சன்மூன் கம்பெனி தயாரிக்க , சின்னத் திரையில் பிரபலமான நடிகர் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்க , புதுமுகம் மானசா கதாநாயகியாக அறிமுகமாக ,
பல பத்திரிக்கைகளில் 350 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிஎவரும், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இயக்குனராக, கதாசிரியராக பணியாற்றியதோடு நிறைய விளம்பரப் படங்களையும் இயக்கிய,
அன்புமதி கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் படம் சண்டிக் குதிரை
பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் – வாரஸ்ரீ.
“ நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா “என்ற , புகழ்பெற்ற பாடல் உட்பட இதுவரை 6000 பக்தி பாடல்களுக்கு மேல் பாடல் எழுதிய வாரஸ்ரீ, பாடல்கள் எழுதுவதோடு
, முதல் முதலாக இசையமைக்கும் படம் இது.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அன்புமதி ” காமெடி, காதல் , திரில்லர் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக உருவாக்கி இருக்கிறோம்.
செல்பி மோகத்தால் ஏற்படும் விபரீதம் தான் இந்த படத்தின் முக்கிய கரு.
இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோவே படத்தின் திரைக்கதைதான். யாருமே யூகிக்க முடியாத அளவிற்கு வித்தியாசமான கிளைமாக்ஸ் இருக்கும்.
கஞ்சா கருப்பு , ரிஷா பங்குபெற்ற ஒரு வித்தியாசமான பாடல் காட்சியை புதுக்கோட்டை அருகில் உள்ள குலமங்கலம் என்ற கிராமத்தில் திருவிழா நடைபெறுவது போன்ற செட் அமைத்து படமாக்கினோம்.
அந்த பாடலில் அந்த கிராம மக்கள் எல்லோரும் பங்குபெற்றனர் ‘நாங்கள் நடத்திய திருவிழா கூட இப்படி பிரமாண்டமாக இருந்ததில்லை என்று பாராட்டினர் .
தவிர இந்த படத்திற்கான விளம்பரப் பாடலான “ அச்சச்சோ ஆச வச்சேன் “ என்று தொடங்கும் பாடலில் நாற்பது நட்சத்திரங்களுக்கு மேல் நடித்துள்ளனர். அந்த பாடல் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.
படப்பிடிப்பு முழுக்க முழுக்க புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது.” என்றார்
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குனர் , நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது
“இயக்குனர் அன்புமதி, நடிகர் ராஜ்கமல் இருவரும் சின்னத் திரையிலிருந்து வந்திருக்கிறார்கள்.
இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
நான் சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தபோது, ஒரு பெரிய நடிகரிடம் கதை சொன்னேன், கதை நன்றாக இருக்கு..சின்னத் திரை இயக்குனர் மேக்கிங் எப்படி இருக்கும் என்று தெரியாது.
அதனால் கதையை மட்டும் வாங்கிக் கொண்டு விடுங்கள் என்று தயாரிப்பாளரிடம் சொல்லி என்னை வெளியே அனுப்பினார். இன்று நான் இயக்குனராகவும், நடிகராகவும் நிற்கிறேன்…
அதனால் வெற்றி உங்கள் அருகில் தான் இருக்கிறது ” என்றார்.
பாடல்களை வெளியிட்ட இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தன் பேச்சில் ,
“சின்ன படம் சின்ன படம் என எல்லோரும் பேசுகிறார்கள் . எது சின்ன படம் எது பெரிய படம் என்பது வெற்றியை வைத்துதான்.
கமல் நடித்த ‘அவர்கள்’ என்ற படம் வெறும் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப் பட்டதுதான். ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்று முடிச்சு படம் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டதுதான்.
நான் இயக்கிய முதல் படமான புரியாத புதிர் முப்பது லட்சம் ரூபாய் செலவிலும், சேரன் பாண்டியன் முப்பத்து மூன்று லட்சம் ரூபாய் செலவிலும் தான் எடுக்கப் பட்டது.
படங்கள் வெற்றிபெறும் போதுதான் எல்லோரும் பெரிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகிறார்கள்.
சின்ன படமாக இருந்தாலும் நல்லா எடுத்திருக்கிறோம் என்பதில் மட்டும் திருப்தி அடைந்து விடாதீர்கள் .. இன்ட்ரஸ்டிங்கா எடுங்க
அப்போதுதான் படமும் ஓடும் நீங்களும் “ பெரிய “ என்கிற இடத்தை அடைய முடியும்” என்றார்






