தக் லைஃப் @ விமர்சனம்

ராஜகமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட்  மூவீஸ் தயாரிப்பில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா , அபிராமி, நாசர் நடிப்பில் கமல்ஹாசனோடு சேர்ந்து எழுதி, மணிரத்னம் இயக்கி இருக்கும் படம் . 

தக் லைஃப் என்பது ஹிப் ஹாப் கலாச்சாரத்தில், குறிப்பாக கேங்ஸ்டர்கள் பற்றிய ராப் இசையில் உருவான சொற்றொடர். ஒரு பக்கம் வன்முறை அல்லது சட்டவிரோத வாழ்க்கை முறையில் அடித்துக் கொள்பவர்களில் ஜெயிப்பவர்களைக் குறிப்பிடும் வார்த்தைகள் இவை  என்றாலும் இன்னொரு பக்கம் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து தங்களைத் தக்க வைத்துக் கொண்டு வென்றவர்களையும்  இது குறிப்பிடும் . 
 
‘காயல்பட்டினத்தை சேர்ந்த ரங்க ராய சக்திவேல் நாயக்கர்’ (அனேகமாக பல தலைமுறைகளாக,  பல ஜென்மங்களாக,  சாதி மத மொழி இன, காக்கசாய்டிய – காங்கோ சேர்ப்பு,  வேற்று கிரக உயிரி  கலப்புத் திருமணத்தில் உருவான நபராக இருக்கும்) என்பவர்,   ‘தென்பாண்டிச் சீமையிலே..” காலத்திய ஒரு தக்கு  அவர் மனைவி ஜீவாவும்  (அபிராமி… அபிராமி..) காயல்பட்டினத்துக்காரிதான்.  (அனேகமாக மதக் கலப்பு மட்டும்  இருந்திருக்கலாம்) 
 
தம்பியின்  அளவுக்கு தான் வளரவில்லையே என்று தக்குவின் அண்ணனுக்கு (நாசர்) பொறாமை . “ஞான் ஒரு வல்லிய மலையாளியாக்கும்” என்று சொல்லிக் கொள்ளும் நபர் ஒருவர் (ஜோஜு ஜோர்ஜ) தக்குவின் முக்கிய கையாள். 
 
ஒருமுறை  தக்கு,  ஒரு தாக்கு சண்டையில் போலீசிடம் மோதும்போது பேப்பர் போடும் ஒரு சிறுவன் , அவன் தங்கையான சிறுமி இருவரின் அப்பாவான ஒரு பேப்பர் போடும் நபரை , தக்குவோ அல்லது அவர் கூட்டத்தில் ஒருவரோ  சுட்டுக் கொன்று விட, அவனை தக்கு தூக்கி வந்து காப்பாற்றுகிறார் . அதுக்கு அவர் சொல்ற காரணம் எல்லாம் வேணாம். அழுதா துக்கம். .
 
“என் தங்கையைக் காணோம்” என்று பையன் சொன்ன உடனே , தக்கு நினைத்தால் தன்னிடம் இருக்கும் அத்தனை கோடானு கோடி , கோட்டானு கோட்டி,  அடியாட்களை விட்டு அந்தத் தங்கையை கண்டு பிடித்து  இருக்க முடியாதா? முடியும் . அப்படிக் கண்டு பிடித்து அப்பவே “இந்தாப்பா உன் தங்கை . ரெண்டு பேரும் போய் பேப்பர் போட்டுப் பொழைச்சுக்குங்க ” என்று பத்திவிட்டு இருந்தால் … 
 
இந்தக் கதை இல்லை. இந்தப் படம் இல்லை. புரமோஷன் இல்லை.சிவராஜ்குமார் இல்லை. கண்ட கண்ட நாய்களின் கடிக்கு  எல்லாம் கமல் ஆளாக  வேண்டிய தலை எழுத்தும் இல்லை. 
 
ஆனா இந்த காயல்பட்டின  ‘ரங் ராய் சக்திவால் நாய்க்கர்ங்.’ இருக்காரே … அவர்  நிஜமான  தக்கு இல்லையே. . அது சும்மா  தொக்கு , சொல்லப் போனால்  டொக்கு. 
 
