சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் பி சவுத்ரி தயாரிக்க, வடிவேலு , பகத் பாசில், கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா நடிப்பில் வி.கிருஷ்ணமூர்த்தியின் கதை திரைக்கதை வசனம் மற்றும் ஆக்க இயக்கத்தில் சுதீஷ் சங்கர் இயக்கி இருக்கும் படம்.
திருடரான தயாளன் என்ற நபர் (பகத் பாசில்) நாகர்கோவிலில் ஒரு வீட்டுக்கு திருடப் போன போது, அங்கு வேலாயுதம் என்ற ஒரு நபர் (வடிவேலு) சங்கிலியால் கட்டிப் போடப்பட்டு இருப்பதைப் பார்க்கிறார். தனக்கு முதுமையால் ஏற்படும் நினைவிழப்பு நோய் (அல்சைமர் ) இருப்பதாகவும் அதனால் மகன் கட்டிப் போட்டு விட்டுப் போய் இருப்பதாகவும் அவிழ்த்து விட்டு வெளியே அழைத்துப் போனால் இருபத்தைந்து ஆயிரம் பணம் தருவதாகவும் சொல்கிறார் .
‘ஏ டி எம் போனால் எனக்கு பின் நம்பர் ஞாபகம் வந்து விடும் ‘ என்று அவர் சொல்ல தயாளன் அவரை அழைத்துப் போக , அங்கே வேலாயுதம் அக்கவுண்டில் மேலும் இருபத்தைந்து லட்சத்து பதினெட்டாயிரம் இருப்பதை அறிகிறான் தயாளன். . எப்படியாவது வேலாயுதத்தின் பின் நம்பர் அறிந்து மொத்த பணத்தையும் சுருட்டவும் அதுவரை அவருடன் இருக்கவும் முடிவு செய்கிறான் தயாளன். .
மீண்டும் வீட்டுக்கு போக விரும்பாத வேலாயுதம் விழுப்புரம் பகுதியில் உள்ள ஒரு நண்பர் , திருவண்ணாமலையில் உள்ள உறவினர் (லிவிங்ஸ்டன்) , பாலக்காட்டில் உள்ள உறவுகள்…. என்று இவர்களைப் பார்க்க விரும்புவதை அறிந்து அங்கு எல்லாம் அழைத்துப் போவது என்று போய் வழியில் எப்படியாவது ஏ டி எம் பின் நம்பரை அறிந்து வேலாயுதம் வங்கிக் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் சுருட்டுவது தயாளனின் திட்டம் .
போதாக்குறைக்கு தன்னைப் போல இன்னொரு ஃபிராடு ஆன கணேஷை(விவேக் பிரசன்னா) துணைக்கு கொள்கிறார் தயாளன் .
மது அருந்தும் பழக்கம் உள்ள இவர்கள் தங்கும் இடங்களில் எல்லாம் வேலாயுதம் பிள்ளையை போதைக்கு ஆளாக்கி, ஏ டி எம் பின் நம்பரை அறிய தயாளன் முயல. தினமும் அடித்துப் போட்டது போல தூங்குவது என்னவோ தயாளன்தான்.
ஒரு நிலையில் வேலாயுதம் பிள்ளைக்கு அல்சைமர் நோயெலாம் உண்மையில் இல்லை என்ற உண்மை…. ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை படம் பார்க்கும் ரசிகனுக்கே புரியும் அளவு அந்த சஸ்பென்ஸ் பல்லிளித்த பிறகு…. அதை வைத்து ‘தயாளனிடம் மாட்டியது வேலாயுதம் பிள்ளை இல்லை வேலாயுதம் பிள்ளையிடம் மாட்டியது தான் தயாளன் ‘ என்று ஓர் ஒலகமகா டுவிஸ்ட் சொல்லி இடைவேளை விடுகிறார்கள் .
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் . ‘பொண்டாட்டி அவுசாரி ஆனது ஊரு முழுக்க தெரிந்த அப்புறம் கடைசியாகத்தான் புருஷனுக்குத் தெரியுமாம் . அப்படி எப்பவாவது படம் பார்க்கும் ஆளுக்குக் கூட அப்பவே புரிஞ்ச அந்த விஷயத்தை அரை மணி நேரம் கழித்து சொல்லி இடைவேளை விடுகிறது படக்குழு .
