AXESS பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்க , பாபி சிம்ஹா, கலையரசன் , ரேஷ்மி மேனன் ஆகியோர் நடிக்க , சக்திவேல் பெருமாள் சாமி இயக்கி இருக்கும் படம் உறுமீன் .
படத்தைப் பற்றிக் கூறும் இயக்குனர் ” அவ்வையார் எழுதிய மூதுரை நூலில் வரும் ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரையில் வாடியிருக்குமாம் கொக்கு ‘ என்ற செய்யுளில் இருந்து இந்த பெயரை எடுத்துள்ளேன். வல்லின றகரம் உகரத்துடன் சேர்ந்து வரும் ஒரு சில வார்த்தைகளில் முக்கியமான பெயர் இந்த உறுமீன் .
கொக்குவிடம் மீன் சிக்குவது அதிர்ச்சிகரமான விஷயம் . நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில் அதை பார்க்கும்போது தெரியும் . பல சமயம் அப்படி சிக்குவது அந்த மீனுக்கு தெரியாது. அப்படி சமூகத்தில் உலவும் பல கொக்குகள் ஒரு மீனை துரத்தினால் என்ன ஆகும் என்பதே இந்தப் படம் ” என்கிறார் .
“ஒரு சாதாரண மனிதன் , அவனுக்கு வரும் பிரச்னைகள் , அதில் இருந்து அவன் அடுத்த கட்டத்துக்கு போவது ஒரு லெவலில் அது ஒரு மாதிரி மிஸ்ட்ரியான ஃபேண்டசி த்ரில்லர் ஆக போவது என்று படத்தின் கதை சிறப்பாக இருந்ததால் ஒத்துக் கொண்டு நடித்தேன் ” என்கிறார் பாபி சிம்ஹா.
மெட்ராஸ் படத்தில் பாசிட்டிவான நண்பன் கதாபாத்திரத்தில் நடித்த கலையரசன் இதில் வில்லனாக நடிக்கிறார் . காரணம் ? “கதையும் கேரக்டரும்தான் ” என்கிறார் கலையரசன்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் தேசிய விருது பெற்ற பாபியை வாழ்த்தி வீர வாள் கொண்டு கேக் வெட்டினார்கள் . ஆளுயர புகைப்படம் ஒன்று தயாரிப்பாளர் சார்பில் வழங்கப்பட்டது.