மிடில் கிளாஸ் @ விமர்சனம்

அக்சஸ் பிலிம் பேக்டரி , குட் ஷோ சார்பில் தேவ் மற்றும் துரை  தயாரிக்க,முனீஸ்காந்த், விஜயலக்ஷ்மி அகத்தியன் , வேல ராமமூர்த்தி, ராதாரவி, மாளவிகா அவினாஷ், கோடாங்கி வடிவேல் நடிப்பில் கிஷோர் ராமலிங்கம் இயக்கி இருக்கும் படம். 

ஊரில் கட்டப்படும் பள்ளிக் கூட்டமே அப்பா கொடுத்த நிலத்தில்தான் காட்டப்படுகிறது என்ற அளவுக்கு வாழ்வாங்கு வாழ்ந்த  ஒரு தந்தையின் (வேல ராமம்மூர்த்தி) மகன் (முனீஸ்காந்த் ) சென்னையில் ஒரு வாடகை வீட்டில் மனைவி (விஜயலக்ஷ்மி) மற்றும் ஒரு மகன் ஒரு மகனுடன் வசிக்கிறான். அப்பாவின் எத்தனையோ பேர் உயர்ந்து இவனுக்கு பலன் இல்லை என்ற நிலையில் வாழ்க்கை. சொத்துக்கள் எதுவும் இப்போது ஊரில் இல்லாத நிலையில் ஊரில் வயல் வாங்கி விவசாயம் செய்து வாழ அவனுக்குள் ஒரு கனவு உண்டு .
 
கைக்கும் வாய்க்குமோ பத்தாத சம்பளத்துடன்  வாழ்க்கை . எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும்  பிள்ளைகள் படிப்பு செலவைக் கூட சமாளிக்க முடியாத நிலை. மனைவியின் அக்கா வசதியாக வாழ்வதால் கல்யாணம் காய்ச்சி என்றால்  அக்கா அளவுக்கு நாமும் செய்வதுதான் கவுரவம் என்பது மனைவியின் எண்ணம் . 
 
இது போன்ற விஷயங்களால்  கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை 
 
ஒரு நிலையில் வீட்டை விட்டே அவன் கோவித்துக் கொண்டு போய் விட , பின்னர்  பேச்சிலர் நண்பன் ரூமில் இருந்து அவளே  அழைத்து வருகிறாள் . 
 
வீட்டை சுத்தம் செய்து ஒழுங்கு படுத்த எண்ணி அவன் பரணை சுத்தப்படுத்தப் போக, அங்கே அப்பாவின் பழைய பெட்டி . உள்ளே ஒரு பழைய பத்திரம். 
 
1970 களில் இதே சென்னையில் மண்ணடியில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தபோது அங்கு வேலைக்கு வருகிறான் ஒரு ராஜஸ்தானி இளைஞன் . அவனுக்கு ஆதரவளித்து வேலை தருகிறார் அப்பா. ஒரு நிலையில்  அப்பா மீண்டும் கிராமத்துக்கே போக  எண்ணி கடையை ராஜஸ்தான் நபருக்கு இலவசமாக கொடுக்க முடிவு செய்ய, மறுக்கும் அவன்  வட்டி இல்லாக் கடனாக  வேண்டுமானால் வாங்கி கொள்கிறேன் என்று அப்படியே வாங்கி கொள்கிறான் .
 
அந்த பத்திரம்தான் அது . 
 
மேலும் பண நெருக்கடி வரும் சூழலில் அதை எடுத்துக் கொண்டு போய் சேட்டைப்  பார்க்கிறான் . முதலில்  வில்லன் போல தோற்றம் காட்டும் அவர் பின்னர் ஒரு கோடி ரூபாய்க்கு செக் கொடுக்கிறார் சேட்டு .மனைவி இப்போது வாயெல்லாம் பல்லாக கொஞ்சுகிறாள். நிறைய கடன் வாங்கி ஜாம் ஜாம் என்று செலவு செய்கிறாள் . 
 
 வளர்பிறை சமயத்தில் அதை நிரப்பி வங்கியில் போடலாம் என்று அவன் நினைக்க, வரும் வழியிலேயே அலுவலக வேலை ஒன்றை முடித்து விட்டு , விபத்தில் சிக்கிய ஒருவனை மருத்துவமனையில் சேர்த்து விட்டுப்  பார்த்தால் செக் காணவில்லை.
 