பேப்பர் போடும் பையன் அமரன் பெருசா வளர்ந்து , நாயக்கரின் மகனாக, அவரது ஒரே மகளுக்கு அண்ணனாக , சிம்பு எனப்படும் எஸ் டி ஆர் எனப்படும் சிலம்பரசன் ஆகிறான் .  ரங் ராய் சக்திவால் நாய்க்கர் எல்லா பொறுப்புகளையும் அமரனிடம் ஒப்படைக்க அதில் அண்ணனுக்கும் மலையாள தளபதிக்கும் பொறாமை 
 
மனைவியோடு கருத்தொருமித்துக் காவிய வாழ்க்கை வாழும் நாயக்கரய்யாவுக்கு இந்திராணி ( திரிஷா) என்ற ஒரு  இடுப்பு மெலிந்த தொடுப்பு உண்டு. (அப்போ ஜீவா இடுப்பு எப்படி என்று கேட்கக் கூடாது. ‘மிகுதி’யை வெள்ளித்திரையில் காண்க)  
 
அங்கே அடிக்கடி போய் அஞ்சாறு நாள் தங்கி ஊறிக் கிடந்து விட்டு அப்படியே வந்து மனைவியின் முகம் புதைத்து காவியக் கண்ணீர் சிந்தி கழுத்தைக் கவ்வி முத்தம் கொடுப்பார் நம்ம  ரங் ராய் சக்திவால் நாய்க்கர்.. 
 
பொறாமை கொண்ட அண்ணனும் மலையாள தளபதியும் அமரனிடம் ”உன் அப்பாவைக் கொன்றதே நாயக்கரய்யாதான் “என்று பொய்யையோ உண்மையையோ எந்தக் கருமத்தையோ சொல்லி போட்டுக் கொடுக்க , மணிரத்னம் சொன்ன ஒரே காரணத்துக்காக அதை அப்படியே நம்பும் அமரனும் அவர்களோடு சேர்ந்து கொள்ள , 
 
காயல்பட்டினத்துக்காரி திருச்செந்தூரை விட்டு விட்டு கணவனை , நேபாளம் காத்மாந்து கைலாஷ் யாத்திரைக்கு அனுப்ப , 
 
உடன் போகும்  நாயக்கரின் அண்ணன், தளபதி, ஆசை வளர்ப்பு மகன் எல்லோரும் சேர்ந்து  ரங் ராய் சக்திவால் நாய்க்கர்ரை,  வானத்தின் அடிவயிறை சொரிந்து விடும் உச்சி மலையில் இருந்து , குத்தி, சுட்டு உதைத்துத் தலைகீழாக தள்ள, 
 
பதினேழு முகடுகள் கொண்ட பள்ளத் திட்டுகள் , முப்பது பனிச்சரிவுகள், அம்பத்தி ரெண்டு பனிப் புயல்கள் , முன்னூத்தி சொச்சம் மரக் கிளைகள் இவற்றில் எல்லாம் மோதி உடைந்து குத்திக் கிழித்துக் குதறியும் உயிர் பிழைக்கிறார் . பின்னே?  அவர்தான் HIGH BREEDக்கு எல்லாம்  HIGHEST BREED ஆச்சே. ஆவாரா ஹும்? சாவாரா?  ம்ஹுஹும் ! 
 
திருக்கடையூரில் எண்பதாம் கல்யாணம் கொண்டாட வேண்டிய வயதில் திபேத்திய சாமியார்களிடம் தற்காப்பு சண்டைக் கலைகள் கற்றுக் கொண்டு பழி வாங்க வருகிறார் நாயக்கர்  . (அப்போ இதற்கு முன் இவருக்கு சண்டை போடவே தெரியாதா? அப்புறம் எப்படி தக்குவாக இருந்தார் என்று எல்லாம் கேட்கக் கூடாது . மூச் !இது இரண்டு மேதைகள் ஒன்று சேர்ந்து எழுதிய கதை.) 
 
