்கு ?
இவை எல்லாமே மாறவேண்டும். திரையரங்கிற்கு படம் கொடுக்கும் போது ஏன் சதவிகித அடிப்படையில் வியாபரம் செய்ய மறுக்கிறார்கள்?” என்றார்.
இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது,
” ‘பகிரி’ என்கிற இந்த தலைப்பே பிடித்திருந்தது. இன்று தமிழை அதன் வளத்தை அறியாமல் , நமது மொழியை . இரண்டே பக்கம் உள்ள நாணயத்தைப் போல தட்டையானதாக பயன்படுத்தி வருகிறோம்.
ஆங்கில வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் மாற்றுச் சொல் தேடாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறோம்.சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள் இன்று மறைந்து கொண்டிருக்கின்றன.
அவற்றையெல்லாம் மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சியில்தான் கம்ப்யூட்டர் கணிப்பொறி ஆனது. கணினி என்று அழகாக மாறியது.

நான் ‘அங்காடித் தெரு’ என்று தலைப்பு வைத்த போது பலருக்கும் புரியவில்லை. சிலர் அங்கன் வாடியா என்று கூட கேட்டார்கள். ஆனால் அது சட்ட சபையிலேயே பேசப்பட்டது.
பாண்டிபஜார் என்பது சௌந்தர பாண்டியன் அங்காடி எனப் பெயர் மாற்றும் அளவுக்குப் போனது.
அப்படித்தான் நான் ‘வெயில் ‘ என்று தலைப்பு வைத்தபோதும் புரியவில்லை. தயாரிப்பாளர் ஷங்கர் சாரே ”’மழையை ரசிக்கிற நம்ம ஊரில் வெயில் என்ற தலைப்பு எல்லாரையும் போய்ச் சேருமா/” என்றார்.
ஒரு கலைஞன் சமூகத்துக்கு புதிய புதிய சொற்களைத் தர விரும்புகிறான். அதை ஏற்றுக் கொண்டால் தினச் சொல்லாக புழங்கும் சொல்லாடலாக மாறும். அந்த வகையில் இந்தப் ‘பகிரி’ மாறும்.
படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். படம் விவசாயம் பற்றிப் பேசுகிறது. ஓர் இயக்குநருக்கு எந்த அளவுக்கு கேளிக்கையூட்டும் பொறுப்பு இருக்கிறதோ ,
அந்த அளவுக்கு இந்த சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது சொல்ல வேண்டும். நன்மை செய்ய வேண்டும் என்கிற சமூகப் பொறுப்பும் இருக்கவேண்டியது முக்கியம்.
விவசாயம் என்பது ஒரு சாதி. அது இன்று அழிந்து வருகிறது.
சுதந்திர இந்தியாவை விவசாய நாடாக ஆக்குவதற்குப் பதிலாக தொழிற்சாலை நாடாக மாற்ற ஜவஹர்லால் நேரு என்று முடிவு செய்தாரோ, அன்றே விவசாயம் இறந்துவிட்டது.
கோகோ கோலா ஒரு லிட்டர் தயாரிக்க 12 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. என்ன கண்டு பிடித்தாலும் தண்ணீரை யாரும் கண்டுபிடிக்க முடியாது.
விவசாய நிலங்கள் அடுக்குமாடிக் கட்டிடங்களாகின்றன. விவசாய நிலம் விற்று வெளிநாட்டு வேலைக்குப் போய்க் கொண்டு இருக்கிற சூழல்.
சீமான் தேர்தல் அறிக்கையில் விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. விவசாயத்தை மீட்டெடுக்கத்தான் வேண்டும்.
காரை இறக்குமதி செய்யலாம். அரிசியை இறக்குமதி செய்யலாமா?
பிரதமர் மோடி நாடு நாடாகப் போகிறார். இங்கே வாருங்கள் என்கிறார். இங்குள்ள வளமெல்லாம் பறிபோகிறது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா உணவுக்காகக் கையேந்துகிற நிலை வரும்
இது பற்றி எல்லாம் சினிமாவில் சொல்வது தாக்கம் ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ‘பகிரி’ சமூக நோக்கோடு வரும் எளிமையான படம்.
இப்போது மராத்தி, கன்னடத்தில் எல்லாம் நல்ல படங்கள் வருகின்றன. வசூலை அள்ளுகின்றன. எளிமையான கதை, எளிமையான மனிதர்களிள் வாழ்க்கை என்றும் வெற்றி பெறும்.
கன்னடத்தில் ‘திதி’ என்று 24 வயது இளைஞன் எடுத்த படம் வியப்பூட்டுகிறது.
இங்கே சமூக நோக்கோடு வரும் படங்கள் எப்போதாவது தான் வருகின்றன. ‘காக்கா முட்டை’ க்குப் பிறகு எதுவும் வரவில்லை. எல்லாமே கூமுட்டைகளாகவே இருக்கின்றன.
விவசாயத்தைப் போலவே தமிழ்ச் சினிமாவும் நொறுங்கிக் கொண்டு இருக்கிறது. பத்து கதாநாயகர்கள் படங்கள் தவிர எதுவும் ஓடுவதில்லை.
இந்த நல்ல படம் ஓட வேண்டுமே என்று கவலையாக இருக்கிறது.
நல்ல கலைஞர்கள் நாட்டின் சொத்து .அவர்களைக் கொண்டாட வேண்டும். ஆனால் இந்த சமூகம் கொண்டாட மறுக்கிறது. அசோகமித்ரனைக் கொண்டாட மறுக்கிறது
ருத்ரய்யாவைக் கொண்டாட மறுக்கிறது. ருத்ரய்யா இறந்தது யாருக்குமே தெரியவில்லை.
சேரன் போன்ற கலைஞர்களை கண்ணீர் விட்டுக் கெஞ்சிக் கதற வைக்கிறது. கமர்ஷியல் படமெடுத்து காசு பண்ண நினைக்காமல் நல்ல படம் எடுக்கும் கனவுடன் கிளம்பி வந்தோம்.
இன்று அந்தக் கனவு நொறுங்கி கொண்டிருக்கிறது.” என்று குமுறிய வசந்த பாலன்,
‘பகிரி’ குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.







