நல்ல கதையம்சம் உள்ள படங்களின் நாயகன் , அவை தந்த பலத்தால் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்ற திறமை… இவற்றோடு எப்போது சந்தித்தாலும் விட்ட இடத்தில் இருந்து பழகும் நல்ல மனிதர் விஷ்ணு விஷால் .
தனது தம்பி ருத்ராவை, அவர் கதாநாயகனாகக் களம் இறக்கும் படம் ஓஹோ எந்தன் பேபி . தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோ மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் விஷ்ணு விஷால்
ருத்ரா விஷ்ணு விஷாலின் பெரியப்பா மற்றும் சித்தியின் மகன் . அதாவது ருத்ராவின் அப்பா விஷ்ணு விஷாலின் அப்பாவின் அண்ணன். ஆனால் ருத்ராவின் அம்மா விஷ்ணு விஷாலின் அம்மாவின் தங்கை ( அடடா… இதுலயே ஓர் அட்டகாசமான் கதையா இருக்கே! ) கூட்டுக் குடும்பமாக வளர்ந்ததால் ஒண்ணு விட்ட தம்பி என்று சொல்ல முடியாத அளவுக்கு விஷ்ணு விஷாலின் உடன் பிறந்த தம்பி போல ருத்ரா .
ஆனால் அந்த ஒரு காரணத்தாலேயே ருத்ரா ஹீரோ ஆகி விடவில்லை இயக்குனர் முருகதாசிடம் உதவி இயக்குனராக ஓடி ஓடி உழைத்து வேலை பார்த்தவர் ருத்ரா.
”அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்து ஹீரோ ஆவது சொர்க்கம் . வாழ்த்துகள் ருத்ரா” என்றேன் . புரிதலோடு பளிச் என்று சிரித்தார்.
படத்தின் இயக்கும் கிருஷ்ணகுமார் ராம்குமாரின் பின் கதையிலும் சுவாரஸ்யம் இருக்கிறது . அவர் பெயர் அப்போ எல்லாம் கிருஷ்ணகுமார்தான். அதற்கும் முன்னாள் கிருஷ்ணா . நடிகர் கிருஷ்ணா . ஆட்டோகிராப் படத்தில் சேரனின் மலையாள நண்பராக வருவாரே அவர்தான் . அதன் பின்னர் 5 ஸ்டார் , அறிந்தும் அறியாமலும் படங்களில் நடித்தவர் .
அமேசான் பிரைமில் காணக் கிடைக்கும் மாடர்ன் லவ் சென்னை எந்த தொகுப்புக் கதைத் தொடரில் வந்த காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கும் எமோஜி என்ற படத்தை இயக்கியவர் இவரே .
“அப்புறம் ஏன் இயக்குனராக இவ்வளவு தாமதம்?” என்று கேட்டால், ” இல்ல சார் நான் சும்மா இருக்கல. நிறைய விளம்பரப் படங்கள் பண்ணினேன் . அது ஒரு முன்னூறு இருக்கும் . விளம்பரப் படம் இயக்கினால் நல்ல காசு வரும் . அதுல நிறைய சம்பாதிச்சுட்டேன் . இப்போ சினிமா எடுக்கிறேன் ” என்கிறார் கிருஷ்ண குமார் . இப்படி எல்லாம் ஒப்பனா பேசாதீங்க .. அப்புறம் ED யை அனுப்பி வைப்பார்கள் . இதையே சாக்காக வைத்து அடுத்தடுத்த படங்களில் உங்கள் சம்பளம் குறைக்கப்படவும வாய்ப்பு உண்டு
இயக்குனர் பற்றி சொல்லும் விஷ்ணு விஷால் , ” அப்பவே கிருஷ்ணகுமார் எனக்கு ஒரு நல்ல கதை சொன்னார் . ஆனால் பட்ஜெட் காரணமாக அதை எடுக்க முடியவில்லை. இந்தப் படத்தின் கதை எனக்கு கிடைத்த உடன் கிருஷ்ணகுமாரை இயக்குனராக்க முடிவு செய்தேன் . ” என்றார்
” படத்தின் பேரைப் பார்க்கும்போது எப்படி இத்தனை வருஷம் இந்த டைட்டிலை விட்டு வைத்தார்கள்?’ என்று தோன்றியது . யார் இந்த அற்புதமான டைட்டிலை முடிவு செய்தவர் ? என்றேன் .
