லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து எழுதி இயக்கி இசக்கி கார்வண்ணன் முக்கிய வேடத்திலும் நடிக்க, விமல் சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் நடிப்பில் வந்திருக்கும் .படம் .
மலைப்பாங்கான இடத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் என்ற ஊரில் வெள்ளைக்காரர்கள் வந்தபோது வேலை வாய்ப்பு, வசதி இவற்றைக் கொடுப்பதன் மூலம் கிறிஸ்தவ மதத்தை பரப்ப , ஒரு பக்கம் கிறிஸ்தவத்துக்கு மாறியவர்கள் ஊரின் ஒரு பகுதியை யாக்கோபுரம் என்று மாற்றிக் கொள்கின்றனர். இன்னொரு பக்கம் முஸ்லிம்களாக மாறியவர்கள் சுல்தான்புரம் என்று மாற்றிக் கொள்கின்றனர்.
இப்படிப் பிரிந்தவர்களின் அண்ணன் குடும்பம் ஒரு மதம் , தங்கை குடும்பம் ஒரு மதம் என்று மாறிப் போக , அதன் பாதிப்புகளால் பகை வளர்கிறது .
ஒரு நிலையில் எந்த ஊரில் கல்யாணம் நடந்தாலும் அவர்களை ஒரு முஸ்லிம் இளைஞன் (மனோஜ்குமார்) இந்துப் பெண்(சேஷ்விதா ராஜூ) ஆகியோரின் உதவியோடு பரமசிவன் என்பவனும் (விமல்) பாத்திமா என்ற பெண்ணும் தண்ணித் தொட்டியில் முக்கி முக்கி கொலை செய்கிறார்கள் .
ஏன் எதற்கு ? அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படம்.
மத மாற்றத் தடைச் சட்டத்தை ஆதரிக்கும் படம். இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு காரணமாக மாறியவர்கள் குடும்பத்தில் நடக்கும் மதம் சார்ந்த ரகளைகள், ஒரு நிலையில் வரும் குற்ற உணர்ச்சி , குழப்ப மரணம் ஆகியவற்றை பேசி மதம் மாறுவதை விமர்சனம் செய்யும் படம்.
நியாயம்தான் .
‘விமல் எம்ஜிஆர் மாதிரி . எல்லா படத்திலும் ஒரே மாதிரி நடிப்பார்’ என்றார் உடன் படம் பார்த்த ஒரு நண்பர். . நான் அதை ஏற்கவில்லை. இது தப்பான ஒப்பீடு .
நாடோடி மன்னன் படத்தில் அந்த மன்னன் கேரக்டர், எங்கள் தங்கம் படத்தின் கதாகாலட்சேப அய்யர், படகோட்டி படத்தில் வளையல்காரர் , நினைத்ததை முடிப்பவன் வில்லன் கேரக்டர், நீரும் நெருப்பும் பட வில்லன் , பெற்றால்தான் பிள்ளையா படத்தில் மகனின் வருங்காலம் பற்றிக் கனவு காணும் காட்சி, மாட்டுக்கார வேலன் உள்ளிட்ட எத்தனையோ படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் புகுந்து விளையாடி அசத்தி இருப்பார் எம்ஜிஆர். . உண்மையில் அவர் நல்ல நடிகரும் கூட. அவருக்கு அமைந்த இமேஜ் இன்னொரு வகையில் அவரது கைகளைக் கட்டிப் போட்டது.
ஆனால் விமலிடம் அதெல்லாம் நடக்கவே நடக்காது . கடைசி பாடலில் சாயா தேவி கொடுத்து இருக்கும நடிப்பில் 1.000000009 சதவீதம் கூட கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் விமல். . வெடி வைத்தால் கூட நீங்கள் விமலிடம் இருந்து நடிப்பைக் கொண்டு வர முடியாது.
சாயாதேவி சிறப்பு . தோழியாக வரும் சேஷ்விதா ராஜு குணாதிசயச் செறிவு கொண்ட முகம், துள்ளல் நடனம் (அந்த இடுப்புக் கொஞ்சம மேக்கப் போட்டு இருக்கக் கூடாதா இயக்குனரே?), நல்ல நடிப்பு என்று … கவர்கிறார் .
வழக்கம் போல ஒளிப்பதிவில் கலக்கி இருக்கும் சுகுமார் வில்லனாக நடித்தும் இருக்கிறார் . கெட்டப் நன்றாக இருக்கிறது. ஆனால் முகத்தில் வராத நடிப்பை டப்பிங் குரல் மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள். பொருந்தல.
