எம் கே பிலிம்ஸ் சார்பில் சி.முத்து கிருஷ்ணன் தயாரிக்க,
சாய் தன்ஷிகா, வர்ணிகா, வர்ஷா, சங்கர் ஸ்ரீ ஹரி ஆகியோர் நடிக்க,
எஸ். பாணி எழுதி இயக்கி உள்ள படம் எங்கம்மா ராணி . ராஜ்ஜியம் எப்படி ? பார்க்கலாம் .
காதலை குடும்பம் ஒத்துக் கொள்ளாத நிலையில் மலேசியா சென்ற காதலனை பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்கிறாள் துளசி ( சாய் தன்ஷிகா)
அவர்களுக்கு மீரா (வர்ணிகா) தாரா (வர்ஷா) என்ற ஒரே உருவத் தோற்றம் கொண்ட இரட்டைக் குழந்தைகள் பிறந்து வளர்கின்றன .
பிள்ளைகள் சிறுமிகளாக இருக்கும் நிலையில், கம்போடியா சென்ற கணவன் காணாமல் போகிறான்.
கணவனைத் தேடியபடியே மலேசியாவில் வேலை செய்து பிள்ளைகளை துளசி காப்பாற்றும் நிலையில், ஒரு நாள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி தாரா (வர்ஷா) திடீரென இறந்து போகிறாள் .
தாராவின் மரணத்துக்கு டாக்டர் முரளியின் ( சங்கர் ஸ்ரீஹரி) அலட்சியமே காரணம் என்று நம்புகிறாள் துளசி
ஆனால் முன்பே இருந்த நோய்தான் தாராவின் மரணத்துக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கும் முரளி, அதே நோய் மீராவுக்கும் (வர்ணிகா) இருப்பதையும் மீராவும் இறக்கப் போகிறாள் என்பதையும் கண்டு பிடிக்கிறான்.
கணவனும் இல்லாத நிலையில் இரண்டாவது குழந்தையும் மரணிக்கும் என்பதை துளசியால் தாங்க முடியாத சூழல்
இந்த நிலையில் , மீராவை வேறொரு சிறுமியின் ஆவி பிடிக்கிறது . அநியாயமாக கொல்லப்பட்ட அந்த சிறுமி மீராவின் உடலில் இருந்தபடி தன்னைக் கொன்ற ஒருவனை கொல்கிறது.
இன்னொருவனைக் கொல்ல முயல்கிறது . இதனால் தனக்கும் மீராவுக்கும் வரவிருக்கும் பிரச்னைகள் குறித்து அஞ்சுகிறாள் துளசி .
ஆனால் மீரா உடலில் ஆவி இருக்கும்போது மீராவுக்கு நோய் இல்லாமல் போகிறது . அதாவது மீராவின் உடலில் ஏதாவது ஆவி தொடர்ந்து இருந்தால், அவளுக்கு நோய் வரவே வராது
அதே நேரம் புதிதாக வந்த குழந்தை ஆவிக்கும் துளசிக்கும் பாசம் வருகிறது .
அதே போல , குழந்தையின் ஆவி இன்னொருவனையும் கொன்று விட்டால் அந்த குழநதையின் ஆவி மீராவை விட்டுப் போய்விடும் . மீராவுக்கு மீண்டும் நோய் வந்து விடும் .
அதனால் துளசி தயங்க , துளசியை பிரிய குழந்தையின் ஆவியும் தயங்க, இதையும் மீறி கொலைகாரன் கொல்லப் படுகிறான் .
மீராவை விட்டு குழந்தையின் ஆவி சோகத்தோடு போய் விடுகிறது . மீராவுக்கும் மீண்டும் நோய் வருகிறது .
இந்த நிலையில் துளசி என்ன செய்தால் என்பதே எங்கம்மா ராணி .
வித்தியாசமான கதை . மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள படம் . . மலேசிய தமிழர்கள் பலர் நடித்துள்ளனர் . மலேசிய தமிழ் அருமை
இளையராஜா இசையில் வா வா மகளே பாடல் மனம் கனக்க வைக்கிறது . பின்னணி இசையிலும் ஆங்காங்கே ராஜா வாசம்
படம் முழுக்க நிறைந்து வழிகிறார் தன்ஷிகா . அவருக்கு உரிய பாணியில் அவருக்கு முடிந்தவரை நடித்துள்ளார் .
ஒரே வடிவ இரட்டைக் குழந்தைகள் அழகு . அதுவும் மீராவாக நடித்திருக்கும் வர்ணிகா, தனது உடம்புக்குள் ஆவி நுழைந்த பிறகு நடிப்பில் அசத்துகிறாள்
டாக்டர் முரளியாக வரும் சங்கர் ஸ்ரீஹரி சிறப்பாக நடித்துள்ளார் . உடல் மொழிகள், தோற்றம் இவையும் அருமை . நல்ல வேடங்கள் கிடைத்தால் ஜொலிப்பார்
வித்தியாசமான கதை பிடித்தவர்கள் திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக அமைத்து இன்னும் சிறப்பான படமாக்கலையும் தந்திருக்கலாம்
மனதை நெகிழ வைக்கிற கிளைமாக்ஸ் . ஆனால் அந்த கிளைமாக்சை இப்படி ஜஸ்ட் லைக் தட் சொல்லி விட்டுப் போகாமல்,
ரசிகர்கள் மனதை அதிரவைக்கும்படி சொல்லி இருந்தால் படம் பெரிதும் கவனம் கவர்ந்திருக்கும் ( லாஜிக் ரீதியாக இதெல்லாம் நியாயமா,
–என்று கேட்கிற சில விமர்சனங்களும் வந்திருக்கும் என்பது வேறு விஷயம் . ஆனால் அதுவும் கூட படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கும் )
எனினும் ஆவிக் குழந்தை அதன் பாசம் ஆவி இருந்தாலும் பிரச்னை இல்லாவிட்டாலும் பிரச்னை என்று சில நுணுக்கமான முடிச்சுகளை போட்டதில் கவனிக்க வைக்கிறது எங்கம்மா ராணி