வடஅமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 31ஆவது ‘தமிழ் விழா ‘ , வரும் ஜூன் மாதம் 29,30, மற்றும் ஜூலை 1 ஆம் தேதிகளில்,
டெக்சாஸில் உள்ள ப்ரிஸ்க்கோ சிட்டி என்ற இடத்தில் ‘ மரபு , மகளிர் , மழலை ‘ என்ற தலைப்பில் மிகப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.
இது குறித்த செய்திக்காக இவ்விழாக் குழுவின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இதில் மாண்புமிகு. மா.பா பாண்டியராஜன் ( தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் ) , கல்வியாளரும் , திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் ,
பேராசிரியர் முனைவர் கா. ஞானசம்மந்தன் , விஜிபி சந்தோசம் , நடிகர் ஆர்.பாண்டிய ராஜன், கால்டுவெல் வேல்நம்பி , மது சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டிய ராஜன் , “சிக்காகோ உலகத் தமிழ் மாநாடு 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
இது அங்கீகாரம் பெற்ற 10வது உலகத் தமிழ் மாநாடு ஆகும். FETNA பேரவையின் 31வது தமிழ் விழாவும் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதன் அறிக்கையில் ” செந்தமிழ் இருக்கை செய்வோம் ” என்ற வாசகம் உள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்தது.
தமிழ் மக்கள் யூதர்களுக்கு இணையானவர்கள். தமிழ் மக்களின் மக்கள் தொகை தமிழகத்தில் மட்டும் 71/2 கோடி உள்ளது .
ஆனால் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். உலக அளவில் யூதர்களுக்கு இணையாக தமிழ் மக்களின் மக்கள் தொகையும் உள்ளது.
யுனஸ்க்கோ உலகத்தின் மதிக்க தகுந்த மொழிகளுள் தமிழுக்கு 14வது இடத்தை கொடுத்துள்ளது.
நாம் தமிழை 14வது இடத்திலிருந்து 10வது இடத்துக்கு கொண்டுவரவேண்டும்.
உலகத்தில் முதலில் சிங்கப்பூர்தான் தமிழை தங்கள் ஆட்சி மொழியாக அறிவித்தது அதன் பின்னர் இலங்கை போன்ற நாடுகள் அறிவித்தன.
பண்டைய காலத்தில் தமிழர்கள் நாடு பிடிக்க , வணிகத்துக்காக , மருத்துவத்துக்காக , தொழில்நுட்பத்துக்காக என நான்கு அலையாக தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தனர்.
நமது புலம் பெயர்ச்சியின் வேர்கள் வித்தியாசமாக இருக்கும். யூதர்களை விரட்டியது போல் நம்மை யாரும் விரட்டி அனுப்பவில்லை.
தமிழர்களின் படையை எதிர்க்கவே அன்று பல நாடுகளில் படைகள் இல்லை . அப்படி ஒரு வீர வரலாறு நமக்கு உண்டு .
Trinity School of Music வெஸ்டர்ன் இசைக்கு இருப்பது போல் இங்கே தமிழ் பண்பாட்டு மையம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
நாங்கள் research portal ஒன்றை உருவாக்க உள்ளோம். சிக்காகோ ஆறாவது நாடாக உலக தமிழ் மாநாட்டை நடத்துகிறது.
அமெரிக்காவில் யூதர்களுக்கு பிறகு அவர்களுக்கு இணையாக அதிகமாக சம்பளம் வாங்கும் இனம் தமிழ் இனம் தான்.
நமது பெருமையை அமெரிக்கர்களுக்கும் , உலகத்துக்கும் புரிய வைக்க வேண்டும்” என்றார்.
ஐசரி கணேஷ் தன்பேச்சில் “Fetna பேரவையின் 31வது விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் என்னோடு கலந்து கொண்டிருக்கும்,
அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் மட்டுமே இன்றைய தமிழக சட்டப்பேரவையில் உள்ளவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய ஒரே நபர்.
விஜிபி சந்தோசம் அவர்கள் தான் எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கே ஒரு திருவள்ளுவர் சிலையை வைப்பவர் . அவருடைய சிறப்பே தனி சிறப்புதான்.
தந்தையும் மகனும் சேர்ந்து படிக்கும் ஒரே பல்கலைகழகம் எங்கள் வேல்ஸ் பல்கலைகழகம் தான்.
நடிகர் ஆர்.பாண்டியராஜன் விரைவில் டாக்டர். பாண்டியராஜன் ஆகப் போகிறார்.” என்றார்
திருக்குறளுடன் தன்னுடைய பேச்சை ஆரம்பித்த வி.ஜி .சந்தோசம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்று கணியன் பூங்குன்றனார் அவர்களின் வரிகளையும் கூறி ,
தொடர்ந்து, ” தமிழ் என்றும் வாழ்ந்துக்கொண்டே இருக்கிறது. எல்லா நாடுகளிலும் தமிழ் சங்கம் உள்ளது. பெட்னா அமைப்பு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழர் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வருடம் நானும் Fetna தமிழ் விழாவில் கலந்துகொள்கிறேன்” என்றார்