பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிக்க, பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, தீபா சங்கர், செம்மலர் அன்னம், விவேக் பிரசன்னா நடிப்பில் ராம் சங்கையா என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கி உள்ள படம்.
தண்டட்டி என்பது கிராமத்துப் பெண்கள் காதில் மாட்டிக் கொள்ளும் தங்கத்தால் ஆன , கனமான அணிகலன் .
இன்னும் கொஞ்ச நாளில் ஒய்வு பெற வேண்டிய வயதில், ஒரு குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்த காரணத்தால் மனித உரிமை அமைப்பின் விசாரணைக்கு ஆளாகி மாற்றல் வாங்கி புதிய பகுதிக்கு வந்திருக்கும் காவலர் ஒருவர் (பசுபதி). அந்தப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஊரில் எந்த பிரச்னை என்றாலும் போலீஸ் போகாது. காரணம் அவர்களை எல்லாம் போலீசால் சமாளிக்க முடியாது .
அந்த ஊரில் இருந்து ஒரு சிறுவன் தன் அப்பத்தாவைக் காணவில்லை என்று புகார் தர வருகிறான். மேலும் சில பெண்களும் தங்கள் அம்மாவைக் காணவில்லை என்று வருகிறார்கள் . காணமல் போனது ஒரே பெண்தான் .
சக காவலர்களின் எச்சரிக்கையையும் மீறி விசாரணையில் இறங்கும் அந்த சீனியர் காவலர், அந்தப் பெண்மணியை (ரோகினி ) கண்டு பிடிக்கிறார். அவர் இறந்து போக, சிறுவனின் வேண்டுகோள்படி இறந்து போன உடலோடு ஊருக்கும் வருகிறார். அப்பத்தாவின் சுயநலமான பாசமில்லாத மகள்கள், மருமகள் , குடிகார மகன் இவர்கள் பற்றி அறிகிறார்.
இந்த நிலையில் பிணமாக இருக்கும் அப்பத்தாவின் காதில் இருக்கும் – லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தண்டட்டி காணாமல் போகிறது.
அப்பத்தாவின் மகன்”தண்டட்டியைக் கண்டுபிடித்துக் கொடுக்காவிட்டால் கொன்று விடுவேன்” என்று காவலரை மிரட்ட, மற்றவர்களும் கிண்டல் கேலி செய்ய , இந்த எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்டு ஒரு கனமான நெகிழ்வான சாதிய அரசியலை தண்டட்டியோடு சேர்த்து உருக்கி, செதுக்கி தட்டி , சிறப்பான படத்தைக் கொடுத்து இருக்கிறார் ராம் சங்கையா . .
அர்த்தமுள்ள ஆழமான திரைக்கதை. முதல் பாதியில் வரும்— தண்டட்டியைப் போன்றே கனமான அந்த – ஃபிளாஷ்பேக்கும்- யூகிக்க முடியாத அற்புதமான அதன் தொடர்ச்சியான இரண்டாம் பகுதிக் காட்சிகளுமே இந்தப் படத்தின் ஜீவன்.
சில காட்சிகள் மேலோட்டமாகப் பார்த்தால் லாஜிக் இல்லாதது போல தெரியும் . ஆனால் ஆழமாக யோசித்தால் லாஜிக் இருப்பது புரியும் . அப்படி ஒரு அறிவுப்பூர்வமான திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் . கோவக்கார காவலர் இந்த ஊரில் மட்டும் ஏன் எல்லோரிடமும் மென்மையாக நடந்து கொள்கிறார். அதே நேரம் ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டும் ஏன் வெறி கொண்டு அடிக்கிறார் என்பதை எல்லாம் பின்னால் யோசிக்கும் போது அடடே என்று ஆச்சர்யப்பட முடிகிறது
மற்றவர்கள் எல்லாம் காமெடி என்ற பெயரில் வஜனம் பேஜிக் கொண்டும் கோணங்கி சேட்டைகள் செய்து கொண்டும் இருக்க, பசுபதியும் ரோகிணியும் தங்கள் கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்து நடிப்புக் கடலில் மூழ்கி முத்து எடுத்திருக்கிறார்கள்.
நாடகத்தனமாக, பெண்கள் சண்டை போடுவது , கட்டி உருள்தல் போன்றவற்றை இன்னும் இயல்பாக நிஜமான் காமெடியாக ரசனையாக எடுத்து இருக்கலாம் . படத்தின் துவக்கத்தில் கொஞ்ச நேரம் செயற்கையான நடிப்பு வறண்ட வசனங்கள். அதே போல இரண்டாம் பகுதியிலும் கொஞ்ச நேரம் படம் இழுத்தாலும் அது ரசிகனைப் பாதிப்பதற்குள் சட்டென்று சுதாரித்துக் கொள்கிறது படம். இந்த விஷயங்கள் படத்துக்கு பின்னடைவாக இல்லாமல் இருக்க வேண்டும்.
மகேஷ் முத்து சாமியின் ஒளிப்பதிவு கிராமியப் பரப்புகளை அழகாகக் காட்டுகிறது . சாவு வீட்டின் சந்தடி நெரிசல்களையும் உணர வைக்கிறது . படத்தின் முக்கியமான காட்சிகள் ரசிகனின் இதயத்துக்குள் நுழைவதற்கான உணர்வுப் பாதையை தனது அர்த்தமுள்ள இசை மூலம் சிறப்பாகக் போட்டுக் கொடுத்துள்ளார் இசை அமைப்பாளர் சுந்தர மூர்த்தி . சாவு வீட்டில் மாலைகளை தொங்க விட்டிருக்கும் வகையிலேயே கவனிக்க வைக்கிறார் கலை இயக்குனர் வீரமணி. சிவா நந்தீஸ்வரனின் படத்தொகுப்பு சீரியஸ் காட்சிகளில் சிறப்பு
தண்டட்டி என்பது கனமான தங்கம்.
தண்டட்டி படமும் கனமான தங்கமான படம்