சேட்டிடம் போய் விஷயத்தை சொல்லி ஸ்டாப் பேமண்ட் கொடுத்து வேறு செக் வாங்கலாம் என்றால் அவருக்கு ஹார்ட் அட்டாக் மரணம் .  அது அவர் ரகசியமாக கொடுத்த செக்.  அவர் பிள்ளையிடம் சொல்லலாம் என்றால் , அந்த நேரம் பார்த்து சேட்  அஞ்சு லட்ஷம் தருவதாக சொன்னார் என்று போய் சொல்லி சிக்கிக் கொள்ள , செக் தொலைந்ததை சொன்னபோது  அவனையும் விரட்டுகிறான் சேட்டின் மகன் 
.
செக் எங்கே எப்படி தொலைந்தது? அது அவனுக்கு திருப்பிக் கிடைத்ததா ? இல்லையா? செக் தொலைந்தது அவன் மனைவிக்கு தெரிந்ததா இல்லையா? தெரிந்தது எனில் அவள் என்ன செய்தாள்? இதன் மூலம் அவன் அல்லது அவர்கள் எடுத்த முடிவு என்ன என்பதே படம் . 
 
ஆரம்பத்தில் மிக உயரத்தில் பறவைப் பார்வையை தெரிய அங்கே இருந்து கேமரா கீழே கீழே இறங்கி அவன் வயல் வெளியில் மெய் மறந்து படுத்திருக்கும் காட்சி யிலேயே இயக்குனர் கிஷோர் ராமலிங்கமும் , ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் சீனிவாசனும் அட்டெண்டன்ஸ் போட்டு விடுகிறார்கள். 
 
கோடாங்கி வடிவேல் சில சமயம் சிரிக்க வைக்கிறார் . 
 
மிக இயல்பான யதார்த்தமான பெரிதாக சுவாரஸ்யம் இல்லாத – அங்கங்கே ஒரு சில அத்தி பூத்தது [போன்ற காமெடிகள் மட்டுமே வர , அதே நேரம் ரொம்பப் படுத்தாமல்தான் போய்க் கொண்டு இருந்தது படம் . 
 
செக் தொலையும் போது  கூட படம் பார்ப்பவருக்கு ஒரு பதட்டம் வரத்தான் செய்கிறது . ஆனால்  அதன் பிறகு அடிக்கிறார்கள் பாருங்கள் கூத்து . கதையின் சீரியஸ் தன்மையை கனத்தை  சீரியஸ் தன்மையை அவர்களே உணராமல்  காட்சிகளை வைக்கிறார்கள் . குணாதிசயத்துக்கு சம்மந்தம் இல்லாமல் காமெடி செய்கிறார்கள் . அவர்களுக்கே சீரியஸ்னஸ் புரியவில்லை என்பதால் நமக்கு என்ன என்ற உணர்வே வருகிறது. 
 
அதனால் செக் தொலைந்தது பற்றிய காரணங்களும் கேள்விக்கு உள்ளாகிறது.  இவ்வளவு பிரச்னை உள்ள ஒருவன் ஒரு கோடி  ரூபாய்க்கு செக் கிடைத்தால் முதலில் அதை வங்கியில் போட்டு கிரெடிட் ஆகிறதா என்பதில் கவனம் செலுத்துவானா?  ஒரு கோடி ரூபாய் செக்கை வரும் வளர்பிறை அன்று தன பெயர் எழுதி பேங்கில் போடுவோம் என்று நினைப்பானா? ( சேட்டு என்ன மாசாமாசம் ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்றா சொன்னார். அப்புறம் எதுக்கு வளர்பிறை?)  அது போகட்டும் அந்த செக்கை கையில் வைத்துக் கொண்டு ஒருவன் ரோட்டில் விபத்துக்கு உள்ளாகும்  ஒருவனை மருத்துவமனையில் சேர்ப்பானா? அது கூட போகட்டும் . ஒன்றரையணா  சம்பளம் வாங்கும் ஆபீசில் கிளரிக்கல் வேலையைப் பார்ப்பானா?. தவிர அந்த செக்கை மறந்து போய் அங்கும் இங்கும் வைப்பானாம். அவ்வளவு அப்பாவியாம் அவன். உண்மையிலேயே அவனை  அவன் பொண்டாட்டி கழுவிக் கழுவி ஊத்துறதெல்லாம் ரொம்பக் கம்மி 
 
உண்மையில் இந்தப் படக் குழு புத்திசாலித்தனமாக என்ன செய்து இருக்க வேண்டும்? 
 
செக் தொலைவதற்கு முன்பு வரும்  காமா சோமா காட்சிகள் , சில்லுண்டி சென்டிமென்ட்கள் . இவற்றை தூக்கி விட்டு , குடும்பம் படும் கஷ்டங்களை ரசிகனின் பார்வையில் காமெடியாக சொல்லி இருக்க  வேண்டும். செக் தொலைந்த பிறகு படம் முழுக்கவே சீரியசாகத்தான் போயிருக்க வேண்டும் . கடைசியில் கொஞ்சம் காமெடி அல்லது சோக செண்டிமெண்ட் என்பதுதான்  இந்தப் படத்துக்கான தியேட்டரிக்கல் வெற்றிக்கான வழி . அது இந்தப் படக் குழுவுக்கு தெரியவில்லை. 
 
சீரியஸ் காட்சிகள் இடையே காமெடி என்பது திருடன் போலீஸ் போன்ற படங்களில் சரியாக ஒர்க் அவுட் ஆகும்  காரணம் அது முடிந்த பிரசனையின் சோகத்தில் வரும்  காமெடி  . ஆனால் ஒரு கோடி ரூபாய் செக் தொலைந்து விட்டு இருக்கிறது என்பது சீரியஸ் பிரச்னை .  இங்கே காமெடி வைப்பது நான்சென்ஸ். காரணம் பிரச்னையின் வீரியம் நீர்த்துப் போகிறது . 
 
அப்பாவின் குணத்தை மகன் உணர்வது … பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பச் சொல்லும் விஷயம்,கணவன் ஆசைப்படி மனைவி ஊருக்கு வர நினைப்பது  , ஊனமுற்ற ஓர் ஏழைப்பெண்ணின் குணம், சில உண்மைகள் வெளிப்படும் விதம் , கணவன் மனைவி சண்டை என்று நல்ல காட்சிகள்  வந்தாலும் அவற்றுக்கு உரிய பலன் கிடைக்காமல் அந்த அற்புதமான விசயங்கள் எல்லாம் உதிரி உதிரியாக தெரிகின்றன. 
 
ஒரு முறை தற்காலிகமாக மனைவியிடம் கோவித்துக் கொண்டு பிள்ளைகளை விட்டு விட்டு ஒரு தகப்பன் வெளியேறுவது என்பது யதார்த்தமான சொல்லப் போனால் சிறப்பான  காட்சி. ஆனால் மிக முக்கியக் கட்டத்திலும்  பிள்ளைகளை அம்போ என்று  விட்டு விட்டு ஒரு தகப்பன் போவது என்ன நியாயம்? 
 
சான் லோகேஷின் படத் தொகுப்பு படம் ரொம்பவும் தொங்காமல் காப்பாற்றுகிறது . பிரணவ் முனிராஜின் இசை ஏ ஓகே ராகம்தான் (எழுத்துப் பிழை இல்லை) 
 
உண்மையில் இந்தப் படத்தின் கதைக்குள் ஒரு அட்டகாசமான திரைக்கதைப் போக்கும் பிரமாதமான கிளைமாக்ஸும்  இருக்கிறது . ஆனால்  அதை செய்யக் கூடாது என்று சத்தியம் செய்து விட்டு படம் எடுத்து இருக்கிறார்கள் . 
 
செக் காணோம் . மனைவியின் குணம் தெரிகிறது . உறவுகளின் பாசம் என்பது பணத்துக்கானது என்பது புரிகிறது . செக் கிடைக்கிறதோ அல்லது கிடைக்கவில்லையோ  ஒரு நிலைக்கு அப்புறம் எல்லாம் சகஜத்துக்கு வரும்போது , மனம் வெறுக்கும் அவன் சில முடிவுகளை எடுத்தான் என்று –சம்சாரம் அது மின்சாரம் படத்தில்  கடைசியில் லட்சுமி உடைவது போல அவன் உடைந்திருந்தால் இந்தப் படம் சும்மா தெறிக்க விட்டிருக்கும் . 
 
ஆனால்  அதற்கு தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் திரைக்கதை பற்றிய தெளிவு   வேண்டும் . ஆனால் நம்ம ஊரில்தான் நல்ல கதைகளை எடுக்கவும் மாட்டேன் ஆதரிக்கவும் மாட்டேன் என்று  பலர் இருக்கிறார்களே .. அதுதான் வேதனை. 
 
மிக நன்றாக ஓட வேண்டிய  சிறப்பான கதை . படம் எடுத்தவர்களும் கூட வெற்றி என்ற ஓப்பன்  செக்கில் தங்கள் பெயரைக்  கூட எழுதாமல் செக்கை தொலைத்து விட்டார்கள் . 
 
மொத்தத்தில் மிடில் கிளாஸ் …. அன்னக் காவடி இல்லைதான். ஆனால்  ரொம்ப ரொம்ப லோயர் லோயர் மிடில் கிளாஸ் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *