வதந்தி – வெலோனியைப் பற்றிய (கட்டுக்) கதை @ விமர்சனம்

புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் எஸ் ஜே சூர்யா, நாசர், லைலா, சஞ்சனா , விவேக் பிரசன்னா நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் பிரைம் தளத்தில் காணக் கிடைக்கும்  எட்டு பகுதிகள் கொண்ட வலைத் தொடர். 

நாஞ்சில் நாட்டுப் பகுதியில் காட்டுப் பகுதியில் ஒரு இளம் பெண்ணின் பிணம் அழுகிய நிலையில் கிடைக்கிறது . தங்கும் விடுதி வைத்து நடத்தும் கணவனை இழந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் (லைலா) மகள் வெலோனி(சஞ்சனா)தான் அது என்று தெரிய வருகிறது .

அதை விசாரிக்கும் பொறுப்பு விவேக் என்ற காவல் அதிகாரி (எஸ் ஜே சூர்யா) கைக்கு வருகிறது . உதவிக்கு ஒரு துணை அதிகாரி (விவேக் பிரசன்னா) . காவல் அதிகாரிக்கு மனைவி ( ஸ்ம்ருதி வெங்கட்)  மற்றும் ஒரு கைக்குழந்தை. 

ஆங்கிலோ இந்தியப் பெண்  தனக்கு உதவியாக இருக்கும் ஒரு குடிகார இளைஞனை மணந்து கொள்ள மகளை வற்புறுத்தியதும் தெரிய வருகிறது. அதனால் அவள் சில நாட்கள் வீட்டை விட்டுப் போய்விட்டு,  மீண்டு(ம்) வந்திருக்கிறாள். 

அந்த விடுதிக்கு வரும் ஒரு எழுத்தாளரிடம் (நாசர் ) வேலோனி மனம் விட்டுப் பழகி இருக்கிறாள்  
இது தவிர காட்டுப் பகுதியில் வாழும் ஒரு குடும்பம் அங்கு ரகசியமாக விபச்சார தொழில் நடத்துகிறது . 
வெலோனியைக் கொன்றது யார் என்பதுதான்  இந்தத் தொடர் . 

நாஞ்சில் நாட்டுத் தமிழில் வந்திருக்கும் தொடர்.  படமாக்கலிலும் இயக்கத்திலும் நடிக நடிகையர் தேர்விலும் கவர்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ்  எஸ் ஜே சூர்யா உணர்ந்து நடிக்கிறார். ஸ்மிருதி வெங்கட்டும் அப்படியே. நாஞ்சில் தமிழில் பேசிக் கவர்கிறார் . மற்றவர்கள் எல்லாம்  ஒகே ரகம் 

அட்டகாசமான லொக்கேஷன்கள் கவர்கின்றன. அவற்றை சிறப்பாகப் படைக்கிறது சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு. 

சைமன் கே கிங்கின் பின்னணி இசை பெரும்பலம் .  

வளைத்து சுழற்றி உருண்டு புரண்டு வரும் ஏகப்பட்ட கிளைக் கதைகளை சிரத்தையோடு தொகுத்துத் தருகிறது ரிச்சர்டு கெவினின் படத் தொகுப்பு. 

நினைத்ததை எல்லாம் எழுதி எழுதியதை எல்லாம் அப்படியே எடுத்துக் கொடுத்து விட்டார்களோ என்று அஞ்சும் அளவுக்கு தேவையும் சுவாரஸ்யமும் அற்ற காட்சிகள், வந்த காட்சியும் வசனமுமே திருப்பித் திருப்பி வருவது சொன்னதையே சொல்லிக் கொண்டு இருப்பது என்று சோதிக்கிறது திரைக்கதை . 

வசனம் இன்னும் கொடுமை .  படத்தில் ஒரு பத்திரிகையும் பத்திரிக்கை ஆசிரியரும் வருகிறார்கள். பத்திரிக்கை பெயர் ஃபோர்த் காலம் தமிழ் நாளிதழ் . அதாவது நான்காவது பத்தி  என்று பொருள். முழுக்க முழுக்க ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ் நாளிதழ் எதுவும் இருக்கா? அதன் ஆசிரியராக வரும் ஹரீஷ் பெராடி மலையாள தொனியில் பேசுகிறார் . வெலோனி என்று கூறப்பட்ட பெண் அல்லது வேலோனி என்று கருதப்பட்ட  பெண் என்ற ஒரு செய்தித் தலைப்புக்குப் பதில் ‘வெலோனி என்று எண்ணப்பட்ட பெண்’ என்று  ஒரு செய்திக்கு தலைப்பு போடுகிறார்கள். . அதையும் ‘என்னப்பட்ட’ என்று எழுதி இருக்கிறார்கள். கொல்லப்பட்ட பெண் என்பதற்கு பதில் கொள்ளப்பட்டபெண்  என்று ஒரு செய்தித் தலைப்பு . 

இந்தக் கொடுமை எல்லாம் போதாது என்று தொடரில் சிறப்பான எழுத்தாளராக வரும் நாசர் ஒரு காட்சியில் ”அந்தப் பெண்ணின் உடல் மீது காதல் கொண்டவர்கள் சிலர் ; காமம் கொண்டவர்கள் சிலர்”  என்கிறார் .  உடல் மீது  காமம் இல்லாமல் காதல் கொள்வது என்றால் என்ன ?  சந்தணம் பூசி சாம்பிராணி போடுவதா ? இல்ல .. புரியல. 

இது தவிர கதை முழுக்க பொய்யாகவும் நிஜமாகவும் சொல்லப்படுகிற  விஷயங்கள் எல்லாம் பகீர் மற்றும் உவ்வே ரகம் . அம்மா  சொல்கிற மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்பதால் ஒரு பெண் விலைமாதுவாகப் போய் ஜாலியாக இருப்பேன் என்பாளாம்.  இன்னும் பல  இது போல. 

எனினும் மேக்கிங்கில் கவர்கிறார்கள். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *