ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் தயாரிக்க,விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி கதாநாயகியாக நடிக்க,
பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, , செந்தி, எலிசெபத், பெஞ்சமின் நடிப்பில் ஆண்டனி சாமி இயக்கியிருக்கும் படம் சாயம்.
தென் மாவட்ட சிறு நகரம் ஒன்றில் உள்ள கல்லூரி, அங்கு படிக்கும் மாணவ மாணவியருக்கு இடையே இருக்கும் சாதி வெறி , பக்கத்தில் உள்ள கிராமங்களில் வாழும் அவர்களது பெற்றோர், உறவுகள் , அவர்கள் சுய நலத்தாலும் ஆணவத்தாலும் ஊட்டி வளர்க்கும் சாதி வெறி,

அதை முறியடிக்கப் பார்க்கும் சில நல்லவர்கள், மாணவர்களுக்கு இடையே உருவாகும் நட்பு, காதல் , அவை சாதி கடந்து நடக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகள், மற்றும் நம்பிக்கை, துரோகம், அவ நம்பிக்கை , அவசரம் இவற்றின் விளைவுகளே இந்தப் படம் .
படிக்கிற காலத்தில் தேவையற்ற – அபாயகரமான விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வை இழந்தால் , அவற்றில் எல்லாம் சிக்காமல் முன்னேறிய நபர்களைப் பார்த்து ஏங்கிச் சாக வேண்டிய நாள் வரும் என்பதைச் சொல்லும் படம் இது
கிராமிய சூழல், குடும்ப உறவுகள், நட்பு அதை வெட்டியும் ஒட்டியும் பயணிக்கும் சாதி வெறி இவற்றை எளிமையாகச் சொல்கிறது படம் .

நட்பு, முரட்டுத்தனம் அவசரம் , சாதி வெறி கொண்ட பாத்திரத்தில் விஜய் விஷ்வா, அவரது முறைப் பெண்ணாக பயத்தோடு சாதியை ஆதரிக்கும் நாயகியாக ஷைனி, நல்ல மனிதர்களாக பொன்வண்ணன், இளவரசு , சாதி வெறியை வளர்க்கும் வில்லனாக இயக்குனர் ஆண்டனி சாமி ஆகியோர் நன்றாக நடித்துள்ளார்.
சிறையில் சாதி வெறியை வளர்ப்பவராக ஆதேஷ் பாலா சிறப்பு
ஆண்டனி சாமி தனக்கென வைத்துக் கொண்டிருக்கும் ஒரு தண்டைக் காட்சி அசத்தலாக உருவாக்கப்பட்டு உள்ளது
நாகா உதயன் இசையும் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோரின் ஒளிப்பதிவும் பழுதில்லை

பழமையான படமாக்கல் , போதுமான வேகமோ அழுத்தமோ பெரிதாக சுவாரஸ்யமோ இல்லாமல் சிரத்தை இன்றி உருவாக்கப்பட்டு இருக்கும் திரைக்கதை மைனஸ் .
எனினும் கடைசிக் காட்சி கலங்க வைக்கிறது .கல்லூரியில் சாதி வெறி உள்ளிட்ட தேவையற்ற பிரச்னைகளில் கவனம் செலுத்தும் மாணவர்கள் பார்த்தால் ஒரு நிமிடம் யோசிப்பார்கள்
அதுதான் சாயத்தின் சாயம் போகாத பலம்