இயக்குனர் மிஷ்கின் கதை திரைக்கதை எழுதித் தயாரிக்க , இயக்குனர் ராம் , மிஷ்கின், பூர்ணா நடிப்பில் மிஷ்கினின் சகோதரரும் ,
பல்லாண்டுகள் இயக்குன்ர் பார்த்திபன் , பிறகு மிஷ்கின் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவருமான ஜி ஆர் ஆதித்யா இயக்கி இருக்கும் படம் சவரக் கத்தி
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் , இயக்குநர் ராம் , நடிகை பூர்ணா , இயக்குநர் மிஷ்கின் , சவரக்கத்தி படத்தின் இயக்குநர் G.R. ஆதித்யா, கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் ,
பாடல் எழுதி இருக்கும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் , ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஆதித்யா, , ” மிஷ்கின் என் அண்ணன் என்று சொல்லமாட்டேன் . எனது குரு . எனது கடவுள் என்றுதான் சொல்வேன் .
அவரது தம்பி என்பதால் அவரிடம் வாய்ப்பைப் பெற முடியாது . உதவி இயக்குனராக எனது அனுபவத்துக்கு கிடைத்த வாய்ப்பு இது .
படத்தில் பூர்ணா மிக சிறப்பாக நடித்துள்ளார் . நான் அண்ணனாக நினைக்கும் இயக்குனர் ராம் , தனது கால் ஒடிந்த நிலையில் எனக்காக மிக சிரமப் பட்டு நடித்துக் கொடுத்தார. அவருக்கு நன்றி ” என்றார் .
“ரொம்ப நாட்களாக எதிர்பார்த்த படம் இது . நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகப் பிடித்த பாத்திரம் இது . காது கேட்காத பெண் கதாபாத்திரம்.
நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது காது கேட்காமல் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது .
எனக்கு இன்னொரு பிறவி என்று இருந்தால் நான் இந்தப் படத்தில் வரும் பெண் போல பிறக்கவிரும்புகிறேன்”என்றார் பூர்ணா
தமிழச்சி தங்க பாண்டியன் தன் பேச்சில் ” படத்தில் இரண்டு பாடல்கள் . அதில் ஒரு பாடலை நான் எழுதி இருக்கிறன் .
சவரக் கத்தி பற்றிய பாடலை மிஷ்கினே எழுதி இருக்கிறார் . எனக்கு தவறாமல் வாய்ப்பு தரும் மிஷ்கினின் அன்புக்கு நன்றி . ‘ எல்லா கத்தியும் தவறு செய்யும் .
ஆனால் தவறே செய்யாத கத்தி சவரக் கத்தி என்ற பொருளில் அவர் எழுதி இருக்கும் அந்தப் பாடல் அருமை ” என்றார் .
(அதுவும் சவரக் கத்தி எதுக்கு . அது தொப்புள் கொடி அறுக்கத்தான் என்ற வரிகள் அபாரம் !)
இயக்குநர் ராம் பேசும்போது “இந்த உலகில் குடிக்க , அன்பைப் பற்றி பேச , படிக்க , கவலை மறக்க ஓர் இடம் எனக்கு இருக்கிறது என்றால் அது மிஷ்கினின் அலுவலகம்தான்.
எல்லோரும் மிஷ்கின் தன்னுடைய அலுவலகத்தில் இத்தனை புத்தகங்களை வைத்துள்ளாரே அதை படிப்பாரா என்று கேட்பார்கள் ?
எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று இல்லை. ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து அப்போதைய மன நிலைக்கு ஏற்றபடி வாசிக்கக் கூட ஒரு நூலகம் அவசியம்தான் .
என்னுடைய படத்திலும் , மிஷ்கினின் படத்திலும் நகைச்சுவை என்ற விஷயமே இருக்காது. ஆனால் இந்த படத்தில் மாறாக டார்க் காமெடி இருக்கும்.
என்னை பொறுத்தவரை மிஷ்கின் எழுதிய மிகச்சிறந்த திரைக்கதை சவரக்கத்திதான். சவரக்கத்தி படத்தில் நடித்த அனுபவம் என்னை முழுமையான மனிதனாக மாற்றியுள்ளது “என்றார் .
நிறைவாக சிறப்புரை ஆற்றிய மிஷ்கின் , “நான் என்னுடைய தம்பியும் இயக்குனருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.
போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரை விட பெரிதாகப் போட்டிருக்கிறார்கள். அதற்கு படத்தை வாங்கியவர்கள்தான் காரணம்.
என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால்தான் அப்படி போட்டிருக்கிருக்கார்கள் என்று நினைக்கிறேன்.
எனக்கு எப்போதும் என்னுடைய படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாகப் போடுவது பிடிக்காது.
எனது காலத்துக்குப் பிறகு ஐம்பது வருடம் கழித்து என்னைப் பற்றியும் , நான் எடுத்த படம் இது என்றும் எல்லோரும் பேசினால் போதும்.
எனக்கு சவரக்கத்தி படத்தின் மூலம் எந்த லாபமும் இல்லை. எனக்கு எந்த லாபமும் வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை.
என் தம்பி என்பதற்காக நான் ஆதித்யாவை இயக்குனர் ஆக்கவில்லை . பல வருடங்கள் முன்பு அவன் என்னிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று வந்த போது திட்டி அனுப்பி விட்டேன் .
பிறகு அவன் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி பிறகு என்னிடம் வந்தான் . ஐந்து படங்களில் கடுமையஹா உழைத்தான்.
அதனாலவனுக்கு சவரக் கத்தி படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தேன்
அரோல் கரோலி என்னுடைய மனதுக்கு நெருக்கமான இசையமைப்பாளர். படத்தில் ஓர் இடத்தில் அம்மாவின் பாசத்தை மையப்படுத்தி ஓர் இசை கொடுத்துள்ளார்.
அது எனக்கு மிகவும் பிடித்த இசை. அவர் சிறப்பான இசையமைப்பாளர். இயக்குநர் ராம் இந்த படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார்.
தன்னுடைய காலில் அடிபட்ட பின்னரும் அவர் படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துகொண்டு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
அவருடைய படமான பேரன்பு சிறப்பாக வந்துள்ளது. அந்த படத்தை உலக திரைப்பட விழா ஒன்றில் அடுத்த வாரம் திரையிடவுள்ளனர்.
கண்டிப்பாக அவர் அந்த படத்துக்காக பல விருதுகளை வாங்குவார் என்று நம்புகிறேன்.
முதன்முறையாக மலையாள நடிகை ஒருவர் தமிழ் படத்தில் சொந்த குரலில் சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார். அது நடிகை பூர்ணா.
இந்த படத்துக்காக அவர் சொந்த குரலில் சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தை 9௦% வெற்றியை நான் பூர்ணாவுக்கு சமர்பிக்கிறேன்.
1௦% வெற்றியை நான் இயக்குநர் ராமுக்கு சமர்பிக்கிறேன்.
திருட்டு வி சி டி , தமிழ் ராக்கர்ஸ் என்னென்னவோ சொல்கிறார்கள் . இந்த நாட்டில் எல்லோரும் உண்டு .
திருடனும் விலைமாதுவும் கூட உலகில் உண்டு . அவரவர் வேலையை அவரவர் செய்து கொண்டுதான் இருப்பார்கள் .ஆனால் ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பலரோடு சேர்ந்து அகன்ற திரையில் அண்ணாந்து பார்ப்பது என்பது ஒரு சமுதாயத் திருவிழா .
நாம் கடவுளை அண்ணாந்து பார்ப்போம் . அப்புறம் சினிமாவைத்தான் அண்ணாந்து பார்ப்போம்
எம்.ஜி.ஆர் , சிவாஜி , ரஜினி , கமல் போன்ற நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எல்லோரும் பைத்தியம் ஆகி இருப்போம் .
அவர்கள்தான் இத்தனை வருடங்களாக நம்மை மகிழ்வித்து வருகிறார்கள். அவர்கள் நடித்த படங்களை நான் திரையரங்குக்குச் சென்று கண்டுள்ளேன்.
அப்படங்கள் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பை அளித்துள்ளன.. திரையரங்கில் படம் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் “என்றார் .
திருட்டு விசிடிக்கு எதிரான வாதத்தைக் கூட இவ்வளவு அழகாக முன் வைக்க மிஷ்கினால்தான் முடியும் .