ஏனென்றால் காஷ்மீரில் எடுக்கப்பட்ட முதல் தென்னிந்தியப் படமான தேன்நிலவு படத்தில் ஏ எம் ராஜா பாடிய ஒரு ஆல் டைம் பேவரிட் பாடலின் முதல் வரி அது .
“பேரை சொன்னது விஷ்ணு விஷால் சார்தான்” என்றார் கிருஷ்ண குமார் ,
விஷ்ணு விஷால் முகத்தில் சந்தோஷப் புன்னகை.
படத்தின் கதை ?
சாதிக்கத் துடிக்கும் இளம் இயக்குனர் ஒரே நேரத்தில் தன் காதலையும் தொழிலையும் எப்படி ஹேண்டில் செய்கிறார் என்பது ஒன் லைன் .
உற்சாகமாகப் பேசுகிறார் ருத்ரா . ” அண்ணன் விஷ்ணு விஷால் எனக்கு செய்யும் உதவியை மறக்க முடியாது . எனக்கு சரியான களம் அமைத்துக் கொடுத்து இருப்பதோடு படத்தில் எனக்காக ஒரு கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலாகவே நடிக்கிறார் . சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் .புதிய தலைமுறை இளைஞர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பூமர் , கிரிஞ்ச் போன்ற வார்ததைகள் முந்தைய தலைமுறை ஆட்களிடம் பேசப்படும் போது அவர்களுக்கு எப்படிப் புரிகிறது என்பதை வைத்து வரும் காட்சிகள் வெகுவாக ரசிக்கப் படும் ” என்கிறார் தம்பி .
வருங்காலத்தில் ருத்ரா இயக்குனராகவும் ஆவாரா என்றால், “கண்டிப்பாக ஆவான் ” என்கிறார் விஷ்ணு விஷால்.
”இந்தப் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் கூட அவனுக்கு ஷாட் இல்லை என்றால் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டராகவே வெயிலில் சுத்திக் கொண்டு இருப்பான். ‘இப்போ நீ ஹீரோடா… நிழலில் உட்கார் ‘என்று இழுத்து வருவேன் ” என்கிறார் விஷ்ணு விஷால் .
சரி …. யார் அந்த பேபி ?
“கதாநாயகி பெயர் மிதிலா பல்கர் .லிட்டில் திங்க்ஸ் என்ற நெட்ஃப்ளிக்ஸ் சீரியல் மூலம் அறியப்பட்டவர். ஒரு சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார் “என்று இயக்குனர் கூற
“நல்ல திறமைசாலி ” என்கிறார் ருத்ரா
விஷ்ணு விஷால் , ” சிறப்பாக நடித்துள்ளார் மிதிலா பால்கர் . ஒவ்வொரு ஷாட்டின் போதும் நான் ருத்ராவிடம் கூறுவேன் . அவர் பிரம்மாதமாக நடிக்கிறார் . அதற்கு இணையாக நீ நடிக்க வேண்டும் என்று கூறுவேன் ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் . இந்தப் படத்தில் ருத்ராவுடன் நடித்த மிஷ்கின், கீதா கைலாசம் , ரெடின் கிங்ஸ்லி எல்லாருமே சீனியர்கள் பத்துப் பதினைந்து வருட அனுபவம் பெற்ற நடிகர்கள் . அவர்களோடு ருத்ரா நடித்தார் “என்றார்
அதெல்லாம் பெரிய விசயமில்லை விஷ்ணு விஷால் சார் . சின்சியரா அசிஸ்டன்ட் டைரக்டர் வேலை பாத்தவங்களுக்கு நடிக்கிறது எல்லாம் நாவல் பழம் சாப்பிடுற மாதிரி . (POSITIONING OF HANDS மட்டும் கொஞ்சம் கத்துக்கிட்டா போதும்) கமல்ஹாசனே எதிரில் நின்று நடித்தாலும் , ஒரு சலாம் போட்டு விட்டு ஷாட் ல இறங்கி அசத்தலாம் .
வாழ்த்துகள் ருத்ரா, கிருஷ்ணகுமார் , மிதிலா பல்கர்