இப்படி ஒவ்வொரு ஊரில் தங்கும்போதும் ஒவ்வொரு கொலை நடக்கிறது என்று ஒரு எக்ஸ்ட்ரா துணி ஒட்டுப் போட்டு அப்படியே ஓட்டுகிறார்கள் படத்தை.
கவுன்சிலிங் வல்லுநராக இருந்த – வேலாயுதம் மனைவிக்கு (சித்தரா) ஏற்பட்ட ஒரு நோய் , அந்த நிலையிலும் பள்ளி ஆசிரியர்கள் செய்யும் சிறுமி பாலியல் பலாத்காரங்கள் .. அதன் வியாபார நெட் ஒர்க் .. … அந்த சிறுமிகளுக்கு உதவ முடியாத நிலையில் மனைவி தற்கொலை செய்து கொள்வது ., சாவதற்கு முன்பு கணவனிடம் அவர் வைக்கும் கோரிக்கை அதன் விளைவு என்று…
சுமாரான ஒரு கதை தானாகவே வந்தாலும், “வருவியா? நாங்க விடுவமா? நல்லா வந்துருவியா நீ ? விட்ருவமா நாங்க ?” என்று அந்த அந்தக் கதைப் போக்கை தங்கள் திரைக்கதை என்ற கட்டையால் அடித்து துவைத்து நொறுக்கி இருக்கிறார்கள் .
எம் ஜி ஆரின் ஒளிவிளக்கு படத்தை நினைவூட்டும் அந்த ஆரம்பக் காட்சி
அப்போது வடிவேலு சொல்லும் போய் அது அப்படியே உண்மையாக இருந்து ஒரு அட்டகாசமான பாச நேச மன சாட்சி திரைக்கதையை சிறப்பாக எழுதி – சிறப்பாக .. அந்த வார்த்தை ரொம்ப முக்கியம் – நல்ல மேக்கிங் கொடுத்து ..
வடிவேலு , பகத் பாசில் என்ற இரண்டு நடிப்பு ராட்சசர்களை அந்த திரைக்கதைக்குள் முக்கி எடுத்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு. ஆனால் விதி யாரை விட்டது ?
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வந்த மாயாவி மாரீசன் என்ற சுமாரான டி வி தொடரை இப்போது நினைத்து ஏங்கும் அளவுக்கு ஒரு திரைக்கதை எழுதி இருக்கிறார்கள் .
விளைவு ? பகத் பாசிலை செயற்கையான நாடகத்தனமான நடிப்பில் பார்க்கும் ஓர் அரிய வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்படுகிறது . ‘இருங்கடா .. ஐயோ படுத்தறீங்களே”’ பாணியிலேயே ஒரு நிலை வரை பேசி, படுத்துகிறார் வடிவேலு . இதையும் மீறி ஓரிரு இடங்களில் வடிவேலுவின் கேரக்டர் பொருத்தம் கவனிக்க வைக்கிறது .
படத்தின் இரண்டாம் பாதியில் கதையின் ஜீவாதார விஷயத்தை ஒரு காட்சியில் ஒரு பெண் பேசிக் கொண்டிருக்கிறார் . நாம் எப்படி படத்தை எந்த உணர்ச்சியும் இன்றி பார்த்துக் கொண்டு இருக்கிறோமோ அதை விட உணர்ச்சியற்ற முகத்தோடு அதை கேட்டுக் கொண்டு இருக்கிறார் பெண் போலீஸ் அதிகாரியாக வரும் கோவை சரளா . யப்பா சாமி .
ஒரு விஷயத்தை ஒரு காட்சியில் வசனமாக சொல்கிறார்கள் . பின்னாடி பத்து நிமிடம் கழித்து அதை காட்சியாகக் காட்டுகிறார்கள் . இப்படி செக்குமாடாக திரைக்கதை சுழல்கிறது .
சிறுமி பாலியல் குற்றவாளி என்ற கதைக்கு வசனம் எவ்வளவு முக்கியம்.? ஒரு சில இடங்களில் ஏதோ சத்தியத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி அதுவாக ஓகே சொல்லும் வசனம் வருகிறதே ஒழிய நல்ல வசனத்துக்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
உதாரணமாக ஒரு காட்சியில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த ஆசிரியரை. இரவில் பள்ளி கிரவுண்டில் கொடிக்கம்பத்தில் கட்டி வைத்துக் கொல்கிறார்கள். கொல்வதற்கு முன்பு எம் ஜி ஆரின்” என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே ..” பாடல் பாடப் பாடப்படுகிறது .
