வைகை எக்ஸ்பிரஸ் @ விமர்சனம்

vaigai 3

மக்கள் பாசறை சார்பில் ஆர் கே தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க,

நீது சந்திரா, நாசர், இனியா, கோமல் ஷர்மா, எம் எஸ் பாஸ்கர், இயக்குனர் ஆர் கே செல்வமணி, சிங்கமுத்து , ஜான் விஜய் , சுமன் ஆகியோர் நடிக்க ,

மலையாளத்தில்  மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி ஆகிய நட்சத்திரங்களை இயக்கிய ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் வந்திருக்கும்  படம் வைகை எக்ஸ்பிரஸ்.  நம்பி டிக்கட் போடலாமா ? பார்க்கலாம் .

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரசில் ஒரு நாள் இரவுப் பயணத்தில் , ஒரு தொலைக்காட்சி பெண் நிருபர் (கோமல் ஷர்மா), 

ஒரு எம்.பி.யின் (சுமன்) மைத்துனி , கோட்டையூர் சமஸ்தான வாரிசான ஒரு பெண் (நீது சந்திரா ) ஆகிய மூவர் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் .

vaigai 1

அதில் இருவர் இறந்து விட, சமஸ்தான வாரிசு மட்டும் பலத்த காயங்களோடு உயிர் பிழைக்கிறார் .

அந்த ரயிலில் ஒரு தீவிர வாதி (ஆர் கே செல்வமணி ) , ஒரு டி வி நடிகை (இனியா) அவரது அக்கா (அர்ச்சனா) அக்காவின் கூஜா  கணவர் ( மதன் பாப்) , நான்கு மருத்துவர்கள் (பவன், சுஜா வாருணி மற்றும் இருவர்)

ஒரு மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞன் , அவனது அப்பா (சிங்கமுத்து) – அம்மா என்று பல பயணிகள் .

தவிர ரயில் கிளம்பியதுமே சீட்டாட ஆள் தேடும் டி டி ஆர் ( எம் எஸ் பாஸ்கர் ) , ஏ சி கூப்பே அட்டெண்டர் (அனூப் சந்திரன்) என்று பல கதாபாத்திரங்கள் .

ஆரம்ப கட்ட விசாரணை நடத்தும் லோக்கல் இன்ஸ்பெக்டர் (நாசர்) இந்த வழக்கு ரொம்ப சிக்கலானது என்று முடிவு செய்கிறார் .

vaigai 7

எனவே இந்த வழக்கில் துப்பு துலக்கும் பணியை திறமை வாய்ந்த காவல்துறை அதிகாரி ஷர்புதீனிடம் ( ஆர் கே) ஒப்படைக்கிறார்  எம் பி .

ஷர்புதீனுக்கு ஒரு போலீஸ் உதவியாளர் (ரமேஷ் கண்ணா) , தவிர லோக்கல் இன்ஸ்பெக்டரும்  நாயகனுக்கு உதவுகிறார் .

விசாரணை வளையத்துக்குள் கோட்டையூர் சமஸ்தானத்து நபர்கள் சிலரும் வருகிறார் .

பெண்களைக் கொலை செய்தது யார்? என்ன காரணம் ? குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டர்களா ? ஆம் எனில் மன்னிக்கப்பட்டர்களா ? தண்டிக்கப்பட்டர்களா என்பதே இந்தப் படம் .

திரைக்கதையிலும்  படமாக்கலிலும் அசத்தி இருக்கிறார்கள் .

vaigai 5

ஒரே ரயிலில் ஒரே பயணத்தில் ஒரே இரவில் நடந்தாலும் மூன்று பெண்களின் மீதான கொலைத் தாக்குதலுக்குமான  பின்னணி வேறு . .நபர்கள் வேறு .

அந்த மூன்று டிராக்குகளில்  சில கேரக்டர்கள் ஒன்றை ஒன்று லேசாக உரசிக் கொண்டாலும் மூன்று கொலைகளுக்கான மோட்டிவ் வேறு வேறு . சம்பவங்கள் வேறு வேறு .

சிறு சிறு வேர்கள் ஒன்று கூடி ஒரு முக்கிய வேராக வளர்வது போல வளர்ந்து, பிறகு வேர்கள் மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து ஒரு பெரிய  வேராகி மரத்துக்கு ஆதாரமாவது போன்ற திரைக்கதை .

ஏகப்பட்ட கேரக்டர்கள் ஏகப்பட்ட சம்பவங்கள் ஒவ்வொன்றும் வெளிப்படும் போது ஏகப்பட்ட பிளாஷ்பேக்குகள் .

கொஞ்சம் சறுக்கினாலும் படம் பார்ப்பவர் நிலவரம் கலவரம் ஆகி விடும்

vaigai 999

அவ்வளவு சிக்கல்கள் உள்ள திரைக்கதையை  குழப்பம் ஏற்படாத அளவுக்கு தெளிவாக தெறிப்பாக  பரபரப்பாக விறுவிறுப்பாக சொல்லி இருப்பது வியப்போடு  சபாஷ் போட வைக்கிறது . சூப்பர் .

