குவாண்டம் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் கே வித்யாதரன் தயாரித்து எழுதி இயக்க, யோகி பாபு, பூமிகா, கே எஸ் ரவிக்குமார், நிழல்கள் ரவி, பக்ஸ், சாம்ஸ், கேபிள் சங்கர் , பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பல இளைஞர்கள் இளம்பெண்கள் மாணவ மாணவியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ஸ்கூல் .
எப்படியாவது மாணவர்களை கசக்கிப் பிழிந்து, பாஸ் ஆக்கி, போட்டி ஸ்கூலை வென்று, தனது பள்ளியின் கமர்ஷியல் மதிப்பை உயர்த்த , சுய முன்னேற்ற நூல் என்ற பெயரில் போட்டி பொறாமை மனப்பான்மையை வளர்க்கும் நூலை எழுதுகிறார் அந்தப் பள்ளியின் பிரின்சிபால் (பக்ஸ்) .
அதைப் படிக்கும் மாணவர்கள் போட்டி மனப்பான்மையோடு மேல் சாதி கீழ் சாதி , கருப்பு நிறம் வெள்ளை நிறம் , மதவெறி போன்ற பல உணர்வுகளுக்கு ஆளாகிறார்கள்.
அதில் பாதிக்கப்படும் ஒரு மாணவனும் மாணவியும் தற்கொலை செய்து கொள்ள, அவர்கள் ஆவியாக வந்து அந்த புத்தகத்தின் பிரதிகளை எரிக்க, விசாரிக்க இன்ஸ்பெக்டர் (கே எஸ் ரவிக்குமார் ) வர, அதே பள்ளியில் படிக்கும் அவரது மகனும் செத்துப் போக, ஒரு சாமியார் ( வித்யாதரன்) வந்து, நடந்த கதையைச் சொல்ல,
பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட நல்ல ஆசிரியர்கள் ( யோகி பாபு, பூமிகா சாவ்லா) மீண்டும் பள்ளிக்கு வர,
நடந்தது என்னவா இருந்தா என்ன என்ற முடிவுக்கு நாம் வர,
அதுதான் ஸ்கூல் .
படத்தின் பெயரே ஸ்கூல் என்பதாலோ என்னவோ படத்தின் எழுத்து இயக்கம் மேக்கிங் எல்லாம் ஸ்கூல் பசங்க லெவலுக்குதான் இருக்கு.
குரூப் ஸ்டடி படிக்கும் மாணவிகளில் ஒருத்தியைக் கொல்ல வரும் ஆவி, மற்ற மாணவிகள் ஒவ்வொருவர் மேலும் அடுத்தடுத்து ஏறி , குறிப்பிட்ட அந்த மாணவியைக் கொலை செய்ய முயலும் காட்சி மட்டும் ரைட்டிங் ஆக, அசத்தல் .
சாதி மத பாகுபாட்டை ஒழித்து எல்லோரும் சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழைப் பெற வேண்டும் என்று படம் சொல்லும் கருத்து மேலோட்டமாகப் பார்த்தால் ஜூப்பரு என்று சொல்லத் தோன்றும். ஆனால் உள்ளுக்குள் அது இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்கு எதிரான மேனாமினுக்கித்தனமே .
மொத்தத்தில் ஸ்கூல் … ஆசிரியர் பாடப் புத்தகம் என்று உருப்படியாக எதுவும் இல்லாத பழைய கட்டிடம்