ஏடகி என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர் சித்தார்த் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹாஸ்ரா ஸ்ரீ, எஸ் ஆபியா தஸ்னீம், பாலாஜி நடிப்பில் S . U . அருண் குமார் எழுதி இயக்கி இருக்கும் படம்
அண்ணன் இறந்த நிலையில் அண்ணன் மகளான சிறுமியை( சஹஸ்ரா ஸ்ரீ) தன் உயிரென எண்ணிப் போற்றி, அண்ணியை ( அஞ்சலி நாயர்) மதித்து வாழும் இளைஞன் ஒருவன் ( சித்தார்த் ) .
பள்ளிக் காலத்தில் காதலித்த நிலையில், பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் வாங்கும் நாளில் சந்திப்பதாக காதலி சொல்லி இருந்தும் அண்ணன் இறந்ததால் போக முடியாமல் ஆகி விட, காதலியையும் இழந்த நிலையில் பழனி நகராட்சியில் அலுவலராகப் பணி புரிபவன் .
பல வருடங்கள் கழித்து மீண்டும் காதலியை (நிமிஷா சஜயன்) பார்த்த நொடியில், ‘ அது அண்ணன் மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும் நேரம்’ என்பதால் , காதலியிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் பள்ளிக்கூடம் கிளம்பிப் போகும் அளவுக்கு அவனுக்கு அண்ணன் மகள்தான் உலகமே. அந்த சிறுமியும் சித்தப்பா என்பதன் செல்லச் சுருக்கமாக சித்தா என்று இவனை அழைத்து அவன் மேல் உயிராக இருக்கிறாள் .
காதலியுடன் பிணக்கு தீர்ந்து சுமூகமான நிலையில், வேறொரு பேரிடி. மிக நெருங்கிய நண்பன் ஒருவனின் ( பாலாஜி) அண்ணன் மகள் யாரோ ஒருவனால் பலாத்காரம் செய்யப்பட , சூழல் காரணமாக அந்தப் பழி இவன் மேல் விழுகிறது .
தன் அக்கா புருஷனை அடித்தபோது கூட கோபப்படாத அந்த நெருங்கிய நண்பன், இப்போது இவனையே குற்றவாளி என்று நம்பி இவனை அடித்துத் துவைக்கிறான் . காதலி யதார்த்தமாகவும் அண்ணி நடுநிலைமையிலும் சொல்லும் சில வார்த்தைகள் கூட அவர்களும் தன்னைத் தவறாக நினைப்பதாக இவனுக்கு உணர்த்த, உடைந்து போகிறான் .
ஒரு நிலையில் உண்மை புரிந்து நாயகன் மேல் உள்ள களங்கம் நீங்க, இப்போது இன்னும் பேரிடியாக தன்னை சித்தா என்று உயிர் ஒழுக அழைத்த அண்ணன் மகளும் காணமல் போகிறாள் .
ஒரு சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து எரித்து விட்ட தகவல் வர , நாயகன் அங்கே அலறிப் பதறி ஓட , அப்புறம் நடந்தது என்ன என்பதே சித்தா .

அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த பெற்றோரே பிள்ளைகள் கையில் மொபைல் ஃபோனைக் கொடுக்க, அந்த ஃபோனுக்கு அடிமையாகும் குழந்தைகளை அந்த ஃபோன் மூலமே காமுகர்கள் கடத்துவதை சொல்லும் வகையில் இது மிக முக்கியமான படம் . இங்கே ஜொலிக்கிறார் எழுத்தாளர் அருண்குமார்
அண்ணிக்கும் கொழுந்தனாருக்கும் இடையிலான பாசத்தை உரிமையை கடமையை, மாய்மாலம் பண்ணாமல் சீன் போடாமல் மிக எளிமையாகவே புனிதப்படுத்தும் வகையில் ஜொலிக்கிறார் சமூகப் பொறுப்புள்ள படைப்பாளி அருண்குமார் .
