ஒரு காலத்தில் எல்லா திரைப்படங்களுக்கும் மூன்று இடைவேளை விட்டு தியேட்டர் ஆப்பரேட்டர்கள் ஓட்டுவார்கள். பின்னாளில் இடைவேளை என்று டைட்டில் வரும் இடத்தில் மட்டுமே இடைவேளை விடும் பழக்கம் வந்தது .
அதன் பின்னர் இடைவேளை இல்லாத ஹாலிவுட் படங்களுக்குக் கூட நம்ம தியேட்டர்காரர்கள் சட்டென்று கத்தரிக் கோலால் கட் செய்த மாதிரி இன்டர்வல் விட ஆரம்பித்தார்கள் . காரணம் இடைவேளையில் கேண்டீனில் நடக்கும் உணவு வியாபாரம் .
பல தியேட்டர்களில் பல சமயங்களில் தியேட்டர் டிக்கட் மூலம் வரும் வருமானத்தை விட கேண்டீன் வருமானம் அதிகம் .
இந்த நிலையில் இடைவேளையே இல்லாத ஒரு படம் தமிழில் வருகிறது .
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்க நயன்தாரா நடிப்பில், மாயா மற்றும் கேம் ஓவர் படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கம் கனெக்ட் என்ற படம்தான் அது . கோவிட் காலத்தில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத ஒரு சூழலில் போன் , லேப் டாப் மூலம்தான் பேச முடிந்தது . அப்படிப்பட்ட சூழலில் கதாநாயகியின் டீன் ஏஜ் மகளை வீடியோ கால் மூலம் பேய் பிடிக்கிறது .
பொழுது போக்காக அவள் ஒய்ஜா போர்டு முறையில் நல்ல ஆவியுடன் பேச முயல கெட்ட ஆவி ஒன்று அந்தப் பெண்ணை பிடிக்கிறது இதுதான் கதை என்கிறார் இயக்குனர் அஷ்வின் சரவணன்
நாயகி நயன்தாரா . சத்யராஜ் , அனுபம் கேர் ஆகியோர் முக்கிய வேடங்களில் .
படத்தின் டிரைலர் டீசரில் வரும் சில ஒலிகள் அட்டகாசமாக இருந்தன . பிரித்வி சந்திரசேகரின் இசையும் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்குமென புரிந்தது .
“இந்தப் படத்தை இன்டர்வல் விட்டு பார்த்தால் நன்றாக இருக்காது . உட்கார்ந்தால் முடித்து விட்டு எழ வேண்டும். அதே நேரம் இது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். அதனால் தான் இடைவேளை இல்லாமல் திரையிட இருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் . கேண்டீன் வியாபாரம் பாதிக்கப்படுவதால் தியேட்டர்காரர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்களா என்றால், ” படம் மொத்தமே ஒன்றரை மணி நேரம்தான் . . எனவே அதிக காட்சிகள் போடுவதன் மூலம் ஈடுகட்ட முடியும் . தவிர அரங்குக்குள் நுழையும்போதே தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு உள்ளே போகும் ஆட்கள் நிறைய உண்டு . அதனால் பாதிப்பு இல்லாமல் இதை நடை முறைப்படுத்த இருக்கிறோம் . திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம் ” என்கிறார் .