பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்க. இருவேடம் கார்த்தி, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா, சங்கி பாண்டே, மாஸ்டர் ரித்விக் நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கி இருக்கும் படம்
பணியில் செய்யும் கடமைகளைக் கூட விளம்பர நோக்கத்தில் சமூக வலைதளங்களில் படம் எடுத்துப் போட்டு நல்லவன் பில்டப் கொடுக்கும் போலீஸ் அதிகாரி விஜய பிரகாஷ்( கார்த்தி). அவரது பால்யந்தொட்ட தோழியான வக்கீலுக்கு (ராஷ்மிகா மந்தனா) அது பிடிக்கவில்லை .
உளவுத் துறையால் தேசத் துரோகி என்று அறிவிக்கப்பட்ட தன் தந்தை சர்தாரால் (கார்த்தி) ஏற்பட்ட களங்கத்தை துடைக்கவே அப்படிச் செய்கிறார் காவல் அதிகாரி
பிளாஸ்டிக் பாட்டில்களிலும் கேன்களிலும் கொடுக்கப்படும் தண்ணீரைக் குடிப்பதனால் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகும் மகனைக் (சிறுவன் ரித்து) கொண்டிருக்கும் சமூக செயற்பாட்டாளப் பெண்மணி ஒருவர் ( லைலா) அதற்கு எதிராகப் போராடஆதாரங்களைத் திரட்டப் போகிறார் .
அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி தரும் விதமாக , இந்திய மக்கள் காசு கொடுக்காமல் துளி தண்ணீரைக் கூடப் பெற முடியாது என்ற சூழலை உருவாகும் திட்டம் ஒன்று ஒரே நாடு ஒரே குடிநீர்க் குழாய் என்ற பெயரில் அந்நிய நாடுகளின் சதியோடு உருவாவாகி வருவது அவருக்குத் தெரிகிறது.
அந்தத் தெரிதல் காரணமாகவே அவர் கொல்லப்பட , அந்த வழக்கை ஆராயும் இன்ஸ்பெக்டருக்கு அதன் வழியே தன் அப்பா தேசத் துரோகி இல்லை தேசத்துக்காக நேர்மையாக உழைத்த காரணத்தால் தேசத் துரோகி பட்டம் கட்டப்பட்டவர் என்ற உண்மை தெரிகிறது அதோடு ஒரே நாடு ஒரே குடிநீர்க் குழாய் திட்டம் வேகம் எடுப்பது தெரிய வர , அதைத் தடுக்க முயலும் காவல் அதிகாரிக்கு நடந்தது என்ன என்பதே படம்.
சமூக அக்கறை உள்ள கதையை எடுத்து இருக்கும் மித்ரனுக்கு பாராட்டுகள் .
அப்பாவான சர்தார் கேரக்டரில் அற்புதமாக நடித்துள்ளார் கார்த்தி . உடல் மொழிகள் பிரம்மாதம்.
ராணுவத்தில் முதல் இரண்டு மகன்கள் இருக்க, மூன்றாவது மகன் தறுதலையாக சுற்றுவதாக அப்பா நினைக்க, அப்பாவுக்குக் கூடத் தெரியாமல் ரகசிய உளவாளியாக சர்தார் பெரும் சாதனை செய்ய, அந்த சாதனையில் சிறு துளியாக இருக்கும் பெரிய மகன்களைப் பாராட்டும் சர்தாரின் அப்பா , அந்த சாதனைக்கே காரணமாக சர்தாரை வெட்டிப் பயல் என்று அதே காட்சியில் கரித்துக் கொட்டுவது திரைக்கதையின் ஆழமான நெகிழ்வான பகுதி.
ரஜிஷா விஜயன் மனதில் நிறைகிறார் . காதலன் கன்னத்தில் விட்ட அறை மூலம் அவன் உள்ளங்கையில் எழுதி இருந்த எண்கள் தன் கன்னத்தில் பதிந்து இருப்பதைக் கண்டு பிடிக்கும் காட்சி , மூடியைத் திருகி நாம் குடிக்கும் ஒவ்வொரு பாட்டிலின் மூலமும் நாம் நம் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தின் கழுத்தைத் திருகுகிறோம் என்பதை உணர்த்தும் காட்சி இப்படி படத்தில் பாராட்ட பல காட்சிகள் .
மித்ரனோடு இணைந்து எழுதிய பொன் பார்த்திபன், பிபின் ரகு, ரோஜு, ஜீவி ஆகியோருக்கும் பாராட்டுகள் .
ராஷ்மிகா மந்தனா, லைலா, ரித்து ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர் .
ஜி வி பிரகாஷின் இசை , ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவு இரண்டும் படத்துக்கு பெரும் பலம். கதிரின் கலை இயக்கமும் அருமை.
திலீப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் அதிரடி பிரம்மிப்பு .
அதீத நீளம், முக்கியக் காட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய நேரமும் அழுத்தமும் கொடுக்காதது, ஆகியவை குறைகள்.
தண்ணீர்ப் பிரச்னை ,, உளவாளிகள் விசயம் இரண்டையும் பயன்படுத்திய விதத்தில் போதாமை .
ஆறு குளங்களை மழை வரும் காலத்தில் தூர் வாருவதற்கும் தண்ணீர் கொள்ளையர்களுக்கும் உள்ள தொடர்பை சொல்லாத நிலையில் இந்தப் படம் முழுமை பெறவில்லை என்றே சொல்லலாம்
எனினும் நல்ல நடிப்பு , தொழில் நுட்பச் சிறப்பு, தயாரிப்புத் தரம் இவற்றோடு அவசியமான நல்ல விஷயத்தை சொல்லி வந்திருக்கும் சர்தார் பாராட்டுக்குரிய படம்
