இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில் கிஷோர், கலையரசன், வேல ராம மூர்த்தி , ஆண்டனி, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் அண்ணனுக்கு ஜே படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கத்தில் ஆகா தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் பேட்ட காளி வலைத் தொடரின் முதல் நான்கு பகுதிகள் எப்படி இருக்கு?
பார்க்கலாம்.
ஏழை மக்கள் அதிகம் உள்ள ஒரு கிராமத்தினர் பக்கத்தில் உள்ள வசதியானவர்கள் நிறைந்த கிராமத்து பெரிய மனிதர்களின் வயலில் பல காலம் வேலை செய்தும் ஒரு நிலையில் ஏழை மக்களுக்கு உரிய நல்லதுகளைச் செய்யாமல் அவர்களை விரட்டி விடுகின்றனர் வசதிப்பட்ட ஊர் மக்கள்.
சொந்த ஊருக்கு வந்து அவர்கள் வறுமையில் உழன்ற நிலையில் அந்த ஊர் நபர் ஒருவன்( கிஷோர்) காட்டுக்குள் தான் கண்ட ஒரு கொல்லேறு மீது பயமில்லாமல் தாவி அதை அடக்கி ஊருக்குள் கொண்டு வந்து விடுகிறான் . தலைமை மாடு எங்கிருக்குமோ அங்கேயே இருக்கும் குணம் உள்ள அந்த காட்டு மாட்டுக் குழு தங்கள் தலைவரான கொல்லேறு இருக்கும் ஊருக்குள் வந்து விடுகின்றன . அந்த மாடுகளை வைத்து அந்த ஊர் வளம் அடைகிறது .
அந்த ஊர் மக்கள் மீண்டும் தலை நிமிர்ந்ததில் பணக்கார ஊரின் பணக்காரப் பெரியவருக்கு ( வேல ராமமூர்த்தி) பொறாமை . எனவே ஏறுதழுவுதல் என்கிற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தங்கள் ஊர் மாடுகளை அணையக் கூடாது என்று மாடுகளை வைத்துப் பிழைக்கும் ஊர் மக்களுக்கு அவர் தடை போடுகிறார் . ஊருக்குள் மாடுகளைக் கூட்டி வந்து ஊரை வளப்படுத்திய நபரின் அக்காள் மகன் ( கலையரசன்) மீறி போட்டியில் பணக்காரரின் மாட்டை அடைக்க , இரண்டு ஊருக்கும் பகை வருகிறது . உயிர்ப்பலி நிகழ்கிறது
இதில் பணக்காரரின் உறவுகளின் கையும் இருக்கிறது .
பணக்காரரின் விசுவாசமான வேலையாள் ஒருவன் காதலித்த பெண்ணை அவர் இரண்டாம் தாரம் ஆக்கிக் கொள்கிறார் . அந்த விசுவாசமான வேலைக்காரன் செத்துப் போகிறான்
இந்த நிலையில் பணக்காரர் வீட்டில் மாடுகளே தரிக்காமல் போய் ஜல்லிகட்டுக்கு அந்த வீட்டில் இருந்து மாடு அனுப்புவதே நின்று போகிறது.
ஆனாலும் அவரது மகன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெல்வோருக்கு கொடுக்க வேண்டிய பரிசுகளை வாங்க பணம் தருகிறார் . செத்துப் போன விசுவாசமான வேலையாளின் தங்கை ( ஷீலா ராஜ்குமார்) ஆற்றில் அடித்து வரப்பட்ட ஒரு காளைக் கன்று முகத்தில் அண்ணனைப் போலவே தழும்பு இருப்பதைப் பார்த்து அதை எடுத்து காளி என்று அண்ணன் பெயர் வைத்து வளர்க்கிறாள்.
அந்த மாடு வளர்ந்து ஜல்லிக்கட்டில் யாரிடமும் தோற்காத காளையாக நிற்கிறது . இது வரை வெளியாகி இருக்கிறது தொடர் படத்தின் பலம் ஜல்லிக்கட்டுப் பின்னணி, லொக்கேஷன், அதற்கு இயக்குனர் வைத்து இருக்கும் ஷாட்கள், நடிக நடிகையர் தேர்வு அவர்களின் நடிப்பு இவையே . வேல்ராஜின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயண இசையும் படத்துக்கு kanam சேர்க்கின்றன .
நல்லவன் கெட்டவன் ஏழை பணக்காரன், யாராக இருந்தாலும் தமிழ் இனம் மாடுகளை எப்படி தெய்வமாக போற்றி மதித்து வணங்கி பராமரித்து வாழ்கிறது என்பதை மித சிறப்பான நெகிழ்வாக ஆழமாக காட்சிப் படுத்தி இருக்கும் விதம் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் போராடும் பீட்டா போன்ற அமைப்புகளின் முகத்தில் விழும் செருப்படியாகவே இருக்கிறது .
தன் நாக்கில் உள்ள உணவை அப்படியே மாட்டின் நாக்கில் வைத்து ஒருவர் கொடுக்கும் காட்சி அதன் உச்சம். . மாட்டுக்கு வாயுப் பிடிப்பு வந்தால் அதைக் கூடக் கண்டு பிடித்துக் குணமாக்கும் காட்சி எல்லாம் அபாரம்.
ஜல்லிக்கட்டுக்கு மாடுகளை தயார் செய்யும் விதம் , இதுவரை சினிமாவில் காட்டப் படாத வாடிவாசலின் உள்பக்கக் காட்சிகள் யாவும் ராஜ்குமார் வேல்ராஜ் கூட்டணியால் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.
என்னதான் கிஷோர் நல்ல நடிகர் என்றால் இது போன்ற மண் சார்ந்த படைப்புகளில் அவர் சொந்தக் குரலில் பேசும் ‘ஏலியன் தமிழ்’ ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.
வெப் சீரிஸ் என்ற வசதியை எடுத்துக் கொண்டு நீள நீளத்துக்குக் காட்சிகள் போவதை தவிர்த்து இருக்கலாம் . ஒரு சினிமாவில் காட்சிகள் எப்படி அமைய வேண்டுமோ அதை கூர்மையில் காட்சிகள் கொண்ட திரைக்கதை அமைத்தால்தான் இது போன்ற படங்கள் உலகம் முழுக்க இறங்கும்