சாரா @ விமர்சனம்

ஸ்ரீ பட்டவன் தயாரிப்பில், சாக்ஷி அகர்வால், விஜய் விஷ்வா,ரோபோ சங்கர், யோகி பாபு,தங்கதுரை , அம்பிகா, மிரட்டல் செல்வா இவர்களுடன் செல்லக்குட்டி என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து இயக்கி இருக்கும் படம் சாரா . 

மிகப் பெரிய கட்டுமான நிறுவனத்தின் முதன்மைப் பொறியாளர் சாராவுக்கும்  (சாக்ஷி அகர்வால்)  அங்கேயே பணியாற்றும் இன்னொரு பொறியாளருக்கும் (விஜய் விஷவா ) காதல் . காதலுக்கு சாராவின் பெற்றோர்கள் ஒத்துக் கொண்டிருக்கும் நிலையில் , கட்டிடங்களுக்கு கலப்பட  மணல் அனுப்பி ஏமாற்றும் வெட்டுக்கிளி (மிரட்டல் செல்வா) என்பவனுக்கும் சாராவுக்கும்  பகை . 
 
அந்த பெரிய கட்டுமான நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருக்கும் நபர் (ரோபோ சங்கர்) காசுக்காக எதையும் செய்பவன். அவனுக்கு நண்பனாக என்ன   வேலை செய்கிறான் என்பதே தெரியாமல் , அங்கே  சுற்றிக் கொண்டு  வாய்க்கு வந்ததை எல்லாம் காமெடி என்று பேசிக் கொண்டு இருப்பவன் ஒருவன்( யோகிபாபு) 
 
இவர்களில் எல்லோரின்  கேலி கொண்டலுக்கும் ஆளாகி யாராலும் மதிக்கப்படாத  கோமாளி போன்ற ஒரு நபர் ( செல்லக் குட்டி)
 
சாராவுக்கு வரும் கெட்ட  கனவு , பத்திரிகை தெருவில் விழுவது இதனால் எல்லாம் கல்யாணத்தில் தடங்கல் என்று எண்ணுகிறார்கள் சாராவின் குடும்பத்தினர். ஸ்ஸ்ஸ்ஸ் சப்பா….!)
 
சித்தர் ஒருவரைப் பார்க்க அவர் உயிராபத்து ஏற்படும் என்கிறார். 
 
”இருபத்து நான்கு மணி நேரத்தில் உன்னை கடத்தி என்ன பண்றேன் பாரு” என்று வெட்டுக்கிளி சவால் விட, “பார்ப்போம்டா…”  என்று சாரா எதிர் சவால் விட, 
 
வாட்ச்  மேன் , வாய்க்கு வந்ததை பேசும் நபர், இவர்கள் அனைவரும் வெட்டுக்கிளிக்கு உதவியாக சாரவைக் கடத்த  முயல்கிறார்கள். இது கோமாளிக்குத் தெரிந்தால் பிரச்னை என்று அவனுக்கு மட்டும் தெரியாமல் பிளான் செய்கிறார்கள் . ஆனால் ….
 
கடத்தியது யார்? என்ன ஆனது? கல்யாணம் என்ன ஆனது ? யாருடைய உயிர் சேதம் ஆனது என்பதே சாரா. 
 
சாராவும் அவளது குடும்பமும் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவிலுக்குப் போக, அங்கே பூஜை செய்யும் போது , கோவில் பூசாரி ஒருவரின் முகம் வெட்டுக்கிளி முகமாக மாறி, சாராவின் அப்பா, அம்மா, தாத்தா ஆகியோரைக் குத்திக் கொல்லும்  காட்சி……………. உண்மையியேயே அபாரம் .எடுக்கப்பட்ட விதம் பிரம்மாதம் . 
 
என்னடா இது கருப்பசாமி கொலை செய்வது போலக்  காட்டுகிறார்களே.. எப்படி இது சரி வரும்? எப்படி இதை நியாயம் செய்யப் போகிறார்கள். ஆகா.. ஒரு அட்டகாசமான பக்தி பிளஸ் அமானுஷ்ய படம் பார்க்கப்  போகிறோம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்..
 
அடுத்த சில நிமிடங்களில் சட்டார் … என்று தலையில் அடித்து உட்கார வைக்கிறார்கள் . 
 