பாடலுக்கு முன்பு “ஒரு சினிமா நடிகரை எல்லாரும் வாத்தியார் ன்னு கூப்பிட்டாங்க .ஏன் தெரியுமா? அவர் சினிமாவுலயும் நல்ல விசயங்களை சொன்னதால..
அப்போ நிஜ வாத்தியாரான நீ எவ்வளவு நல்லவனா இருக்கணும். ஆனா நீ என்ன பண்ணி இருக்க?” என்று ஒரு வசனம் வைத்து விட்டு எம் ஜி ஆர் பாடலைப் பாடிக் கொன்றால் … எப்படி இருந்திருக்கும்? ஆனா .. அதுக்கெல்லாம் சின்சியரா எழுதணும் . எழுத்து முக்கியம் .
இவர்தான் இறுதி டார்கெட் இவர்தான்.. . இவரோடுதான் படம் முடியும் என்பது எல்லோருக்கும் புரியும்படி காட்சிகள் வைத்து வைத்து முக்கால் மணி நேரம் கழித்து அதையே கிளைமாக்ஸாக காட்டினால் எப்படி இருக்கும் ? அதுதான் இந்தப் படம்.
சரி இந்த விஷயம் இப்படி என்றால் … அந்த விஷயம் அப்படி என்றால்… அதற்கு முந்தைய விஷயம் இப்படித்தான் இருக்கும் என்று எளிய ரசிகனுக்கும் புரியும் வகையில் இருக்கும் காட்சிகளை எல்லாம்…….. அதாவது ஒரு ஓட்டத்தில் விளக்கத் தேவை இல்லாத காட்சிகளை எல்லாம் கூட… கடைசிவரைக்கும் விளக்கிக் காட்டி , ஒரு முட்டு சந்தில் நிக்க வைத்து , மாடுகளை கொண்டு வந்து முட்ட விடுவது போல, திகட்டத் திகட்ட சொல்லித்தான் முடிக்கிறார்கள்.
ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரே … ”கடைசியா மூத்திர சந்தில் நிக்க வச்சு கும்முன்னு கும்மிட்டு எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான் இவன் ரொம்ப நல்லவன் சொல்லி, மேற்கொண்டு ரெண்டு அடி அடிச்சாங்கம்மா ..” என்று, அப்படி கதறி அழும் நிலைக்கு ரசிகர்கள் போகிறார்கள் .
ஒரு சூழலுக்குப் பிறகு தமிழ் சினிமா மீண்டும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட ஆரம்பித்த காலத்தில் வித்தியாசமான கதைகளால் சும்மா தெறிக்க விட்ட தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி எப்படி இப்போது இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்தார் என்பதுதான் ஆச்சரியம் .
யுவன் சங்கர் ராஜாவின் இசை , ஸ்ரீஜித் சாரங்கின் படத் தொகுப்பு இரண்டும் பலன் தரவில்லை. கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு சிறப்பு.
இயக்குனரே கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எல்லாம் எழுதாமல் ஒவ்வொன்றையும் தனித்தனியாக செய்தால் நன்றாக வரும் என்று ஒரு பொதுவான கருத்து இருக்கிறது . அதை முற்றிலும் மறுக்கவும் முடியாது. காரணம் நன்றாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் அது சரியே .
ஆனால் குறைந்தபட்சம் திரைக்கதை ஒருவராகவும் இயக்கம் ஒருவராகவும் இருந்தால் அந்தப் படம் எப்படி பிள்ளையார் பிடிக்கப் போய் வேறொன்றாக முடியும் என்பதற்கு இந்தப் படம் உதாரணம்.
திரைக்கதையாளருக்கும் இயக்குனருக்கும் இப்படி ஒரு மிஸ் மேட்சிங் உள்ள படம் அண்மையில் வந்ததாக ஞாபகமே இல்லை. ‘அவர் என்னமோ எழுதி இருக்கார்; என் வேலை பொம்மை காட்டுறது ‘ என்ற உணர்வே இயக்குனரிடம் இருக்கு.
ஒரு கெட்டவர் கொல்லப்படுகிறார் என்பதற்கு ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு விஷுவல் இருந்தால் தான் அவர் கொல்லப்படும் காட்சி ரசிகனுக்கு உணர்வெழுச்சியை ஏற்படுத்தி திருப்தி தரும். ( யதார்த்தம் என்ற பெயரில் அது ஆபாசமாக இருக்கத் தேவையில்லை.; ஆனால் விஷயம் எமோஷனலாக காட்சிப் படுத்தப்பட வேண்டும்)
அதை விட்டு விட்டு அவன் அப்படி செஞ்சான். அந்த தப்பு செஞ்சான் என்று முப்பது செகண்ட் சொல்லி விட்டு கொடூரக் கொலைகள் செய்வது எல்லாம் வீடியோ கேம் உணர்வையே தருது . அதுவும் அந்த கிளைமாக்ஸ் …
வேலாயுதம் பிள்ளையை தவறாக நினைக்கும் தயாளன் கடைசியில் உண்மையை உணர்வதற்குப் பின்னால் ஒரு எமோஷனல் பிளே இருந்திருந்தால் கிளைமாக்சில் விசில் பறந்து இருக்கும் ஆனால் அவ்வளவு பதட்டத்திலும் அவர் வில்லனிடம் பேசும்போது தயாளனுக்கு போன் போட்டு விட்டு பேசினாராம். அவ்வளவு வேகமாக டூ வீலரில் பறந்து வரும் தயாளன் போனில் அதைக் கேட்டதை வைத்தே, இருபது வருட சக அயோக்கிய நண்பனுக்கு எதிராக களம் இறங்கினானாம்.
ஸ்டார்ட் கேமரா சொல்லி விட்டு சீன் எழுதியது போல அப்படி இரு போங்கு ஆட்டம் .
இவ்வளவு பெரிய படத்தில் நல்ல விசயங்களே இல்லையா என்றால் இருக்கு. அதை சொல்லாமல் இது முழுமை அடையாது.
மனைவியின் நல்லெண்ண பொது நலக் கோரிக்கையை நிறைவேற்ற அவளுக்கு உள்ள பிரச்னையையே தனது பிரச்னையாக சொல்லிக் கொண்டு ஆக்ஷன் களமிறங்கும் முதியவர் என்ற அந்த டிராக் அபாரம்.
ஒரு தேர்ந்த திரைக்கதையாளன் இதை வைத்தே ஒரு நல்ல ஆக்ஷன் செண்டின்மென்ட் காமெடி சென்சேஷனல் திரைக்கதையை எழுதி விட முடியும் . ஆம் ஒரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியரால்.
என்னிடம் எம் ஜி ஆர் போல நடித்துக்காட்டும் நபர்களுடன் நான் ஒரு விஷயம்தான் சொல்வேன். . ஒரு கழுதை கையை தலைக்கு மேல் தூக்கி (சரி…. முன் காலை) ஆட்டினால் கூட எம்ஜிஆர் மாதிரி இருக்கு என்று தமிழ்நாடு சொல்லி விடும். அது எம்ஜிஆருக்கு தான் பெருமை கையை தூக்கி நடித்துக் காட்டும் நபருக்கு அல்ல .
யார் ஒருவர் தலைக்கு மேல் கையை தூக்காமல் எம் ஜி ஆர் போல நடிக்கிறாரோ அந்தப் பெருமைதான் நடிப்பவருக்கும் சேரும். கையை தூக்காமல் எப்படி எம் ஜிஆரை கொண்டு வர முடியும் என்று கேட்பவர்களிடம் முன்பெல்லாம் நானே எம் ஜி ஆறாக மாறி குறுகுறு பார்வை பார்த்து புன்சிரித்து , புஜம் முறுக்கி முன் கையை டைட் பண்ணி எம் ஜி ஆரைக் காட்டி பாராட்டும் வாங்கி இருக்கிறேன் .
இந்தப் படத்தில் ஒருவர் அதை செய்திருக்கிறார். ‘நேத்து ஒருத்தரை ஒருத்தரு பார்த்தோம்’ பாடல் ஒலிக்கும் நடன நிகழ்ச்சியில் ராமராஜனை தூவிய எம் ஜி ஆர் போல நடிக்கும் ஒருவர், அதை அழகாக செய்து இருக்கிறார் .
இந்த ரெண்டு விசயங்களுக்காக படக் குழுவுக்கு பாராட்டுகள் .
மாரீசன்.. அரைவேக்காடு
