குடியின் கொடுமையால் சீரழியும் ஒரு குடும்பத்தின் கோரத்தை மனதைப் பிசையும் வகையில் சொல்கிறது .
சொந்த ஊரில் அத்தை மகனையே காதலித்தும் அவன் ஏழை என்பதால் அப்பா வெறுக்க, அவனை நம்பி சென்னைக்கு ஓடிவந்து திருமணம் செய்து கொண்ட, தமிழ் என்ற பெண்ணின் கதைதான் இந்தப் படம் .
டாஸ்மாக் பாரில் வேலை செய்யும் கணவனுக்கு குடிப் பழக்கம் வர, குடி வெறியில் அவன் ஒரு நாள் பார் கலெக்ஷனை எடுத்துக் கொண்டு ஓடிவிட, கடனை அடைக்க பாரில் வேலைக்கு செல்லும் தமிழ் படும் கஷ்டங்கள் …
பணத்தை செலவழித்து விட்டு குடி நோயாளியாக வரும் கணவன் , தனது மகளான கைக்குழந்தையின் விஷக் காய்ச்சலைப் போக்க மருத்துவமனைக்கு செல்வதற்கு , தமிழ் வைத்திருந்த பணத்தை திருடிக் கொண்டு குடிக்க ஓடிவிட,
அந்த ஆங்கிலப் புத்தாண்டு இரவில் குடித்து விட்டு சாலையெல்லாம் ஹேப்பி நியூ இயர் சொல்லிக் கொண்டு வரும் கணவனுக்கு,
தமிழும் அவளது கைக் குழந்தையான சுடரும் வைத்திருக்கும் பரிசுதான் இந்த புத்தாண்டு பரிசு .
நெஞ்சைப் பதற வைக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் , தமிழ் தேசியத் தலைவர் பழ.நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ் , நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், தமிழ் உணர்வாளர் திருச்சி வேலுச்சாமி , இயக்குனர் சேகர், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, புதிய பார்வை ஆசிரியர் மா. நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
திராவிட இயக்க அரசுகளின் மதுக் கடைக் கொள்கையால் தமிழ் நாட்டில் இளம் விதவைகள் அதிகமாகும் கொடுமையை சொன்னார் ராமதாஸ் .
“மதுக் கடைகளை திறந்து தமிழகத்தை அழித்தவர் கருணாநிதிதான் ” என்றார் பழ. நெடுமாறன் .
“அறிஞர் அண்ணாவிடம் மதுக் கடைகளை திறந்தால் நல்ல வருமானம் வரும்’ என்று சிலர் கூறியபோது ‘ சாராய வருமானத்தால் அரசை நடத்துவது என்பது குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணெயை நக்கித் தின்பதுபோல . நான் அதை செய்ய மாட்டேன்’ என்றார். ஆனால் அடுத்து வந்தவர்கள் அந்த வெண்ணையைதான் நக்கித் தின்கிறார்கள் ” என்ற திருச்சி வேலுச்சாமி, ,
தொடர்ந்து , “பள்ளிக் கூட பிள்ளைகளே இப்போது குடிக்கிறார்கள் . இவர்கள் எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு தாம்பத்ய உறவுக்கே தகுதி அற்றவர்களாக இருப்பார்கள் . இதனால் குடும்பங்களில் இனி வரும் காலங்களில் பெரும் குழப்பங்கள் பெருகப் போகின்றன ” என்றார் .
“தமிழ் தேசியத் தலைவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் இந்தக் குடியின் கொடுமையில் இருந்து தமிழ் மண்ணை காக்க முடியும் ” என்றார் வி.சேகர்
“கிரானைட் மற்றும் மணல் குவாரிகளை தனியாருக்கு தாரை வார்க்காமல் அரசே ஏற்று நடத்தினால் அதில் வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு மதுக்கடைகளை மூடி வி டலாம் . ஆனால் தனியார்களின் கமிஷனுக்கு ஆசைப் படும் அரசியல்வாதிகள் அதை செய்யாமல் தமிழ் நாட்டை குடிகார நாடு ஆக்குகிறார்கள் “என்றார் சீமான் .
நிறைவுரை ஆற்றிய இயக்குனர் கவுதமன், “தமிழ் மண்ணுக்கும் இனத்துக்கும் நமை செய்கிற படங்களையே எடுப்பேன் . தமிழனுக்கு இரண்டு நாடுகள் அமையப் போவது உறுதி . ஒன்று தமிழ் நாடு . இன்னொன்று தமிழ் ஈழம் ” என்றார் .
படம் உணர்த்தும் விஷயத்திலும் உருவாக்கப்பட்ட விதத்திலும், மனதை திடுக்கிட வைத்து பின்னர் நடுக்கிட வைத்தது, புத்தாண்டுப் பரிசு குறும்படம் .