சாரிங்க .. தெரியாம எதிர் பார்த்துட்டோம். மன்னிச்சுக்குங்க, 
 
எல்லாராலும் பரிகாசமாக  பார்க்கப்படும் ஒருவன் ஒவ்வொரு காடசியின் ஊடாக மெல்ல மெல்ல நிமிர்ந்து உயரம் தொடுவது என்பது உண்மையிலேயே சிறப்பான உத்தி. 
 
 பள்ளித் தோழி  பொதுத் தேர்வில் தோற்று விடுவோம் என்று பயப்பட,  தேர்வில் தான்  எழுதிய விடைத்தாள்களை அவளுக்கு கொடுத்து விட , மாணவி பாஸ் ஆகி , எழுதிக் கொடுத்த  நல்லா படிக்கும் தோற்பது என்பது கூட கனமான விஷயம்தான். 
 
ஆனால்  அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது இயக்குனர் செல்லக்குட்டிக்கு தெரியவில்லை. அவருக்கு தெரிந்த ஒரே விஷயம்  நடிக்கும்போது எல்லா காட்சிகளிலும் அவரே பேச வேண்டும்… பேச வேண்டும்… . பேசிக்கொண்டே இருக்க வேண்டும். மற்ற  யாரும் வாயைத் திறந்து பேசக் கூடாது. மீறி பேசினால் அவர்கள் வசனம் முடிவதற்குள் இவர் அவர்களை கடித்து விடுவார் போல இருக்கிறது. 
 
காதல் சொல்ல வந்த பெண்ணை  தோழி என்று சொல்லி அனுப்பி விட்டு, பின்னர் வந்து மல்லுக்கட்டுவது ஏன் என்று புரியவில்லை  என்ன வேண்டும் என்று மல்லுக் கட்டும்  கேரக்டருக்கே புரியவில்லை,  ப
 
ள்ளித் தோழனின் அம்மாவை ஒரு முறை பார்த்து வர பள்ளித் தோழிக்கு என்ன கஷ்டம். ?தோழனின் அம்மாவை அவனுக்குத் தெரியாமலே பார்த்து விட்டு அவன் அம்மாதான் என்று தெரிந்த பின்னும் தோழி வர முடியாது என்பது ஏன்?
 
படத்தின் பல காட்சிகளில் அந்த கோமாளி கேரக்டர் சட்டையைக் கிழித்துக் கொண்டு சுவற்றில் முற்றிக் கொண்டு ஆ ஊ என்று கத்திக் கொண்டு அலையுதே …
 
அதை விட அதிகமாக படம் பார்ப்பவர்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு அலைய வேண்டி இருக்கிறது. 
 
பள்ளித் தோழன் மனநோயாளியா இல்லை நார்மலா என்பது டைரக்டருக்கே புரியவில்லை. 
 
ரோபோ சங்கரும் யோகிபாபுவும் முன்னூற்றி முப்பதாவது முறையாக ஆபாச வசனங்களையும்  பெண்களை கேவலப்படுத்தியு ம் பேசி  இருக்கிறார்கள் . கதை என்று எழுதிய இடத்தில் யோகிபாபுவின் கேரக்டர் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளதோ  அப்படிதான் இருக்கிறது யோகிபாபுவின் நடிப்பு. 
 
இயக்குனர் செல்லக்குட்டி  வாட்டர் மெலன்  திவாகரை விட நூறு மடங்கு பெரிய நடிப்பு அர்ர்ர்ர்ர்ர்ர்ரக்கனாக இருக்கிறார். அவர்  கத்துகிற கத்தில் , ரம்பா ஊர்வசி மேனகை ஆட்டங்களால் நிஷ்டை கலையாத முனிவர்கள் கூட , ” ஐயோ நிறுத்துய்யா …” என்று நிஷ்டை  கலை ந்து எழுந்து விடுவார்கள். மூடிய கண்ணோடு இருக்கும் புத்தர் மகாவீரர் சிலைகள் முன்பு இவரைப் பேச விட்டால் அந்த சிலைகளே  கண்ணைத் தொறந்து விடும். 
 
சரிப்பா.. இதோட படத்தை முடிப்பார்கள் என்று நினைத்தால் . வெளியே வந்து,  வீடு வந்து சேரும்வரை படம் ஓடிக் கொண்டே இருக்கிறது 
 
அனேகமாக காதல் கொண்டேன் படத்தை நினைத்து இந்தப் படத்தை ஆரம்பித்து இருக்க வேண்டும் . 
 
புலியைப்  பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டால்… கூடப் பரவாயில்லை.
 
நெருப்பிலேயே  குதித்தால்  என்ன ஆகும் ? அதுவாக ஆகி இருக்கிறது படம்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *