கதை எழுதி,இயக்கி, ஏலியன் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்தில் கணேஷ் சந்திரசேகர் நடிக்க ரஷ்ய நடிகை கெசன்யா பான்ஃபெரோவா மற்றும் பலர் நடித்துள்ள படம்.செஞ்சி
பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள். வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது.அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதில் ஏதோ ரகசியம் இருப்பதாகப் படவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை நாடுகிறாள்.
அதில் ஒரு புதையலுக்கான ரகசிய குறியீடுகள் உள்ளதாக அவருக்குத் தெரிகிறது.சோபியாவுடன் இணைந்து தேட ஆரம்பிக்கிறார்.ரகசிய குறிப்புகளை வைத்துக்கொண்டு கிடைத்த குறியீடுகளின்படி தேட ஆரம்பிக்கிறார்கள். புதையல் வேட்டைக்கான பாதையில் ஐந்து தடயங்கள் உள்ளதாகக் குறிப்புகள் கூறுகின்றன. ஐந்தையும் ஒவ்வொன்றாக அடைந்து ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று இறுதியில் அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் செஞ்சி படத்தின் கதை.
இன்னொரு பக்கம் ஐந்து சிறுவர்கள் ஊருக்குள் அடிக்கும் லூட்டி, தீவிரவாதிகள் என்று சில கதைப் போக்குகள்.கணேஷ் சந்திரசேகர் வசன உச்சரிப்பில்அவர் இன்னமும் தேறிவர வேண்டும்.ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் தொடர்ந்து வருவதைத் தவிர்த்திருக்கலாம்.வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக ரஷ்ய நடிகை கெசன்யா நடித்துள்ளார். இயக்குநரை விட அந்த நடிகை நன்றாக நடித்து உள்ளார்.
தங்கப் புதையலைக் கண்டுபிடித்த பிறகு சிறுவர்கள் பாடும் இது தங்கம் என்கிற பாடல் படம் பார்க்கும் சிறுவர்களைக் கவரும்..
படம் முழுக்க அட்டகாசமான லொக்கேஷன்கள் பெகல்லார் காட்டுப்பகுதியும் மற்றும் செஞ்சியும் கவர்கிறது லொகேஷன் ஒரு கதாபாத்திரம் போலவே அமைந்து விடுகிறது.
சிறுவர்கள் அடிக்கும் லூட்டிகள் சம்பந்தப்பட்ட நீளமான காட்சிகளுக்கு சற்றுக் கத்திரி போட்டிருக்கலாம்.அதே சமயம் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் முதிர்ச்சி தெரியவில்லை.மேலும் சில காட்சிகளை நேர்த்தியாக்கி இருந்தால் படம் மேலும் மேம்பட்டிருக்கும்.
நமது பழங்கால வரலாற்று உணர்வை வரவழைக்கும் முயற்சி என்ற வகையில் பாராட்டலாம்.