‘தமிழில் ஹிட் ; தெலுங்கில் சூப்பர் ஹிட்’ என்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தோழா . இதை முன்னிட்டு நல்ல விமர்சனம் தந்த ஊடகங்களுக்கும் அவற்றின் வழியே மக்களுக்கும் நன்றி சொல்ல ,
பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி சொன்னது படக் குழு . தமன்னா மிஸ்ஸிங் என்றாலும் நாகர்ஜுனா வந்திருந்தார் .
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய நிர்வாகத் தயாரிப்பாளர் ராஜீவ் காமினேனி ” முதன் முதலாக எங்கள் பிவிபி நிறுவனம் ஹிட் , சூப்பர் ஹிட் என்ற வார்த்தைகளை சந்திக்கிறது . ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது .
படம் ரிலீஸ் ஆவதற்கு பத்து நாள் முன்பு ஆய்வகத்தில் தீ விபத்து ஏற்பட்டது . அதில் எங்கள் படத்தின் காட்சிப் பதிவுகளும் எரிந்திருக்கலாம் என்ற செய்தி வந்த போது அதிர்ந்து போனோம் .
ஆனால் எங்கள் படம் எந்த எந்த சேதமும் இல்லாமல் தப்பியது . அப்போதே எங்கள் படம் வெற்றி பெறும் என்று இயக்குனர் வம்சியிடன் நான் சொன்னேன் . அதுதான் நடந்தது ” என்றார் சந்தோஷமாக .
வசனகர்த்தா முருகேஷ் பாபு பேசியபோது ” இந்தப் படத்தில் எழுதியது மிக மகிழ்வான அனுபவம் . வசனங்கள் மிக இயல்பாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குனர் வம்சி காட்டிய ஆர்வம் எனக்கு மகிழ்வாக இருந்தது .
அதே போல கார்த்தியும் ‘ஹீரோயிசமாக எந்த வசனமும் வரவேண்டாம்’ என்பதில் உறுதியாக இருந்தார் . சம்மந்தப்பட்ட ‘சீனு கதாபாத்திரம் என்ன பேசுமோ அது மட்டுமே படத்தில் வரட்டும்’ என்றார் .
நாகர்ஜுனாவிடம் வசனம் சொல்லித் தர எப்போது நெருங்கினாலும் முதலில் சேர் போட்டு உட்கார வைத்துதான் வசனம் சொல்ல வைப்பார் . அவ்வளவு கண்ணியம் .
படத்தில் வசனங்கள் சிறப்பாக வர , இந்த சூழலும் ஒரு காரணம் ” என்றார் .
“இந்தப், படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எனக்கு தோன்றுகிறது என்பதை,
நான் படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னேன் . அது அப்படியே நடந்தது சந்தோசம் .
நாகர்ஜுனா காட்டிய அன்பும் கார்த்தி காட்டிய அக்கறையும் மறக்க முடியாதது ” என்றார் படத் தொகுப்பாளர் கே.எல். பிரவீன் .
“நாகார்ஜுனா , கார்த்தி சார் இருவரோடும் நடித்தது மகிழ்வான அனுபவம் ” என்றார் பிளாக் பாண்டி
படத்தில் கார்த்தியின் சகோதரியாக நடித்த நிகிதா பேசும்போது” எனக்கு தமிழ் தெரியாது . எனவே படத்தின் தமிழ் வசனங்களைப் பேச கார்த்தி சார் மிக உதவியாக இருந்தார் .
நாகர்ஜுனா சாருடன் நடித்தது சந்தோஷமான விஷயம்” என்றார்
இயக்குனர் வம்சி படிபள்ளி பேசும்போது ” இந்தப் படததைப் பார்த்து விட்டு எனக்கு பல பிரபலங்களிடம் இருந்து பாராட்டு வந்தது.
அவற்றில் மாபெரும் இயக்குனர் மகேந்திரன் என்னைப் பாராட்டியதை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது அப்படி ஒரு பாராட்டு
அது .மிக அற்புதமான வசனங்கள் கொடுத்த ராஜு முருகனுக்கும் முருகேஷ் பாபுவுக்கும் நன்றி ” என்றார் .
நாகர்ஜுனா தன் பேச்சில்
” படங்கள் வெற்றி பெறுவதை விட ஒரு படத்தால் மரியாதை அதிகமாவது மகிழ்ச்சியான விஷயம் . எங்களைப் போன்ற நடிகர்களின் ஏக்கம் அந்த மரியாதைதான் .
இந்தப் படம் எனக்கு கொடுத்த வெற்றியை விட கொடுத்த கவுரவம் ரொம்பப் பெரியது . ஆந்திராவை விட தமிழ்நாட்டில் இருந்து என்னைப் பாராட்டி எனக்கு வந்த போன் கால்கள் குறுஞ்செய்திகள் ஏராளம் .
அது மட்டுமல்ல . என மனைவி அமலாவின் சென்னை நண்பர்கள் மற்றும் அவர் நடனம் பயின்ற கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளி தோழிகள் பலரும் அவர் போனுக்கு ஏகப்பட்ட மெசேஜ்களை அனுப்பி,
‘கண்டிப்பாக உன் கணவரிடம் காட்டு’ என்று கூறி இருந்தார்கள் . இந்த கவுரவம் ரொம்பப் பெருசு
இனி எந்த மாதிரியான வித்தியாசமான கேரக்டர்களையும் ஏற்கலாம் என்ற தைரியத்தை, தன்னம்பிக்கையை எனக்கு இந்தப் படம் தந்துள்ளது .,
முருகேஷ் பாபு எனக்கு வசனம் சொல்லிக் கொடுத்த விதம் அற்புதமானது . சில சமயம் தூங்கும்போது கூட அவர் குரல் என் காதில் கேட்பது மாதிரி இருக்கும்
கார்த்தியோடு சேர்ந்து பணியாற்றியது என் சக்தியை புதுப்பித்து உள்ளது . எனது இளமை நாட்களை நான் இப்போது மீண்டும் உணர்கிறேன். என் அடுத்த படங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும் . ” என்றார்
இறுதியாகப் பேசிய காரத்தி
” பருத்தி வீரன் படத்துக்குப் பிறகு என்னை ரசிகர்களும் மீடியாக்களும்,நண்பர்களும் குடும்பத்தினரும் அதிகம் பாராட்டி எழுதியது இந்தப் படத்துக்காகத்தான் .
அதிலும் என் அம்மா எனக்கு கொடுத்த பாராட்டு மறக்க முடியாதது . பொதுவாக நான் சீரியஸ் ரோல்களே நடிக்கிறேன் என்ற வருத்தத்தில் இருந்த என் அம்மா இந்தப் படம் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டதோடு ,
இயக்குனர் வம்சிக்கும் போனில் பேசி நன்றி சொன்னார்
தவிர பாலச்சந்தர் படம் பார்த்தது போல இருக்கிறது என்று பலரும் பாராட்டியபோது எனக்கு ஏற்பட்ட சந்தோஷம் அளவில்லாதது.
இது ஒரு பக்கம் இருக்க , இந்தப் படத்தில் நடித்து முடித்தபோது வாழ்க்கை என்றால் என்ன என்பது புரிந்தது . இனி மனைவி பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன் ” என்றார் .
தோழா பார்ட் 2 இல் நடிக்க நாகர்ஜுனா , கார்த்தி இருவருமே ஆர்வம் காட்டினார்கள் .
” ஆனால் அந்தப் படத்தில் கார்த்தியின் சக்கர நாற்காலியில் உட்கார வைத்து என்னை டான்ஸ் ஆட வைக்க வேண்டும்” என்றார் நாகர்ஜுனா
நல்லாருக்கே கதை !