காட்சிகளை இயல்பாக, கதாபாத்திரங்களின் உயிரோட்டமான நடைஉடை பாவனைகளோடு காட்டி இருப்பதோடு, நாம் பார்க்கும் காட்சிகளில் மனிதர்களின் நகர்வுகள் எப்படி ஒன்றுடன் ஒன்று கலவையாக ஊடுருவி நடக்குமோ அதை அப்படியே காட்டி
எளியஆனால் உயிர்ப்பான வசனங்கள் எழுதி, நடிக நடிகையரிடம் இருந்து ஆழமான கூர்மையான முகபாவனைகள் பெற்று சாதித்த வகையில் சிறப்பான பிலிம் மேக்கராக மின்னுகிறார் இயக்குனர் அருண்குமார் .
பாசம் , அப்பாவித்தனம், பெருந்தன்மை….. தன்னைத் தவறாக நினைக்கும் காதலியின் மொத்தக் கோபத்தையும் ஒரு குற்றவாளியின் நிலையில் எதிர்கொண்டு, பின்னர் தான் பட்ட இழப்பை மென்மையாக சொல்லும் விதம்…. வீண் பழியில் உடைந்து போவது, உண்மை தெரிந்ததும் ஜஸ்ட் லைக் தட் மீளும் இறகு மனம், மகள் கடத்தப்பட்ட நிலையில் சித்தம் கலங்கி உழல்வது, அடுத்தடுத்து நடக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் ஒரு நிலையில் பாறாங்கல்லை உருட்டும் சிங்கம் போல உறுமுவது .. என்று அற்புதமாக நடித்து இருக்கிறார் சித்தார்த்.
”சித்தா உன்னைத் தொட்டா என் கிட்ட சொல்லு.. ” என்று அண்ணி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அழுகை புன்னகை கலந்து ஒரு சிரிப்பு சிரிக்கும் இடத்தில் சித்தார்த், புத்தன் ஆகிறார்.
சிலப்பதிகாரத்தில் சொல்கிற புனையா ஓவியம் போல தோன்றும் நிமிஷா சஜயன் , நடிப்பில் யதார்த்த நாயகியாக ஜொலிக்கிறார் . பின்னால் சொல்லும் கதைக்குப் பொருத்தமாக….. ஆரம்பக் காட்சியில் சித்தார்த் தொட்ட நொடி, அதிர்ந்து உதறும் காட்சியில் பிரம்மிக்க வைக்கிறார் . சின்னச் சின்ன முகபாவனைகள் உடல் மொழிகளில் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு அமர்கிறார் நிமிஷ்.
குழந்தைகள் இருவரும் நடிப்பில் தங்கமென மின்னுகிறார்கள்.

அண்ணியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர் இளம் வயது விதவையின் இறுகிய முகத்தை அப்படியே கொண்டு வருகிறார். பாலாஜி உள்ளிட்ட நண்பர்கள், போலீஸ் அதிகாரிகள் அனைவரும் சிறப்பு. அந்த பெண் போலீஸ் நடிகை அபாரம் . சல்யூட் மேடம்.!
பாலாஜி சுப்பிரமணியனின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு எல்லா வகையிலும் யானை பலம். குறிப்பாக ஒளி ஆளுமை இருள் பயன்பாடு இரண்டும் அபாரம் . ஒரு ரசவாதமே நடத்தி இருக்கிறார் பாலாஜி சுப்பிரமணியம்
திபு நினன் தாமசின் தென்றல் இசையில் படத்தில் வரும் ‘கண்கள் ஏதோ..’ பாடல், உள்ளத்தின் ரகசிய அடுக்குக்குள் புகுந்து ஏதோ செய்கிறது . பலமுறை கேட்டாலும் திகட்டாமல் இன்னும் இன்னும் கேட்கக் கேட்கிறது .
குறிப்பாக கார்த்திகா வைத்தியநாதன் , ”நீ லே ஏ ஏ ஏ சா பார்க்க..” என்று வீணையின் கம்பிகள் அதிரவ்துபோல குரலை ஓர் உதறு உதறிப் பாடியிருப்பதைக் கேட்கும்போது, ஒட்டு மொத்த உடலும் சட்டென்று ஒரு கோடி வண்ணத்துப் பூச்சியாக சிதறி மாறிப் பறக்கிறது.
யுகபாரதியின் வரிகள், ஒளிப்பதிவு இயக்கம் என்று எல்லா வகையிலும் இது ஒரு முழுமையான பாடல் . ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்.. அத்தி பூத்தாற்போல இப்படி வரும் பாடல்கள் தரும் ரசனை திருப்தி உணர்வு ஆயிரம் கோடி வசூலை விடப் பெரியது
இவ்வளவு இருந்தும் திரைக்கதையில் அநியாயமாகக் கோட்டை விட்டிருக்கிறார்கள் .
ஒரு சிறுமி பலாத்காரம் செய்யப்படும் போது , அதுவும் சூழல் காரணமாக அந்தப் பழி, பாசமுள்ள ஒரு நல்லவன் மீது விழும்போது, அதிர்ச்சி அவமானம் என நொறுங்கிப் போய் அவன் கொல்லப்படுகிறான்.
அதுவரை அவன் நம்பிய உறவுகள் நட்புகள் அவனைத் தவறாகப் பார்க்கும் போது, அல்லது தவறாகப் பார்ப்பதாக பாதிக்கப்பட்டவன் உணரும்போது, அங்கே பல நம்பிக்கைகள் கொல்லப்படுகின்றன.
பல உறவுகள் கொல்லப்படுகின்றன. .
பிறகு அவன் நிரபராதி என்று புரிய வந்தாலும் உறவு நட்புகளின் செத்துப் போன நம்பிக்கைகள்? புதைக்கப்பட்ட பழைய மனநிலை?
பாலியல் பலாத்காரம் என்பது – அதுவும் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமை என்பது- அந்தக் குழந்தைக்கு ஏற்படுத்தும் கொடிய – முதன்மையான — பாதிப்புகளையும் மீறி , இப்படி வேறு பல கொலைகளையும் செய்கின்றன .

அது ஒன்று போதும் பாதிக்கப்பட்டவன் குற்றவாளியைக் கொல்ல.
இந்தக் கதையே போதும் இந்தப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்க.
ஏனெனில் இதுவரை சினிமாவில் சொல்லப்படாத திரைக்கதைப் பாதை இது .
ஆனால் இடைவேளைக்கு முன்பே அதில் இருந்து விலகி நாயகனின் அண்ணன் மகளும் கடத்தப்படும்போது, ‘என்னடா பெருமாளைப் பேன் ஆக்குகிறார்களே…’ என்று மனம் வருத்தப்பட்டது.
சரி… ஏதோ ஒரு வகையில் பின்னால் சேர்த்துக் கட்டிக் கூட்டி வருவார்கள் என்று பார்த்தால் , அதுவரை சொன்ன சமூக அக்கறைக் கதையை மறந்து திடீரென்று டிராக் மாறி என்னென்னமோ சொல்கிறார்கள்.
குற்றவாளியுடன் நாயகன் நிகழ்த்த வேண்டிய உரையாடல் இந்தப் படத்தின் மிக முக்கியமான ஒன்று . அப்படி ஒரு விஷயம் இல்லாமலே போயிருப்பது, இந்தப் படத்தில் சிறுமிகளுக்கு நடந்திருக்கும் அநியாயத்தை விட பெரிய அநியாயம்.
நாயகியின் பிளாஷ்பேக் அதிர்ச்சிக் கதை வேண்டாத வேலை என்றால், அவள் நாயகனுக்கு எதிராகப் பேசும் வசனங்கள் எல்லாம் யானை தலையில் தானே மண்ணை வாரி அள்ளிப் போட்டுக் கொள்ளும் கதை .
எப்படியோ பேன், ஈறு ஆவதற்குள் படத்தை முடித்து விடுகிறார்கள்.
போர்வாளை வைத்துக் கொண்டு புடலங்காய் நறுக்கி இருக்கிறார்கள்
எனினும்,
சிறுமிகள் யாரோ ஒருவனின் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதற்குப் பின்னால் பெற்றோரின் தவறுகளும் இருக்கின்றன என்பதை சொன்ன பொறுப்புக்கும்
அண்ணன் இறந்த வீட்டில் தம்பியின் கடமை என்ன .. அண்ணி என்ற உறவை எப்படிப் பார்க்க வேண்டும் என்று சொன்ன மேன்மைக்கும்
இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத சித்தப்பன் உறவை தூக்கிப் பிடித்த புதுமைக்கும்
இந்தப் படத்தைக் கொண்டாடலாம் . அந்த வகையில் பார்க்க வேண்டிய படம் இது .
இந்த மூன்று விஷயங்களுக்காகவும் , சித்தா…. உனக்கு ஒரு முத்தா .