
பி டி எஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்க ,
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற நல்ல படத்தைக் கொடுத்த ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கி இருக்கும் படம் போக்கிரி ராஜா .
அதீதமாக கொட்டாவி விடுவதன் காரணமாக கூட வேலை செய்யும் அனைவரையும் கொட்டாவி விட வைத்து சோம்பலை உருவாக்கி விடும் காரணத்தால் ,
தான் பார்த்த ஐ டி நிறுவன வேலையையும் காதலியையும் இழக்கிறான் சஞ்சீவி (ஜீவா). அதே ஊரைச் சேர்ந்த, சற்றே சைக்கோவான அடிதடி தாதா கூலிங் கிளாஸ் குணா (சிபிராஜ்) .
சஞ்சீவிக்கு புதிதாக ஒரு வேலை கிடைக்க அங்கே பணியாற்றும் சுனிதா(ஹன்சிகா மோத்வானி)வுக்கு சுத்தமான இந்தியா திட்டத்தின் மீது அதீத ஆர்வம் . அதன் உச்சமாக தண்ணீர் லாரியில் போய்,
பொது இடத்தில் சாலை ஓரத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது, தீப்பற்றி எரியும் வீட்டில் தண்ணீரை பீய்ச்சியடிப்பது போல அடித்து விரட்டுவது அவளுக்கு வழக்கம் .
ஆரம்பத்தில் சஞ்சீவிக்கும் சுனிதாவுக்கும் முட்டிக் கொண்டாலும் ஒரு நிலையில் காதல் வருகிறது . சிறுநீர் கழிப்போர் மீது பெருநீர் அடிக்கும் காதலியின் வேலையில் சஞ்சீவியும் பங்கெடுக்கிறான் .
அப்படி ஒரு முறை போகும்போது ,கூலிங் கிளாஸ் குணா மீது தண்ணீர் அடித்து விட, நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்து அவமானப்படும் குணா சஞ்சீவியைக் கொல்லும் முடிவுக்கு வருகிறான் .
அப்போதுதான் சஞ்சீவிக்கு தனது அதீத கொட்டாவி பழ்கக்கத்தின் பின்னணியில் உள்ள ஒரு சக்தியும் தனது பரம்பரை வரலாறும் தெரிய வருகிறது . சஞ்சீவியும் குணாவும் மோதும்போது ,
சஞ்சீவியின் காற்றை செலுத்தும் சக்தி காரணமாக , குணாவின் கூலிங் கிளாஸ் நொறுங்கி , கண் பார்வை பாதிக்கபடுகிறது .
மீண்டும் அவனுக்கு கண்பார்வை வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படம் .
வழக்கம் போல அசால்ட்டான ஜீவா . வில்லனாக கொஞ்சம் வித்தியாசமாக சிபிராஜ் , வழக்கமான இளிப்பு மற்றும் கிளுகிளுப்பு ஹன்சிகா .
வித்தியாசமாக கதை சொல்ல முயன்று இருக்கிறார் ராம் பிரகாஷ் . விளைவாக சில பல இடங்களில் காமெடி கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகிறது .. ஹன்சிகா கிளாமர் காட்டுகிறார் .
டைட்டில் இசையிலும் அத்துவிட்டா பாட்டிலும் இமான் ஆஜர். ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு அழகு
ஹன்சிகாவின் தண்ணி வண்டி வேலையும் அது குணா வரை போவதும் சுவாரஸ்யமான முடிச்சுதான் .ஆனால் அதன் பின்னர் திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும் .
கொட்டாவி நோய்க்கு மூலமான காற்றை உள்ளிழுக்கும் சக்தி என ஐடியா கூட நாவலடி . ஆனால் அதுபற்றிய காட்சிகளை எழுதி படமாக்கிய விதம்தான் போதவில்லை .
சஞ்சீவியின் தாத்தா பெயர் குலசேகர ஆழ்வார் , அவரது அப்பா பெயர் திருமூர்த்தி நாயனார் (நாயனாருக்கு மகனாகப் பிறந்தவர் எப்படி ஆழ்வார் ஆக முடியும்?) ,
அவரின் அப்பா பெயர் ஓரி அதியன் (உண்மையில் ஓரியும் அதியனும் கடையெழு வள்ளல்களில் இரண்டு வேறு வேறு நபர்கள் ) அவருக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் சண்டை ,
அங்கே ஓரி உதயன் பேசும், தேவையே இல்லாத தமிழேன்டா வசனம் என்று ஏகப்பட்ட போங்கு …
போகப் போக சஞ்சீவி குணா சண்டையை சீரியசாக சொல்வதா இல்லை காமெடியாக சொலவதா என்ற இயக்குனரின் குழப்பம் ஒரு சிக்கல் .
காற்றை கட்டுக்குள் அடக்க முயல்வது பற்றிய படத்தில் திரைக்கதையையும் ஒரு ஒழுங்குக்குள் அடக்கி இருக்கவேண்டும் . அது அமையாமல் போனதால் சுரத்துக் குறைந்ததே படத்தின் பெரிய சவால் .
போக்கிரி ராஜா … காமடி கொஞ்சமும் கிளாமர் நெஞ்சமும் !