வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் , ரிதா , சமுத்திரக்கனி, மிஷ்கின் நடிப்பில் பாலா இயக்கி இருக்கும் படம்.
கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கான சுற்றுலாப் படகில் பயணிகளுக்கு உதவும் வேலை செய்யும் ஒருவன் ( அருண் விஜய்).
சிறு வயதில் சுனாமியில் பெற்றோரை இழந்த அவன் , தன்னைப் போல பெற்றோரை இழந்த ஒரு சிறுமியை எடுத்து, தங்கையாக (ரிதா) வளர்க்கிறான்.
சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுலா வழிகாட்டி வேலை செய்யும் பெண்ணுக்கு ( ரோஷினி பிரகாஷ்) அவன் மேல் காதல். அதை வெளிப்படுத்தும் போதெலாம் அவனிடம் இருந்து அவளுக்கு அடி உதைதான் கிடைக்கிறது .
அந்தப் பெண்ணின் ஆங்கில மோகம் கொண்ட பெற்றோருக்கு (சண்முகராஜன் – கவிதா கோபி) அவளை அமெரிக்க மருமகனாக்க ஆசை. அதற்கென அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த அமெரிக்க மாப்பிள்ளை, ஹரே ராம ஹரே கிருஷ்ண இயக்க உறுப்பினராகி அதே கன்யாகுமரியில் அவள் பின்னாலேயே சுற்றுகிறான் .
மாற்றுத் திறனாளி பெண்கள் உள்ள விடுதியில் ஒரு நிலையில் நாயகன் வேலைக்குச் சேர, அங்கே நடக்கும் ஒரு சம்பவம், கோபக்கார நபரான அவனைக் கொந்தளிக்க வைக்க, அதன் பின் விளைவுகளால் அண்ணன் தங்கை உறவு , காதல் , வாழ்க்கை எல்லாம் என்ன ஆனது என்பதே படம். ,
பாதிரியாரை பார் ஓனர் பங்கு என்று அழைப்பதில் உள்ள எள்ளல் ரசனை ….
“பாக்க சிவாஜி மாதிரியே இருக்கறதால நல்லா நடிக்கிறாருன்னு நினைச்சுட்டேன்.. ” என்ற வசனம் ( நந்தா படத்தில் சிவாஜியை நடிக்க வைக்க முடியாததன் ஏக்கம் பாலாவுக்குள் இன்னும் இருக்கிறது)
கண் தெரியாத பெண்ணை இந்தியத் தாயாக வேடம் போட வைத்ததில் இருக்கும் பூடகம் …
முதல் காட்சிக்கும் முடிவுக் காட்சிக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு ..
வழக்கம் போல பாலாவுக்கே உரிய வித்தியாசமான கதைப் பின்னணி மற்றும் நாயகனின் தொழில் பின்னணி …
பேச்சு மற்றும் கேட்பு மாற்றுத் திறனாளியான அண்ணனிடம் சைகை மொழியில் பேசிக் கொண்டே தங்கை கதறும் உருக்கம்
தங்கையாக நடித்து இருக்கும் ரிதாவின்நெகிழ வைக்கும் , நாயகன் அருண் விஜய்யின் அசர வைக்கும், காதலியாக வரும் ரோஷினி பிரகாஷின் ரசிக்க வைக்கும் நடிப்பு …
இதை எல்லாம் பார்க்கும்போது
வணங்கானில் Bala returns என்றே சொல்லலாம்.
குருதேவின் ஒளிப்பதிவு , ஜி வி பிரகாஷ் குமார், சாம் சி எஸ் ஆகியோரின் இசை ,சில்வாவின் சண்டைக் காட்சிகள், நாகுவின் கலை இயக்கம் , பட்டினம் ரஷீத்தின் ஒப்பனை யாவும் தரமோ தரம் .
அடுத்தவர்களை அடிக்கும் நபர்களை புரட்டி எடுக்கும் ஹீரோ கதாநாயகியை அந்தக் குமுறு குமுறுவது (காரணம் எது என்றாலும்)
எடுத்த வேலை முடிவதற்குள் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது
முதல் பாதியில் இலக்கின்றி அலையும் திரைக்கதை..
ஆரம்பத்தில் பல நிமிடங்களை ஆக்கிரமிக்கும் நாயகன் நாயகியின் தொழில் பின்னணி பின்னர் படத்தில் இல்லாமலே போவது , (அவற்றைத் தொடர்புப்படுத்தி காட்சிகள் இருந்தால் நன்றாக இருக்கும்)
பிதாமகனை நினைவூட்டும் நாயகனின் தோற்றம் உடல் மொழிகள்
அட்டகாசமாக ஆரம்பிக்கும் மிஷ்கின் சமுத்திரக்கனி கதாபாத்திரங்கள் அப்புறம் நமத்துப் போவது….
மேக்கிங்கில் சற்றும் மாறாமல் அப்படியே இருக்கும் பாணி …
இவற்றால்….
படத்தில் வணங்கானைப் பார்த்து மற்ற கதாபாத்திரங்கள் பயப்படுவது போல
இந்த வணங்கான் ரசிகர்களை முழுதாகக் கவர்வதிலும் வணங்கானாக இருந்து விடுவனோ என்ற பயம் நமக்கும் வருகிறது .
