ருத்ரன் @ விமர்சனம்

ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் சார்பில் கதிரேசன் தயாரித்து இயக்க, ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி ஷங்கர் , நாசர், பூர்ணிமா பாக்யராஜ் நடிப்பில் கே பி திரு மாறன் கதை திரைக்கதை வசனத்தில் வந்திருக்கும் படம். 

அப்பா (நாசர்) அம்மாவுக்கு ( பூர்ணிமா) ஒரே மகன் ( ராகவா லாரன்ஸ் ) அவனுக்கு ஒரே காதலி கம் மனைவி (பிரியா பவானி சங்கர்)  . 

நண்பரை நம்பி பணத்தில் ஏமாந்து அப்பா சாக , கடனைத் தீர்க்க அம்மாவை  விட்டு விட்டு   வெளிநாடு போகிறான் நாயகன் . மனைவியும் அங்கு வந்து விட இங்கே அம்மா மட்டும் தனியே . 
அயல்நாட்டில் பிள்ளைகள் செட்டில் ஆன நிலையில் இங்கே சொத்து பத்துக்களோடு தனியாக இருக்கும் வயதானவர்களை கொன்று, அவர்களின் கைரேகையை பிரதி எடுத்து சொத்துக்களை மாற்றி கோடி கோடியாக சம்பாதித்து  தொடர்ந்து அதே வேலை செய்யும் தாதாவின் ( சரத்குமார்) ஆட்கள்  நாயகனின் அம்மாவையும் கொன்று விட , 

பாசமுள்ள மகன் வந்து என்ன செய்தான் என்பதே படம் . 

என்ன செய்வான் என்பதுதான் ஊர் உலகத்துக்கே தெரியுமே . 

தனியாக வாழும் பணக்கார மனிதர்களுக்கு குறி வைக்கும் கும்பல் என்ற நக்கீரன் செய்தியைப் படித்து விட்டு அதுவே போதும் என்று முடிவு செய்து விட்டு,  மற்றபடி அலுத்து சலித்து, புளித்து,  புழுப் புழுத்து, டீ கம்போஸ் ஆகி , மட்கிப் போன காட்சிகளை  சும்மா அடுக்கி விட்டு, 

இதற்குப் போய் கதை திரைக்கதை வசனம் என்று , பேரு மட்டும் வைத்து விட்டு சோறு வைக்காமல் விடுவதும் , அதைப் போய் ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் ஆவதற்கு முதல் படமாக முடிவு செய்வதும் , “உட்காந்து ஏதும் எழுத மாட்டீங்களா?'”  என்று கேட்காமல் ஒரு பெரிய ஹீரோ அதில் நடித்து இருப்பதும்…. நம்பிப் படம் பார்க்கப் போகும் ரசிகனுக்கு கெட்ட காலம் அன்றி வேறென்ன?

நாடகத்தனமான காட்சிகள், வசனங்கள், செயற்கையான நடிப்பு எல்லாம் நம்மைப் புரட்டிப் புரட்டி அடிக்கிது. 

ரஜினி ஸ்டைலில் லாரன்ஸ் , காமா சோமா பிரியா பவானி சங்கர். சரத்குமார் கம்பீரம். 
“நாம எல்லாம் சின்ன வயசில் சர்க்கஸ் என்று ஒரு சமாச்சாரம் பார்த்தோமே. நம்ம பிள்ளைகளுக்கு அதைப் பார்க்க வைக்க வாய்ப்பு இல்லையே என்று யாருக்காவது வருத்தம் இருந்தால் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளைப் போட்டுக் காட்டலாம். ( இன்னொரு பக்கம் சண்டைக் கலைஞர்களின் உழைப்பும் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவின் உழைப்பும்  அபாரமானது) 

ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் குளுமை , ஆக்ரோஷக் காட்சிகளில் சூடு காட்டுகிறது.  ஆண்டனியின் படத் தொகுப்பு  பாராட்டுக்குரியது 

படத்தில் லாரன்ஸ் கதாபாத்திரம்  வாங்குகிற அடிக்கும் குத்துக்கும் அந்த கதாபாத்திரம் செத்து அடுத்த பிறவியில் பிறந்து வந்துதான் ஒவ்வொரு சண்டையையும் தொடர வேண்டும் . அவ்வளவு அடி, குத்து,  உதை, வெட்டு, சொருகு, பிளப்பு, ஒடிப்பு, முறிப்புகளை எல்லாம் வாங்கிக் கொண்டு சட்டு சட்டுன்னு எழுந்து சண்டை போடுகிறது.. படம் பார்ப்பவன்தான் சாக வேண்டி இருக்கிறது. 

ராகவா லாரன்ஸ் நன்றாக நடனம் ஆடுவதை இன்னும் கூட பாராட்டலாம். ஆனால்அம்மா செத்து பிணமாக கிடக்க, கர்ப்பிணி பொண்டாட்டி காணமல் போன நிலையில் ஸ்டைலாக பைக்கில் ஏறி, பந்தாவாக பார்த்தபடி பயணிப்பது எல்லாம் வேறே லெவல்.. வேறே லெவல். 

மஞ்சள் , குங்குமம் , மண்டை ஓடு,  சந்தணம் இவற்றை ராகவா லாரன்ஸ்  படங்களில் அடுத்த பத்து வருடத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் போடலாம் . தப்பே இல்லை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *