குணா டீம் ஒர்க்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் நீலிமா குணா தயாரிக்க சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன், கவுதமி, மற்றும் கவுரவத் தோற்றத்தில் மோகன் பாபு நடிக்க காளிதாசர் இயற்றிய சாகுந்தலத்தை அடிப்படையாக வைத்து குணசேகர் திரைக்கதை எழுதி இயக்கி தெலுங்கில் வந்திருக்கும் படத்தின் தமிழ் மொழி மாற்ற வடிவம்.
விஸ்வாமித்ரரின் தவத்தை கலைக்க போன மேனகைக்கு மகளாகப் பிறந்து , குழந்தையாக இருக்கும்போதே காட்டில் விடப்பட்டு கன்வ மகரிஷியால் வளர்க்கப்பட்டு இளம் பிராயம் எட்டும் சகுந்தலை (சமந்தா) , மாமன்னன் துஷ்யந்தனைக் (தேவ் மோகன்) கண்டு காதல் கொண்டு , உடலால் இணைந்து கர்ப்பம் ஆகிறாள் . போர் முடித்து வந்து அழைத்துப் போவேன் என்று சொன்ன காதலன் பற்றிய சுகமான கற்பனையில் இருக்கும்போது அங்கு வந்த துர்வாச முனிவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்க, ‘யாரை நினைத்து என்னை அவமதித்தாயோ அவன் உன்னை முழுக்க மறந்து போவான்’ என்று சாபமிடுகிறார் துர்வ்.

அதே போல போர் முடிந்தும் துஷ்யந்தன் வராமல் போக, கர்ப்பிணி சகுந்தலை மன்னனை தேடி அவன் நாட்டுக்குப் போக , உன்னை யாரென்றே தெரியாது என்று சொன்னதோடு உயிர் பயத்தை ஏற்படுத்தி அனுப்பி விடுகிறான் துஷ்யந்தன்
அவள் எங்கோ போய் விட , ஒரு நிலையில் உண்மை உணரும் மன்னன் அவளைத் தேட நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
காளிதாசரின் இலக்கியத்தை அடிப்படையாக வைத்து பதார் கே ஹோந்த் என்ற நாவலை இந்தி எழுத்தாளர் குல்ஷன் நந்தா,எழுத , அது அங்கே படமாகி பிறகு தெலுங்கில் புனர்ஜென்மா என்ற பெயரில் படமாக வந்து அதில் இருந்து தமிழில் சிவாஜி, ஜெயலலிதா நடிக்க, ஏ எல் நாராயணன் திரைக்கதையில் ஏ சி திருலோக சந்தர் இயக்கத்தில் எங்கிருந்தோ வந்தாள் என்ற பெயரில் 1970 இல் வெளிவந்து வெள்ளி விழா கண்டது .

இதில் மூல வித்துக்கு நன்றி சொல்லும் வகையில் சகுந்தலை துஷ்யந்தன் கதையை , சாபம் விடும் காட்சி வரைக்கும் சொல்லும் ஒரு பாட்டில் துஷ்யந்தனாக சிவாஜியும் சகுந்தலையாக ஜெயலலிதாவும் அட்டாகாசமாக நடித்து இருப்பார்கள் (பாடலைக் காண
https://youtu.be/HCavbD-AF7M)
இப்போது இந்த சாகுந்தலம் படத்துக்கு வருவோம் .
காளிதாசரின் சாகுந்தலத்தை விலாவாரியாக எடுத்துள்ளார்கள் . பிரம்மாண்டமான பொருட்செலவு . இருந்தும் முதல் பகுதி முழுக்க சி ஜி காட்சிகள் படு மொக்கை . அந்தக் காலத்தில் மனிதர்கள் விலங்குகள் பறவைகளோடு இணைந்து வாழ்ந்ததை சொல்லும் விதம் அருமை . சமந்தா, தேவ மோகன் சிறப்பாக பொருத்தமாக நடித்துள்ளனர் . ஒரு பாட்டில் மட்டும் நடித்து இருக்கிறார் பிரகாஷ்ராஜ் .
மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார் குணசேகர், மணி ஷர்மாவின் இசை , சேகர் வி ஜோசப்பின் ஒளிப்பதிவு . முதல் பாதியில் சோம்பி இருந்துவிட்டாலும் இரண்டாம் பகுதியில் சிறப்பாக இருக்கிறது பிரவீன் புடியின் படத் தொகுப்பு . கலை இயக்கமும் , ஒப்பனை யாவும் சிறப்பு

ஆனால் காளிதாசன் இங்கிலாந்தில் பிறந்த இங்கிலீஷ்காரரோ என்று சந்தேகப்படும் அளவுக்கு படத்தில் வரும் தளபதிகள் படைவீரர்கள் எல்லோரும் மேற்கத்திய பாணியில் நடை உடை பாவனை உடல் மொழிகள் காட்டுகிறார்கள் . சமந்தா கூட பல காட்சிகளில் இங்கிலாந்து சகுந்தலை போலத்தான் நடந்து கொள்கிறார். தவிர, மொழி மாற்றத்தில் தனது கதாபாத்திரத்துய்க்கு தானே குரல் கொடுத்து இருக்கும் சமந்தா செந்தமிழ் பேசுகிறேன் என்று செங்கல் பொடி மெல்லுகிறார். கொடுமை
முதல் பாதி முழுக்க உதிரி உதிரியாய் வரும் காட்சிகள் , ‘ சிக்கிட்டமோ’ என்ற பயத்தை ஏற்படுத்தினாலும் சகுந்தலம் துஷ்யந்தன் நாட்டுக்கு செல்லும் இடத்தில் இருந்து படம் பரபரப்பாகவும் நெகிழ்ச்சியூட்டும்படியும் சென்று முடிகிறது . சகுந்தலையின் மகனாக நடித்திருக்கும் அல்லு அர்ஜுன் மகள் அல்லு அரஹ மனதை அள்ளுகிறாள்.

படம் முடியும்போது பழைய குறைகள் மறந்து விடுகிறது . ஒரு நல்ல புராணப்படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது