சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,
படத்தின் இசையமைப்பாளரும், நடிகருமான சிம்பு, தனுஷ் இருவரும் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்
விழாவில் தனுஷ் பேசும்போது, “2002-ம் ஆண்டில்தான் சிம்புவும் நானும் நாயகர்களாக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானோம். அவர் 3 வயதிலேயே நடிக்க வந்தவர்,
அப்படி ஒரு தருணத்திற்காகத் திட்டமிட்டு உழைத்தவர். ஆனால், நானோ வேண்டா வெறுப்பாகத்தான் நடிக்க வந்தேன்.
நான் முதல் படத்தில் நடித்தபோது ‘காதல் அழிவதில்லை’ என்கிற படத்தில் சிம்பு அட்டகாசமான ஒரு நடனத்தை ஆடியிருந்தார். அந்த நடனத்தை அமைத்துக் கொடுத்த நடன இயக்குநர்தான் என் படத்திற்கும் நடன இயக்குநர்.
அவர் என்னிடத்தில் சிம்புவை பார்த்து, ‘அவரைப் போலவே நடனமாடுங்கள்’ என்று வற்புறுத்தினார். பின்பு அந்தப் பாடல் காட்சியை நான் பார்த்தேன்.
‘சத்தியமா எனக்கு சிம்பு மாதிரி நடனம் ஆட வரவே வராது’ என்பதை அப்போதே தெரிவித்துவிட்டேன். இன்றுவரை, என்னால் சிம்புவைப் போல் நடனமாட முடியாது.
இந்தப் படத்தின் மூலமாக ஒரு இசையமைப்பாளராக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிறார் என் நண்பர் சிம்பு. அவருக்கு எனது வாழ்த்துகள்.
அனிருத், யுவன், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டவர்கள் பாடியிருக்கின்றார்கள். இத்தனை பேர் பாடியிருக்கும்போது சிம்பு ஏன் என்னைப் பாட அழைக்கவில்லை என்று தெரியவில்லை.
இந்த விழாவிற்கு சிம்புவே கூப்பிட்டதால்தான் நான் வந்தேன். இதேபோல் என்னுடைய பட விழாக்களுக்கு நான் அழைப்பு விடுத்தால் அவரும் வருவார். அவரும் நானும் நல்ல நட்புடன்தான் உள்ளோம்.
மற்றவர்கள் கூறுவது போல் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குள்தான் பிரச்சனை உள்ளது.
நான் இங்கு வந்தபோது சிம்புவின் ரசிகர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல் என் விழாக்களுக்கு அவர் வரும்பொழுது எனது ரசிகர்களும் அவருக்கு இதேபோன்ற வரவேற்பை அளிப்பார்கள். ரசிகர்கள் அப்படிதான் இருக்கவேண்டும்.
எங்கள் இருவருக்குள்ளும் எப்பதும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இடையில் இருப்பவர்களால்தான் பிரச்சினையே.
வாய்ப்புக் கிடைத்தால் அவருடன் நடிக்க காத்திருக்கிறேன். இக்கட்டான தருணங்களில் அவர் என்னுடன் நிற்பார். அதுவே எனக்குப் பெரிய பலம்.
நண்பர் சிம்புவின் ரசிகர்களின் இத்தனை பேரின் வரவேற்பு அவருக்கு இருக்கும்போது அவர் எதற்கும் பயப்பட வேண்டிய தேவையே இல்லை. ஆனால் என்னுடைய சின்ன ரிக்வெஸ்ட்.
சிம்பு இனிமேல் வருடத்திற்கு இரண்டு படங்களிலாவது நடிக்க வேண்டும். அதுவும் அவரது ரசிகர்களுக்காக நடித்தே தீர வேண்டும்.
ரசிகர்களாகிய உங்களிடத்திலும் நாங்கள் சொல்லிக் கொள்வது என்னவென்றால் யாரையும் வெறுக்காதீர்கள். பிடித்தால் கொண்டாடுங்கள். பிடிக்கவில்லையா.
ஒதுங்கி விடுங்கள். நீங்களும் வாழுங்க.. எங்களையும் கொஞ்சம் வாழ விடுங்க..” என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு..!
நடிகர் சிம்பு பேசும்போது, “என் நண்பர் சந்தானத்துக்காகத்தான் இந்தப் படத்திற்கு இசையமைக்க சம்மதித்தேன். அவரது வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்க பலமாக இருப்பேன்.
எனது மதிப்பிற்குரிய எதிரி தனுஷ். ‘துள்ளுவதோ இளமை’ பார்த்துவிட்டு, என்னய்யா இது, ஹீரோ சரியில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால், ‘காதல் கொண்டேன்’ படத்தைத் நானும் தனுஷ், செல்வராகவனுடன் இணைந்து ஆல்பர்ட் திரையரங்கில் முதல் காட்சியில் பார்த்தேன்.
படம் பார்த்த பின்பு, ‘அடுத்த 15 வருடங்களில் நாம் இரண்டு பேரும் பெரிய நடிகர்களாக வருவோம்’ என்று சொன்னேன். எல்லோரும், ‘ஓவர் கான்பிடன்ஸ் கூடாது’ என்றார்கள். ஆனால் நான், ‘ஓவர் கான்பிடன்ஸ் இருந்தாலும் தப்பில்லை’ என்கிறேன்.
கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி சில செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. அவைகள் அனைத்தும் பொய் என்று நான் சொல்ல மாட்டேன். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை.
அந்த விஷயத்தில் என் மீது தவறுகள் இருந்தால், அதை படம் எடுக்கும்போதோ அல்லது எடுத்து முடித்த பின்னரோ… அல்லது படம் ரிலீஸ் ஆகும்போதோ கூறியிருக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு, படம் வெளியாகி ஆறு மாதங்களுக்கு பிறகு புகார் கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் மீதும் சில தவறுகள் இருக்கும், இருக்கிறது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இது போன்ற விஷயங்களைப் பற்றிப் பேச ஒரு முறை உள்ளது, அவர்கள் செய்தது சரியல்ல.
அதே சமயம் நானும் நல்லவன் இல்லை. அதையும் ஒத்துக் கொள்கிறேன். நடந்தது நடந்துவிட்டது
இப்போது என் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள். அதிகபட்சமாக என்ன செய்துவிடுவீர்கள். என்னை படங்களில் நடிக்க விடாமல் தடுப்பீர்கள்.
அவ்வளவுதானே..? செஞ்சுக்குங்க.. ஆனால், என் ரசிகர்களுக்கு நான் ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பேன். அதை யாராலும் தடுக்க முடியாது.
மணிரத்னம் ஸார் இப்போதும் ‘நான் படத்தில் இருக்கிறேன்’ என்றுதான் கூறி வருகிறார். அவருக்கு என் மீது ஏன் அவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லை. அவரும் உங்களைப் போல எனது ரசிகரா என்பதும் தெரியவில்லை.
‘வரும் ஜனவரி 20-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும்’ என கூறியுள்ளார். அந்த படத்தில் நடிப்பதற்காக உடம்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இருப்பினும் அது சற்று கடினமாக இருக்கிறது. விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன்.
எனக்கு என்ன பிரச்சினை என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன். எல்லோரும், ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்றுதான் பாலோ செய்வார்கள். ஆனால் நான் அந்த ஆர்டரை மாற்றிப் போட்டுக் கொண்டதுதான்.
எனக்கு முதலில் தெய்வம்தான். அப்புறம்தான் குரு. அதற்கடுத்துதான் தந்தை. கடைசியாகத்தான் தாய். முன்னதில், தாய்க்காக தெய்வம் விட்டுக் கொடுத்தது.
ஆனால், நான் தெய்வத்திற்காக அந்த தெய்வத்திற்கு நிகரான தாயை விட்டுக் கொடுத்து நான்காவதாகப் போட்டிருக்கிறேன்.
இந்த ஆர்டர் மாற்றியிருப்பதுதான் பிரச்சினை என்றால், நான் அதற்காகக் கவலைப்படமாட்டேன். இந்த ஆர்டர்தான் எனக்கு எப்பொழுதும்..” என்றார் உறுதியாக..!