நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் பா. ரஞ்சித் மற்றும் யாளி ஃபிலிம்ஸ் தயாரிக்க, யோகிபாபு, சுபத்ரா, சிறுமி ஸ்ரீமதி ஹரி , ஜி எம் குமார், அருள்தாஸ் நடிப்பில் ஷான் எழுதி இயக்கி இருக்கும் படம்.
பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு ( ஜி எம் குமார்) இரண்டு மனைவிகள். அவரது சாதியைச் சேர்ந்த முதல் மனைவிக்கு ஒரு மகன் (அருள்தாஸ்). தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இரண்டாம் மனைவிக்கு ஒரு மகன் ( யோகிபாபு) . ஒரு நிலையில் அப்பா இரண்டாவது மனைவியோடு சேரிக்கே வாழ வந்து விட்டாலும் , சொத்து எல்லாம் முதல் மகனிடம்தான் இருக்கிறது. அவர் ஊர்த்தலைவர் வேறு
இரண்டாவது மகனுக்கு மனைவியும் (சுபத்ரா) ஒரு மகளும் ( ஸ்ரீமதி) இருக்கிறார்கள். அண்ணனிடம் மஞ்சள் பைகளில் பணக்கட்டுகள் உருள , தம்பிக்கோ மகளின் சிறுசிறு ஆசைகளைக் கூட நிறைவேற்ற முடியாத வறுமை .

சாலையோர பெட்டி டீக்கடையில் வேலை செய்து பிழைக்கும் தம்பிக்கு அண்ணன் மேல் பாசம் . ஆனால் அண்ணனுக்கோ தம்பி ஒரு அமைப்பு சாரா வேலைக்காரன் . அண்ணனின் சாதி ஆணவ நண்பர்களுக்கு அவன் ஒரு தாழ்ந்த சாதி வேலைக்காரன்.
இந்நிலையில் தம்பியின் மகளை அண்ணனின் நண்பர்கள் இருவர் குடிபோதையில் குல தெய்வமான பொம்மை நாயகி திருவிழா சமயத்தில் பாலியல் பலாத்காரம் செய்ய முயல, கடைசி நேரத்தில் சிறுமி காப்பாற்றபடுகிறாள் .
குற்றவாளிகளைத் தண்டிக்க தம்பி முயல , அண்ணனோ சாதி ஓட்டுகளுக்காக அவர்கள் பக்கம் நின்று தம்பியை மிரட்டுகிறான். தம்பிக்கு பொதுவுடைமை புரட்சி சங்கத்தின் தலைவரான இளைஞர் ( ஹரி) , ஒரு பெண் வக்கீல் ( லிசி ஆண்டனி) உதவ , நீதி கிடைத்ததா ? என்ன ஆச்சு? என்பதே படம்.
ஒரே தகப்பனுக்கு மகனாகப் பிறந்தாலும் அம்மாவின் சாதி கூட ஒருவனை தாழ்த்தப்பட்ட சமூகத்துக்குள் அமிழ்த்தும் என்று சொன்ன வகையில் இது சாதிக் கொடுமைகளுக்கு எதிரான படங்களுக்குள் ஒரு தனித்தன்மையோடு இருக்கிறது. அந்த அப்பா கதாபாத்திரம் வெகு இயல்பு. நீதி கேட்கப் போகும் பாதிக்கப்பட்ட நபரைக் கூட, குற்றம் செய்த சாதி ஆணவம் எப்படி அடித்து ஒடுக்குகிறது என்பதை படம் சிறப்பாகப் பதிவு செய்கிறது.

மேல்சாதி அண்ணன் மேல் கீழ் சாதி தம்பிக்கு உள்ள பாசமும் ஆனால் அண்ணன் அவனை தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் விதமும் புதிய காட்சிகள் . யார் யாருக்கோ பத்திரிகை வைக்கும் அண்ணன் சாதி காரணமாக தம்பிக்கு வாய் வார்த்தைகளால் அலட்சியமாக அழைப்புச் சொல்லி விட்டுப் போவது வலி மிகுந்த காட்சி .
யோகி பாபு கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் . கனமான காட்சிகளில் இன்னும் சிறப்பாக நடித்து இருக்கலாம் .கடல் போன்ற கண்கள் கொண்ட எளிய அழகில் கவர்கிறார் சுபத்ரா . குரல்தான் கொஞ்சம் போதையில் இருப்பது போலவே இருக்கிறது . சொந்த ஊர் பாண்டிச்சேரி என்பதால் நமக்கு அப்படி தோணுகிறதோ என்னவோ. ஸ்ரீமதி உற்சாகமாக நடித்துள்ளார் . ஜி எம் குமார் , அருள்தாஸ் அனைவரும் இயல்பு.
அதிசயராஜின் ஒளிப்பதிவு மொத்தத்தில் அருமை. சாலையோரக் காட்சிகளிலும் கடல் புறத்திலும் வெகு சிறப்பு .
முக்கியமான காட்சியில் ஒரு ஷாட்டை மாற்றிப் போட்டதால் அடுத்த காட்சிகளை யூகிக்கும்படி செய்து சொதப்பி விட்டது செல்வாவின் படத் தொகுப்பு.

பொது உடமைச் சங்க இளைஞனுக்கு ஜீவாவின் பெயர் வைத்து இருக்கும் இயக்குனருக்குப் பாராட்டுகள். .
படத்தில் நிறைய விளிம்பு நிலை எளிய மனிதர்கள் வருகிறார்கள் . சிறப்பு . கிளைமாக்ஸ் ஏரியா தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பரிதாபத்தை மட்டும் வரவழைக்காமல் அவர்களை அறிவுப்பூர்வமாகவும் காட்டுவது சிறப்பு .
இவ்வளவு விஷயங்கள் இருந்து படம் விவரணையாக இருக்கிறதே தவிர, உணர்ச்சிகளின் உருவமாக இல்லை .
ஒரு நல்ல விஷயத்தை கதையாக, கவிதையாக, காதையாக, தெருக்கூத்தாக, நாடகமாக, மைம் ஆக எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதை நாம் எந்த ஊடகத்தில் சொல்கிறோம், முக்கியமாக யாருக்குச் சொல்கிறோம் , எப்படிச் சொன்னால் அவர்களைக் கவரும் என்ற புரிதல் வேண்டும் . இந்தப் படத்தில் அது குறைவு .
பொம்மை நாயகி எல்லா வகையிலும் இன்னும் கொஞ்சம் நேர்த்தியும் அக்கறையும் இருந்திருக்க வேண்டிய படம் .