அதற்குள் அப்பனின் தொடுப்பை மகன் சூடிக் கொள்கிறான் ( கதை எழுதும் முன் கண்ணதாசனின் வனவாசம் படித்து இருப்பார்கள் போலும்)  . அந்தப் புள்ளையும் சும்மா குந்துனாப்புல கூடவே வந்துடுது. (சாரி, ‘ ந்’துதான் போடுவேன்.நீங்க இந்துன்னு படிச்சுத் தொலையாதீங்க) )
 
பழிவாங்க வந்த பிறகு என்ன நடந்தது? அமரனின் தங்கை கிளைமாக்சில் வந்து  எப்படி தென் பாண்டிச் சீமையிலே பாட்டின் தீம் மியூசிக் இல்லாமல்  அழுதாள்  என்பதே இந்த தக் லைஃப். 
 
இப்படியாக நாயகன், செக்கச் சிவந்த வானம் இவற்றோடு விஜய் ஆண்டனியின்  பிச்சைக்காரன் 2 படத்தையும் சேர்த்தே எடுத்திருக்கிறார்கள் . 
 
படத்தின் முதல் பிளஸ் கமல்ஹாசன் என்ற மகா நடிகனின் அட்டகாசமான நடிப்பு . சின்னச் சின்ன அசைவுகள், பேசும் கண்கள், துடிக்கும்  உதட்டோரம், கழுத்தில் உள்ள செயினை கை விரலால் ஆட்டியபடி லேசாக உடலை அசைத்து அதையே நடனமாக்கும்  கெத்து .. பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  
 
என்ன ஒன்று….  அல்  பசினோ வும் கூடவே சேர்ந்து நடித்திருக்கிறார் .  இந்தியாவிலேயே ஒரிஜினல் ஆர்கானிக் நடிகன் என்றால் அது சிவாஜி கணேசன் மட்டும்தான் என்று மீண்டும் நிரூபிக்கப்படுகிறது .
 
ஷாட் வைப்பது முதற் கொண்டு மற்ற தொழில் நுட்பங்களை சரியாகப் பயன்படுத்துவதில் எப்போதுமே மணியான ரத்தினம்தான் மணிரத்னம். இந்தப் படத்திலும் அதற்குக் குறைவில்லை. அவரது ஆவேசம் மிக்க லொக்கேஷன் தேடல் இதிலும் ஜெயிக்கிறது . காரில் அமர்ந்தபடி ரிவர்வியூ மிரரில் கமல் பார்க்க , அதை துளைக்கும் துப்பாக்கிக் குண்டு , அந்த ஒலி வடிவமைப்பு எல்லாம் அசத்தல்  
 
கோபத்தில் மனைவி கணவனை ”யாரு நீங்க?”  என்று கேட்பதும் பின்னால் நிஜமாகவே அப்படி கேட்க வேண்டிய சூழல் வருவதும் அதை மனதில வைத்தே முதல் காட்சியில் கோபத்தை யாரு நீங்க என்ற கேட்கும்படி எழுதி இருப்பதும். … அந்த இடத்தில் அடடே நம்ம மணிரத்னம் சார்.
 
டெல்லி அரசியலை ஒரு குத்துக் குத்தும் வசனம் , நான் மலையாளி என்று படத்தில் வசனமாக சொல்லிக் கொள்ளும் ஜோஜு கதாபாத்திரம் வஞ்சகமும் நம்பிக்கைத் துரோகமும் செய்வது போலக் காட்டுவது  போன்ற விசயங்களில் மணிரத்னத்தின் சமூக அரசியல் பார்வை வழக்கம்போலவே ஜீனியஸ்தனம். சூப்பர். 
 
ஆனால் தனது பாணிக்குக் கொண்டு வருகிறேன் என்ற பெயரில் சிம்புவையே சூம்பிப் போக வைத்துக் காட்டி இருப்பதைத்தான் ஏற்க முடியல. 
 
அதுவும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை வைத்து ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று,  சிம்பு திரிஷா பேசிக் கொள்ளும் காட்சியை வைத்து இருப்பதெல்லாம்…. !  இந்தக் காட்சியை எடுத்தது மணிரத்னமா இல்லை அவரது அட்மின் யாராவதா?   என்ற கேள்வியை எழுப்புகிறது. கொடுமை. 
 
பதினைந்து வருடத்துக்கு முந்தைய ஷகீலா நடிக்க வேண்டிய கேரக்டரில் திரிஷா . அடக்  கடவுளே . ஜானு எல்லாம் உங்களை மன்னிக்க மாட்டாள் திரிஷா.
 
நாசர் நடிப்பு நச் . 
 
ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பு எல்லாம் மணிரத்னத்தின் இயக்கத்துக்குப் பக்க பலமான ஆயுதங்கள். 
 
நல்ல கதையைக் கொண்டு வருவோரின் படங்களுக்கு எல்லாம் ஓ பி அடிக்கும் ஏ ஆர் ரஹ்மான் ,  வெட்டிக் கொட்டுவதற்கு என்றே இந்தப் படத்தில் பாடல் போட்டு இருக்கிறார் . 
 
முத்தமழை பாடலில் சின்மயி பாடிய வெர்ஷன்  ஆகா ஓகோ பேஷ் பேஷ் என்று சிலர் ஆடுவதற்குப் பின்னால் ஓர் அரசியல் இருக்கிறது . ஆனால் தீ யின் குரலில் இருக்கும் அந்த இன்னசன்ஸ் தன்மையில்தான் அந்தப் பாடலின் ஆன்மா இருக்கிறது 
 
ஜிங்குச்சா பாடலில் ”பள்ளம் பர்ர்ர்ச்சாச்சு …”, என்று மெட்டுக்கு அப்பால்  சிதறி ஓடும் வரிகளை எழுதியதன் மூலம் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு இருக்கிறார் பாடலாசிரியர் கமல்ஹாசன் . 
 
அஞ்சு வண்ணப் பூவே பாடலை எல்லோரும் ஆகா ஓகோ என்கிறீர்கள் . ஆனால் எனக்கு அதில் எங்கடி போற…? நில்லுடி வாரேன்ன் ..” என்பது போல ஒரு ஆத்திர அவசர பதட்டம்தான் தெரிகிறது. இம்மெச்சூரிட்டி. .  
 
நாயகனில் நாசர் நடித்த கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் , கார்த்திகா கதாபாத்திரம் போன்ற பாத்திரத்தில் ஐஸ்வர்ய லக்ஷ்மி, டினு ஆனந்த போன்ற கதாபாத்திரத்தில் சிம்பு , பிளாஷ்பேக்கில் புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது போல அதே மாதிரி கெட்டப்பில் நாயகன் படத்து இளம் வயது கமல் தோற்றம் என்று …
 
நாயகன் படத்தை சகதியில் புரட்டி அடித்து சதிராடி இருக்கிறார்கள் . ”ஏழு பேருக்கு நல்லது பண்ணனும்னா என்ன வேண்ணா பண்ணிக்கோ…”  என்று வசனம் ஏதும் வருமோ என்று பயந்து கொண்டே இருந்தேன் . நல்லவேளை  வரல. 
 
அட , என்னை விடுங்க  .. ஒரு புளோவில் ஏ ஆர் ரகுமான் , ” ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ங் ..ங்..ங்.. ங்.. “என்று ஆரமபித்து இருந்தால் இளையராஜா சும்மா விட்டிருப்பாரா என்ன ?
 
கமல் மணிரத்னம் இருவருக்கும் ஒரே வார்த்தை … 
 
இனிமேல் நீங்கள் இருவரும் ஒரு படத்துக்கு ஒன்று சேர்ந்தால் அது , ” நாயகனா ..? அப்டீன்னா..? “என்று கேட்கும்படி இருக்க வேண்டும் . முடியாது  என்றால் ஒன்று சேரவே சேராதீர்கள் . ப்ளீச் ! 
 
ஏனென்றால் எங்களுக்கு நாயகன் அவ்வளவு பிடிக்கும் .  நீங்கள் இருவரும் சேரும் படங்களின் GOD FATHER அதுவாகத்தான் இருக்கும். அதை மீறி அதே பாணியில் இன்னொன்றை உருவாக்க உங்களாலும் முடியாது. 
 
மொத்தத்தில் தக் லைஃப்….. தக் DEATH .. இல்லை இல்லை . THE DEATH OF A THUG . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *