7 Cs என்டர்டைன்மென்ட் சார்பில் ஆறுமுகக் குமார் தயாரித்து எழுதி இயக்க விஜய் சேதுபதி, ருக்மிணி வசந்த், யோகி பாபு, பப்லு பிரித்விராஜ் , திவ்யா பிள்ளை, அவினாஷ் , ராஜ்குமார் நடிப்பில் வந்திருக்கும் படம் .
ஜெயிலில் இருக்கும் தன் நண்பனின் (ஆறுமுகக் குமார்) ஆலோசனைப்படி மலேசியாவுக்கு செல்கிறான் விடுதலையான குற்றவாளி போல்ட் கண்ணன் (விஜயசேதுபதி)
அங்கே அவனை, தான் வரச் சொன்ன ஆள் என்று தவறாக என்னும் அறிவுக்கரசன் (யோகிபாபு) , தன்னோடு அழைத்துச் செல்கிறான் .
அறிவுக்கரசன் ரூட் விடும் பிசினஸ் உமன் கல்பனாவிடம் (திவ்யா பிள்ளை), போல்ட் கண்ணன் வேலைக்குச் சேர, தங்கும் இடத்தில் எதிர் வீட்டில் உள்ள பெண் ருக்மிணி மீது ( ருக்மிணி வசந்த்) போல்ட் கண்ணனுக்கு காதல்.
ருக்மிணி உடன் இருக்கும் போலீஸ் அதிகாரி ராஜதுரை ( பிரித்விராஜ் பப்லூ) அவளது அம்மாவின் இரண்டாம் கணவன். பாலியல் வன் கொடுமைகளுக்கு புகார் கொடுக்க வரும் பெண்களை மிரட்டி பாலியல் வன்முறை செய்பவர் அந்தப் பெண்களை வீட்டுக்கே கொண்டு வருபவர் .
வீட்டில் தனது பங்கான பெரும் தொகையைத் தந்தால் வீட்டை விட்டுப் போய் விடுகிறேன் என்று அவர் சொல்ல , ஹோட்டலில் வேலை செய்தபடி அதற்காக உழைக்கிறாள் ருக்மிணி .
கல்பனாவுக்கு கடன் அதிகமாக அதை அடைக்க பணம் தேவை .
காதலிக்காக பணம் தர வேண்டி கந்து வட்டிக்கு போல்ட் கண்ணன் கடன் வாங்கப் போக, போன இடத்தில் பணம் தரும் தாதாவிடமே (அவினாஷ்) கப்பலில் சூதாட்டம் ஆடி பெரும் தொகைக்கு கடன்படுகிறான் போல்ட் கண்ணன்.
சீட்டுக்கட்டில் உள்ள ஏஸ் கார்டை வைத்து அவன் ஆடும் அந்த ஆட்டம் ஒரு நிலையில் கந்துவட்டி தாதாவின் திருட்டு ஆட்டத்தால் போல்ட் கண்ணனுக்கு பாதகமாக ஆக,
கந்து வட்டிக் கடன், காதலியின் சித்தப்பா பிரச்சனை , வேலை தந்த கல்பனாவின் கடன் பிரச்சனை இவற்றைத் தீர்க்க, மலேசிய வங்கி ஒன்றின் பணம் கொண்டு போகும் வாகனத்தை கொள்ளையடிக்கிறான் போல்ட் கண்ணன்
அப்புறம் என்ன ஆச்சு என்பதே ஏஸ் .
கொஞ்சம் களைப்பாகத் தெரிந்தாலும் ட்ரிம் ஆன தோற்றம் அதே புன்னகைக் கண்கள் , மெல்லிய உணர்வு மாற்றங்கள் என்று சோபிக்கிறார் விஜய் சேதுபதி.
ருக்மிணி வசந்த், அழகு நடிப்பு இரண்டிலும் சிறப்பு. சிரிக்கும் போது இடுங்கும் கண்கள் அழகு .
நீண்ட இடைவெளிக்குப் பிறகு , சிரிக்கும் அளவுக்கு காமெடியாக நடித்துள்ளார் யோகிபாபு (அதுவும் இரண்டாம் பாதியில் தான்)
டைலர் மேட் கேரக்டரில் பப்லு மற்றும் அவினாஷ் .
ஸ்டைல் ஆன அழகான மேக்கிங் கொடுத்து இயக்கி இருக்கிறார் ஆறுமுகக் குமார்
கரன் ராவத்தின் ஒளிப்பதிவு ரம்மியம் .
ஜஸ்டின் பிரபாகரன் பாடல் இசை , சாம் சி எஸ் ஸின் பின்னணி இசை மற்றும் பாடல் வரிகள் இனிமை .
எல்லாம் இருந்தும் சொதப்புவது கதை திரைக்கதைதான்.
பல முறை பல சினிமாவில் பார்த்து புளித்த விஷயங்களை எல்லாம் தன் பங்குக்கு ஒரு முறை வரிசைப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். . very poor writing !
போல்ட் கண்ணன் என்ற பெயருக்கு காரணம் நட்டு போல்ட் திருடுபவன், போல்டானவன் என்று காரணம் சொல்வார்கள். அதை அப்படியே நீட்டித்து உசைன் போல்ட்டின் தீவிர ரசிகன் ,” நான் போல்டா இருந்தா தானே எனக்கு பியூட்டிபுல் பொண்ணு கிடைக்கும் ” என்று தொடர்ந்து டெவலப் செய்து சுவாரஸ்யப்படுத்துவர்கள் என்று நினைத்தால் அதை பாதியிலேயே விட்டு விட்டார்கள்
சூதாட்டத்தில் அந்த ஏஸ் கார்டு முக்கிய இடம் வகிக்க, படத்தின் பெயரும் அதுவாகவே இருக்க, இடைவேளை சமயத்தில் விஜய் சேதுபதி வேறு அந்த ஏஸ் கார்டையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்க, அந்த ஏஸ் கார்டை வைத்து ஏதோ பண்ணி அட்டகாசமான திரைக்கதை அருமையான காட்சிகள் வைத்து தெறிக்க விடப் போகிறார்கள் என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு உட்கார்ந்தால்..
குற்றால அடிவாரத்தில் குடித்து விட்டுப் போடப்படும் பாட்டில்களில் உள்ள மட்டமான டாஸ்மாக் சரக்கை தண்ணி கலக்காமல் குடித்து விடும் குட்டிக் குரங்குகள் தறி கெட்டு தலை கீழாய் இஷ்டத்துக்கு நடக்குமே அப்படி திரைக்கதை தள்ளாட, பட்டப் பகலில் வம்படியாக நாடு ரோட்டில் பேங்கின் பணம் கொண்டு போகும் வாகனத்தை மோதி கொள்ளையடிக்கிறார் விஜய் சேதுபதி.
இதுக்கு ஏஸ் என்ற பெயர் எல்லாம் எதுக்கு? மூணு சீட்டு என்ற பெயரே போதுமே? ( போல்ட் கண்ணன்- ருக்மிணி , கல்பனா என்ற ஒரு மூணு சீட்டு, அறிவுக்கரசன் – போல்ட் கண்ணன் – கல்பனா என்ற ஒரு மூணு சீட்டு, ருக்மினி- போல்ட் கண்ணன் – ராஜ துரை என்ற ஒரு மூணு சீட்டு. இப்படி மொத்தம் மூணு, மூணு சீட்டு!)
கொள்ளையால் வரும் பிரச்னை ஒரு பக்கம் இருக்க, லாட்டரியில் வேறு போல்ட் கண்ணனுக்கு பணம் விழுகிறது. அந்த காட்சிகள் எதுக்கு இந்தப் படத்துக்கு? திரைக்கதைன்னா அவ்வளவு விளையாட்டா போச்சு !)
சூதாட்டத்தில் ஊறிய வில்லன் இடைவேளையில் கூட ஹீரோவை தோற்கடிக்கக் கூடாதா? அவன் நியாயமாகவே ஆடி இருக்கக் கூடாதா? அப்படி ஜெயித்து நீ கடன் வாங்கி ஆடிய பணத்திற்கு வட்டி வரணும் இல்லன்னா அசல் வரணும்ன்னு மிரட்டக் கூடாதா? இந்த ரூட்டில் ஒரு சிறப்பான திரைக்கதை அமைத்திருக்கக் கூடாதா?
மொத்தத்தில் ஏஸ்….. ஜோக்கர்கள் இருந்தும் ஒரிஜினல் ரம்மி அமையவே இல்ல..