அருமையான லொக்கேஷன்கள் மனம் கவர்கின்றன.
மண்மொழி பேசி அசத்தி இருக்கிறார் எம் எஸ் பாஸ்கர் . அவரை இன்னும் கொஞ்ச நேரம் பேச வைங்கப்பா என்று படம் பார்க்கும்போதே விரும்புகிறது மனம்.
நடிப்பு என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார் ஆதிரா. பாத்து , BP ஏறிடப் போவுது.
தீபன் சக்ரவர்த்தி இசையில் பாடல்கள் இனிமை மற்றும் தெளிவு . ஆனால் பழைய பாணியில் இருப்பது ஒரு குறை.
காமெடி என்ற பெயரில் படுத்தி எடுக்கிறார்கள் . பல காட்சிகளில் மற்ற நடிகர்கள் நடித்துக் கொண்டு இருக்க , அதை நன்றாக வேடிக்கை பார்க்கிறார் நடிகரும் இயக்குனருமான இசக்கி கார்வண்ணன் , பிரேமுக்குள்ளேயே நின்றபடியே! . எங்கே அப்படியே ஒன்மோர் சொல்லி அதையும் அப்படியே படத்தில் சேர்த்து, கொண்டு வந்து காட்டி விடுவாரோ என்ற பயமே வந்தது . நல்லவேளை அப்படி எல்லாம் நடக்கவில்லை.
படத்தின் இடைவேளையில் டுவிஸ்ட் என்று ஒன்றை வைத்து இருக்கிறார்கள். ஆனால் அது முதல் காட்சியிலேயே பச்சைப் பிள்ளைக்குக் கூட புரிந்து விடும் அளவுக்கு அப்படி ஒரு புகை மண்டலம் மற்றும் நடிப்பவர்களின் புசுபுசு முறைப்புகள்இடைவேளையில் ஓப்பன் பண்ணி ஆடியன்சை சும்மா அலற விட வேண்டும் என்று ஒரு விசயத்தில் விரும்பிய இயக்குனர் , ஆரம்பக் காட்சிகளிலேயே அதை ஓட்டை போட்டுக் காட்டி விடும் பரிதாபத்தை என்ன சொல்ல?
உண்மையில்…. வசதி, சலுகைகள் காட்டியும் மிரட்டியும் மத மாற்றம் நடந்தது என்ற உண்மையை ஆழமாக, ஒரு சார்பின்றி சொன்னாலே அது அதிர வைக்கும் . ஆனால் இந்தப் படத்தில் அந்ப் பிரச்னையின் உள்ளே இறங்கவே இல்லை. கரையில் நின்று கொண்டு குட்டி குட்டி நண்டோடு ஓடிப் பிடித்து விளையாடி இருக்கிறார்கள் .
அதே நேரம் இன்னொரு பக்கம் , இந்து மதத்தின் சாதி ஆதிக்கம் காரணமாக விரும்பி மதம் மாறியவர்களும் உண்டு . அதையும் பேசுவதுதானே நியாயம் ?
அதே போல , ” கிறிஸ்தவன் , முஸ்லிம் இல்லாத எல்லோரையும் இந்து என்று போட்டுக் கொடு”என்று வெள்ளைக்காரனிடம் கெஞ்சி சட்டம் போட வைத்து கோடிக்கணக்கான மக்களை ‘இந்து’ என்று மாற்றியதும், ஒரு மத மாற்றம்தானே?
முருகன் என்பவர் தமிழ்க் கடவுள். ‘ஸு ப்ரமண்யன்’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு நல்ல பிராமணன் என்று பொருள் . அப்போ தமிழ்க் கடவுள் முருகனை சுப்பிரமணியன் என்று பிராமணராக மாற்றியதும் மத மாற்றம்தானே . அப்போ யாக்கோபுரம் உருவாவதற்கு முன்பே அங்கே இருந்த முருகன்புரத்தை சுப்பிரமணியபுரம் என்று மதம் மாற்றியது யார்?
யாக்கோபுரம் உருவாக்கப்பட்டது தப்பு என்றால் சுப்பிரமணியபுரம் உருவாக்கப்பட்டதும் ஒரு மத மாற்றம்தானே ?
அதைப் பற்றியும் பேச வேண்டும் அல்லவா?
ஓ.. அதை எல்லாம் சொன்னால் FUND வராது இல்ல? அப்பச் சரி.. அப்பச் சரி…
மொத்தத்தில் பரமசிவன் ஃபாத்திமா …. கரகாட்டக்காரியும் ‘நாதஸ்’ஸும்