துவங்கிய உடனேயே  படம் பறக்கிறது . இடைவேளை வருவதே தெரியவில்லை . இரண்டாம் பாகமும் அப்படியே பரபரத்துப் பயணித்து , ஒரு நிலையின் நின்று நிதானித்துக் கதை சொல்கிறது .

படத்தின் முக்கியப் பகுதியாக வரும் கோட்டையூர் சமஸ்தானத்துக் கதையில் தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்படாத அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட்டும் எதிர்பாராத ஒன்று . பாராட்டுகள் !

பெரும்பாலும் ரயிலில் நடக்கும் கதை . படமாக்குதலில் தீவிர உழைப்பு தேவைப்படும் நிலையில் சஞ்சீவ் ஷங்கரின் ஒளிப்பதிவில், 

vaigai 9

மிக அருமையான ஷாட்கள் வைத்து அட்டகாசமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ் .

ரயில் பெட்டிக்குள் இருந்து வெளியே வரும் கேமரா சி ஜி யின் உதவியோடு மிகப் பெரிய லாங் ஷாட் ஆக மாறி, முழு ரயிலையும் காட்டும் படியான ஷாட்கள் படத்துக்கு  பெரும் பலம் சேர்க்கின்றன . சபாஷ் ஷாஜி  கைலாஷ் .

சர்புதீனாக வரும் ஆர் கே கேரக்டருக்கு சிறப்பாக கமர்ஷியல் நியாயம் செய்துள்ளார் .

லேசான கன்னக் குழி சிரிப்போடும் கூர்மையான  பார்வையோடும் அவருக்கே உரிய பாணியில் அழுத்தம் திருத்தமாக வசனம் பேசி நடிக்கிறார் .

ஆக்ஷன் காட்சிகளில் பெரும் உழைப்பைக் கொடுத்து சிறப்பாக செய்துள்ளார் . சண்டை இயக்குனருக்கும் பாராட்டுகள் .

vaigai 8

இது போன்ற விசாரணையை மட்டும் விவரிக்கும் கதைகளில் வசனகர்த்தாவுக்கு மேட்டர் ஆஃப் ஃபேக்ட் சொல்வதற்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் .

ஆனால் அதையும் மீறி ஆங்காங்கே வசனத்துக்கு சபாஷ் போட வைக்கிறார் பிரபாகர் . சிறப்பு.

பாடல் இல்லாத குறையை பின்னணி இசையில் சரி செய்கிறார் எஸ் எஸ் தமன் . ஒலி அமைப்பும் மிக சிறப்பாக பின்னணி இசையோடு கலந்து பயணிக்கிறது .

நடிப்பில் நாசரும் , அனுப் சந்திரனும் அசத்துகிறார்கள் . மறைந்த கல்பனாவின் பின்னணிக் குரலில் அர்ச்சனா நடித்துள்ள கேரக்டர் சிறப்பாக வந்துள்ளது .

நாயகிகள் எல்லோரும் பதுமைகள் .

vaigai 99

வைகை எக்ஸ்பிரஸ் என்பது பகலில் ஓடி பகலிலேயே முடியும் ரயில் . நிஜத்தில் அது பயணிக்கும் ரூட்டிலேயே கதை சொல்லி விட்டு அதை இரவு ரயிலாக சொல்வது  ஏன்?

மூன்று கொலைத் தாக்குதல்களையும் ஒரு நிலையில் ஒரு புள்ளியில் இணைத்துக் கதை சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் வாய்ப்பு உண்டு .

நடந்து முடிந்த சம்பவத்தை விசாரித்து அதை ஓர் ஒற்றை கதாபாத்திரத்தின் மீது நிறுத்தி அதற்கு ஒரு கதைப் போக்கு சொல்லி அதோடு படம் முடிவதால் போகப் போக திரைகதையின் விஸ்தீரணம் குறைகிறது .

எல்லாம் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் அந்த நேரத்தில் எதிர்பாராத ஒரு புதிய சிக்கலை உருவாக்கி இன்னும் பேரதிர்ச்சி கொடுத்து, 

vaigai 4

அதற்கு ஏற்ற ஓர் ஆக்ஷன் ஏரியா அமைத்து படத்தை செலுத்தி முடித்து இருந்தால் படம் இன்னும் ஒரு படி மேலே எகிறி இருக்குமே .

ஆனாலும் என்ன …

விசாரணை ஆக்ஷன் இரண்டும் சரியாக கலந்த வகையில் படம் கவர்க்கிறது

வைகை எக்ஸ்பிரஸ் …. பரபர சுறுசுறு விறுவிறு தடதட கடகட அதிரடி ஆக்ஷன் வண்டி .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *