ரன் பேபி ரன் @ விமர்சனம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்க, ஆர் ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ராதிகா சரத்குமார், நாகி நீடு  நடிப்பில் ஜியேன் கிருஷ்ணகுமார் எழுதி இயக்கி இருக்கும் படம் 

வங்கியில் வேலை பார்க்கிற- திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிற ஒருவன் ( ஆர் ஜே பாலாஜி) – அவன்  வருங்கால மனைவியோடு (இஷா தல்வார்) தனது காரில் போகும்போது, தன் காரின் பின் சீட்டின் கீழ்  வேறொரு பெண் ( ஐஸ்வர்யா ராஜேஷ்) ஒளிந்து இருப்பதைப் பார்க்கிறான் . உடனடியாக அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல், மணப்பெண்ணை இறக்கி விட்டு விட்டு , அப்புறம் ஒளிந்திருந்த பெண்ணை  எதிர்கொள்கிறான் . 
 
தான் ஒரு பெரிய ஆபத்தில் இருப்பதாகவும்,  (பேச்சிலராக தனியாக வசிக்கும்) அவனது வீட்டுக்கு வந்து ஐந்து நிமிடம் போனுக்கு சார்ஜ் போட்டு விட்டுப் போய் விடுவதாகவும் அவள் சொல்ல , அவனும் உதவ , ஒரு நிலையில் அவன் வீட்டுக்குள் அவள் செத்துக் கிடக்கிறாள். . அந்தப் பிணத்தை யாருக்கும் தெரியாமல் அவன் அப்புறப்படுத்த முயல, அந்த முயற்சியில் ஒரு வேன் டிரைவரின் தற்கொலையும்  நிகழ்கிறது. கூடவே நடந்ததை  மறந்து விடு . ஆராய்ச்சி செய்யாதே என்ற மிரட்டலும் அவனுக்கு வருகிறது . 
 
மீறி அவன் உண்மைகளைத் தேட , செத்துப் போன பெண்ணோடு அவன் படுக்கையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வந்து கல்யாணமும் நின்று போகிறது . 
 
தற்கொலை முயற்சி வரைக்கும் போய், அந்த நேரத்தில் வந்த அம்மாவின் தொலைபேசி அழைப்பால் மனம் மாறி தொடர்ந்து உண்மைகளைத் தேடும் அவனுக்கு என்ன நடந்தது என்பதே படம் . 
 
ஆர் ஜே பாலாஜியைத் தவிர அனைத்து சகல  ஜீவராசிகளும் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கும் படம் . அப்படி படம் முழுக்க வருகிறார் பாலாஜி.  ஆனால் ரெண்டு காட்சி கொடுத்தாலே இருபது பக்கத்துக்குப் பேசும் பாலாஜி இதில் எல்லா காட்சிகளிலும் இருந்தாலும் மொத்தமே இரண்டு பக்க அளவுக்குத்தான் பேசுகிறார் .இங்கே நிற்கிறார் இயக்குனர். 
 
யுவாவின் ஒளிப்பதிவு சிறப்பு . சாம் சி எஸ்  இசை கொஞ்சம் திகில் நிறைய இரைச்சல்.  மதனின் படத் தொகுப்பு சிறப்பு . 
 
நடிப்பில் எல்லோருமே ஒகே ரகம்தான். 
 
ஒரு யதார்த்தமான நல்ல மனிதன் அவன் வருங்கால மனைவியோடு காரில் போகும்போது, பின் சீட்டில் திடீரென்று யாரோ ஒரு பெண்ணைப் பார்த்தால் என்ன செய்வான்?  சட்டென்று அதிர்ந்து ”யாரும்மா நீ ?” என்று கேட்பான் அல்லவா?  அப்படிக் கேட்கவில்லை என்றால் அவன் ஏதோ ஒரு வகையில் தப்பானவன் என்று பொருள் இல்லையா?  ஆனால் இந்தப் படத்தில் அப்படிப்பட்ட மனிதன்தான்  நாயகன் . அந்த  நாயகன் நல்லவன். 
 
 அல்லது அந்த வருங்கால மனைவி சந்தேகப் பிராணி என்றும் இனி அவளை மணக்காமல் இருக்க முடியாத சூழ்நிலை என்றும் சொல்ல வேண்டும். அதனால்தான் அவன் வருங்கால மனைவியிடம் பின் சீட்டில் ஒரு பெண் இருப்பதை மறைத்தான் என்று சொல்ல வேண்டும். அப்படி சொல்லவும் இல்லை.   அங்கேயே திரைக்கதை நம்மை விட்டு விலகிப் போகிறது. 
 
”பிணத்தை அழித்து விடு . இல்லாவிட்டால் எனக்கும் பிரச்னை” என்று போலீஸ்கார நண்பன் சொல்லும்போதே அவனையும் அதைச் செய்யச் சொல்லி இறக்கி விட்டு இருக்கலாம். செய்யவில்லை. அடுத்த திரைக்கதை பலவீனம் . 
 
தவிர ஆங்கிலத்தில் இவர்களுக்குப் பிடிக்காத வார்த்தை லாஜிக் .  
 
இப்படி பல விசயங்களால்  படம் விட்டு விலகினாலும்,  ஒரு நிலை வரை படபடப்பை விறுவிறுப்பைத் தக்க வைக்கிறார்கள் . அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார்கள் . அதுவும்  இளம்பெண்ணின் பிணம் எரிக்கப்பட்டு வேன் டிரைவர் மரணம் நடந்து அந்த இடைவேளை வரை  படம் பரபரப்பு. பார்ப்பவர்களுக்கு படபடப்பு .  அதுவரை படம் ரன் பேபி ரன் என்ற பெயருக்குப் பொருத்தமாகவே இருக்கிறது . 
 
ஆனால் பெண்ணின் மரணத்துக்குக் காரணம் என்ன என்று ஒரு சர்ச் , கிறிஸ்தவ கல்லூரி , சர்ச் பாதர்கள் என்று ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கிறார்கள் பாருங்கள் . அந்தப் பின்னணியில் ஒரு சிறப்பான திரைக்கதை செய்ய நிறையவே வாய்ப்பு இருந்தும் ஒரே கசாமுசா கய்யா முய்யா என்று போகும் காட்சிகள் அடுத்தடுத்து வர வர 
 
ரன் ஆகிக் கொண்டு இருந்த பேபி,  நடந்து …. நின்று….. உட்காந்து …. படுத்தே விடுகிறாள் . 
 
படத்தில் மெடிக்கல் கல்லூரிகளில் நடக்கத் துவங்கி இருக்கும் ஒரு பகீர் அநியாயத்தை சும்மா போகிற போக்கில் வார்த்தைகளில் சொல்கிறார்கள். அடப் பாவிகளா? அழுத்தமாக விலாவரியாக அழுத்தமாக படத்தின் இரண்டாம் பகுதியின் பெரும்பகுதியைக் கொடுத்து சொல்ல வேண்டிய விஷயம் அல்லவா அது ?
 
கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையலாமா என்பது பழமொழி . இவர்கள் அந்த நெய்யையும் கொட்டி விட்டு அது இருந்த தொன்னையையும் கிழித்துப் போட்டு விட்டு நெய்க்கு அலைவதாக எண்ணி ‘நய்… நய்.. நய்.. ‘ என்று இரண்டாம் பகுதியை நகர்த்துகிறார்கள்.  
 
இரண்டாம் பகுதியில் இன்னும் சரியான காரண காரியங்களோடு  சிறப்பான திரைக்கதை அமைத்து இருந்தால் இந்த பேபியுடன் ரசிகர்களும் ரன்னிங் வந்திருப்பார்கள் . 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *