ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட அக்சஸ் பிலிம் புரடக்ஷச்ன்ஸ் சார்பில் டில்லிபாபு தயாரிப்பில்….
பாபி சிம்ஹா, கலையரசன் , ரேஷ்மி , அப்புக் குட்டி ஆகியோர் நடிப்பில் சக்திவேல் பெருமாள் சாமி என்ற அறிமுக இயக்குனர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் உறுமீன்.
உறுமீன், உறுதியான மீனா? பார்க்கலாம் .
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ராஜ சிம்மன் (பாபி சிம்ஹா) என்ற தமிழ் மன்னனுக்கு பிரும்மர் என்ற முனிவர் எதிர்கால நிகழ்வுகளை கணக்கிட்டு வைத்திருக்கும் புத்தகம் ஒன்றை வழங்குகிறார்.
ஆனால் ராஜ சிம்மன் அவனது நெருங்கிய நண்பனாலேயே (கலையரசன்) எதிரி நாட்டு அரசனுக்கு காட்டிக் கொடுக்கப்படுகிறான் .
நாடிழந்த ராஜசிம்மன் காலப் புத்தகத்தோடு குழியில் இறங்கி தன்னை, தன்புதைப்பு செய்து கொள்கிறான் .
இதுவரை வரைகலையில் செல்லும் படம் இப்போது இயல்பு உருவத்துக்கு மாறுகிறது .
வெளியூரில் இருந்து வேலைக்கு வந்து, நண்பன் (காளி ) அறையில் தங்கி வேலை தேடும் செல்வாவுக்கு (பாபி சிம்ஹா ) ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது . அங்கே அவனுக்கு குழுத் தலைவராக வரும் உமையாள் (ரேஷ்மி) அவனது கல்லூரி ஜூனியர் .
சின்ன தர்ம சங்கடம் , சின்ன தயக்கம் , சின்ன வெட்கம் , இருவருக்கும் இடையே….. அப்படியே காதல் .
இன்னொரு பக்கம் தேனீர் கடைப் பையனாக இருக்கும் ஜான் கிறிஸ்டோபர் (கலையரசன்) ஒரு தனியார் வங்கிக்கு தேனீர் கொடுக்கும் சாக்கில் அங்குள்ள மேலாளருடன் பழகி வளர்ந்து, வங்கிக்கு வாராக் கடன்களை வசூலித்துத் தரும் ரவுடியாக மாறி, சட்ட விரோதமாக கடன் வாங்கித் தரும் தாதாவாக கொழுத்து , ஒரு நிலையில் பெரும் பணக்காரன் ஆகிறான் .
உமையாள் வாங்கிய ஒரு தனி நபர்க்கடனுக்கு பணம் கட்ட முடியாமல் போக, ஜானின் ஆள் அவளிடம் பணம் வசூலிக்க வருகிறான் . ஒரு நிலையில் அவள் பணத்தை வட்டியோடு கட்டிய பிறகும் அவளை பாலியல் ரீதியாக அணுகுகிறான் அந்த குட்டி தாதா.
உமையாள் செல்வாவிடம் விஷயத்தை சொல்ல, அந்தக் காமுகனை செல்வா தாக்கப் போகிறான். ஆனால் அவனை செல்வாவின் கண் முன்னாலேயே பாதிக்கப்பட்ட இன்னொருவன் எரித்துக் கொல்கிறான் .
கொன்றது செல்வாதான் என்று நினைக்கும் ஜான், அவனை இழுத்து வரச் செய்கிறான் .
இந்த நிலையில் காலப் புத்தகம் மூலமாக , தனது இன்னொரு ஜென்மம் செல்வாவுக்கு காட்சியாக வருகிறது .
நூறாண்டுக்கு முந்தைய காலம்
இன்று கேரளாவோடு இருக்கும் மலைக் காடுகளும் அடர் வனமும் இயற்கைச் செல்வங்களும் ஆதி முதல் இருந்தது போலவே, தமிழர்களின் சொந்த மண்ணாகவே அப்போதும் இருக்கிறது.
இந்தியாவைக் கைப்பற்றிய வெள்ளைக்காரார்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டம் வலுவடைகிறது .
ஆங்கிலேயனுக்கு அடங்க மறுக்கிறான் செழியன் என்ற சுதந்திரப் போராட்டத் தமிழ் வீரன் (பாபி சிம்ஹா ) அவனது மலையாள நண்பன் ஒரு நாயர் ( கலையரசன்)
அங்கு வரும் ஒரு வெள்ளைக்கார அதிகாரிக்கு காடுகளை காட்டச் சொல்லி செழியன் கேட்டுக் கொள்ளப்படுகிறான் . விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி ஒத்துக் கொள்கிறான் .
தன்னை விட செழியன் அறிவாளியாக இருப்பதோடு, தன் மானத்தோடும் நடந்து கொள்வது, வெள்ளைக்கார அதிகாரிக்கு பிடிக்கவில்லை . ஒரு நிலையில் சண்டை வருகிறது .
செழியனைக் கொல்ல வெள்ளைக்கார அதிகாரி முயல, அவனை நண்பர்கள் காப்பற்றி அனுப்புகிறார்கள். வெறி பிடித்த அதிகாரி செழியனைக் கொல்ல எல்லா உத்திகளையும் செய்கிறான் . நாயரை அழைத்து உன் நண்பனான செழியனைக் காட்டிக் கொடுத்தால், உனக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் ‘’ என்கிறான் .
தமிழர்களுக்கு சொந்தமான நிலமாக இருந்து , வெள்ளைக்காரர்களால் கைப்பற்றப் பட்டு இருக்கும் ‘’கோழிக் கோடு தேயிலை எஸ்டேட்டை என் பெயருக்கு எழுதி வைத்தால் செழியனைக் காட்டிக் கொடுப்பேன்’’ என்கிறான் நாயர் .
அப்படியே நடக்கிறது . வெள்ளைக்கார அதிகாரியால் செழியன் கொடூரமாகக் கொல்லப்படுகிறான் . நாயர் தேயிலை எஸ்டேட் உரிமையாளர் ஆகிறான்
இப்படி இரண்டு ஜென்மங்களில் அநியாயம் செய்து வென்ற ஒருவனும் , நியாயமாக நடந்து தோற்ற ஒருவனும் இந்த 2015 ஆம் ஆண்டில் தாதாவாகவும் தனியார் நிறுவன ஊழியராகவும் மோதுகிறார்கள்.
வென்றது யார் என்பதே இந்த உறுமீன் .
படத்தின் மிகப் பெரிய பலம் இந்தப் படம் பேசும் சமூக அரசியல் .
கேரளாவை கடவுளின் தேசம் என்று அழைக்க காரணமான இயற்கை வளம் யாவும் உண்மையில் தமிழ் மக்களுக்கு சொந்தமானது என்பதையும், வெள்ளைக்காரர்கள் காலத்தில் எந்த எந்த செயல்பாடுகளால் அது மலையாளிகள் கைக்குப் போனது என்பதையும் சொல்லும் இந்தப் படத்தின் நேரிய வீரம் பரணி பாடற்குரியது .
(அதே நேரம் கிறிஸ்தவ மதம் ஒரு வகையில் கேரளாவில் வளர்ந்த விதத்தையும் ஒரு சிலுவை டாலர் ஷாட்டில் சொல்லி விட்டுப் போகிறார் இயக்குனர்)
புலிகளை வேட்டையாடுவதை வெள்ளைக்கார அதிகாரிகள் பொழுது போக்காகச் செய்வதை கண்டிக்கும் ஒரு காட்சியில் அப்புக் குட்டி இப்படிச் சொல்வார்.
‘’காட்டுல மொத்தம் நாப்பத்தி அஞ்சாயிரம் புலிகள் இருந்துச்சு .இந்தப் படுபாவிப் பயங்க அநியாயமா கொன்னு கொன்னு இப்போ இருபதாயிரம்தான் இருக்கு . டேய் ஒண்ணு ஞாபகம் வச்சுக்கங்கடா … எண்ணிக்கை குறைஞ்சாலும் புலி புலிதான் “
உடனே பாபி சிம்ஹா அவரிடம் லேசாகச் சிரித்தபடி அர்த்த புஷ்டியோடு ‘’ நீங்க எந்தப் புலியை சொல்றீங்க?’’ என்று கேட்க, அப்புக்குட்டி கம்பீரமாகச் சிரிப்பார் .
ஒரு அற்புத விசயத்தை சரியான இடத்தில் பயன்படுத்தி சேதாரம் இல்லாமல் மொத்த வசனத்தையும் வெளிக்கொண்டு வந்த இந்த படக் குழுவின் புத்திசாலித்தனம் கொண்டாடுதலுக்குரியது.
இப்போது நாம் கவுரவமாகவும் ஃபேஷனாகவும் எண்ணி உண்ணும் உணவு வகைகள் உண்மையில் எவ்வளவு மோசமானவை என்பதையும், அவற்றை அப்போதைய நம்முடைய அறிவார்ந்த சமூகம் எப்படி நையாண்டியோடு எதிர் கொண்டது எனபதையும் சொல்லும் இடம் போற்றுதலுக்குரியது .
இப்படிப்பட்ட விசயங்களை படத்தின் பயன்படுத்தி இருக்கும் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமிக்கும் இப்படிப்பட்ட விஷயங்கள் கொண்ட படத்தை தயாரித்து இருக்கும் டில்லிபாபுவுக்கும் காதலான கைகுலுக்கல்கள் !
இவை மட்டுமல்ல …
படமாக்களில் அசத்தி இருக்கிறார் இயக்குனர். சின்னச் சின்ன விசயங்களைக் கூட படைக்கும் விதத்தில் முழு வீச்சையும் காட்டுகிறார் .
செல்வா – உமையாள் இடையிலான அந்த வித்தியாசமான, ஆனால் சுவாரஸ்யமான காதல் பகுதி குறும்புக் கவிதை .
உமையாள் என்ற பெயரும் அதை வைத்து வரும் ‘’உமையாள்… நான் இன்றிக் கண்ணும் இமையாள்” என்ற பாடல் வரியும் உலக இலக்கியத் தரம்.
பின்புலங்களை உருவேற்றுவதில் ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவும் அச்சு ராஜாமணியின் பின்னணி இசையும் அற்புதப் பங்காற்றி இருக்கிறது . பாடல் இசையும் இனிமை .
செல்வாவாக இயல்பாக நடித்து விட்டு, செழியனாக அசத்தி இருக்கிறார் பாபி சிம்ஹா . ஜான் மற்றும் நாயர் கேரக்டரில் கலையரசன் பிரமிக்க வைக்கிறார் சின்னச் சின்ன நுணுக்கமான முகபாவனைகள் வியக்க வைக்கின்றன . இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ரேஷ்மி வாய்ப்புக் குறைவு . ஆனால் கிடைக்கும் வாய்ப்புகளில் இனிப்பு .
ராஜ சிம்மன் காலத்து காலப் புத்தகத்தை அடுத்தடுத்து செழியனுக்கும் நவீன கால நாயகனுக்கும் கடத்தும் விதம், திரைக்கதை மற்றும் இயக்கத்தில் திலகமாக ஒளி வீசுகின்றன .
சக்திவேல் பெருமாள் சாமி இயக்குனர் பார்த்திபனின் உதவியாளர் . பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் திருட்டு விசிடியால் அதிகம் பாதிக்கப்பட்டது அனைவரும் அறிந்த விஷயம் .
அந்த திருட்டு விசிடி விற்பவர்களைக் கண்டிக்கும் விதத்தில் , கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் திருட்டு விசிடி விற்கும் ஒருவனைக் கழுத்தறுத்துக் கொன்று , அந்தப் படத்தின் விசிடியை இயக்குனர் ஒரு காட்சியில் உடைக்கிறார் ,குரு விசுவாசத்தோடு !
செல்வாவை ஆரம்பததில் அவ்வளவு அப்பாவியாக காட்டி இருக்கத் தேவை இல்லை . ராஜ சிம்மனுக்கும் செழியனுக்கும் இருக்கும் குணாதிசயத் தொடர்பை செல்வாவுக்கு மகுடமாக சூட்டுவதில் கோட்டை விட்டிருக்கிறார்கள் .
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதையில் ராஜ சிம்மன் என்று கற்பனை வரலாறு சொல்லி இருப்பதற்குப் பதில்,
செழியன் – நாயர் கதையின் மூலம் போலவே நிஜமான வரலாற்றில் இருக்கும் சேரன் செங்குட்டுவன் – பாஸ்கர ரவி வர்மன் வரலாற்றைச் சொல்லி இருந்தால், கதையின் நம்பகத் தன்மை இன்னும் விஸ்வரூபம் எடுத்து படத்துக்கு பேருதவியாக இருந்திருக்கும் .
இரண்டு மனிதர்களுக்கு இடையில் மூன்று பிறவிகளாகத் தொடரும் கதை என்பதால் கிளைமாக்சில் செல்வா—ஜான் இருவரையும் ஒற்றைக்கு ஒற்றையாக கொஞ்சம் விளையாட விட்டிருந்தால், கிளைமாக்ஸ் இன்னும் நாணேறி இருக்கும் .
எனினும் எடுத்துக் கொண்ட விஷயம் , அதை சொன்ன விதம் , படமாக்கிய வித்தை என்று சகல விதத்திலும் பாராட்ட வைக்கிறது உறுமீன் .
மொத்தத்தில் ‘உறு’மீன் …
‘கழி’சடைப் படமாக இல்லாத,
‘சால’ச் சிறந்த –
‘தவ’ம் போல வந்த –
‘நனி’ சிறந்த—
‘கூர்’மை நிறைந்த , பொருள் பொதிந்த பொழுதுபோக்குப் புதையல் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————–
சக்திவேல் பெருமாள் சாமி , டில்லி பாபு, பாபி சிம்ஹா, கலையரசன், ரவீந்திர நாத் குரு, அச்சு ராஜாமணி, தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராம நாராயணன்