லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி இருக்கும் படம்.
1997 இல் ஜோனாதன் மோஸ்தோவ் இயக்கிய பிரேக்டவுன் என்ற அமெரிக்கப் படத்தை அனுமதி வாங்காமல் ரீமேக் செய்து விட்டு , ஒரு நிலையில் தப்பிக்க முடியாது என்ற சூழலில் ரைட்ஸ் கேட்டுப் போக,
‘கேட்டு எடுக்காமல் எடுத்துட்டுக் கேப்பியா/’ என்ற கோபத்தில் பாரமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும்ம்ம்ம் தொகை கேட்க கெஞ்சிக் கூத்தாடி பல பத்து கோடிகளைக் கொட்டிக் கொடுத்து விட்டு ரிலீஸ் ஆகி இருக்கிறது விடா முயற்சி
ஜார்ஜியாவில் திபிலிசி நகரில் உள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சென்னை நபர் அர்ஜுன் ( அஜித் குமார்) அங்கேயே பிறந்து வளர்ந்த கயல் என்ற பெண்ணை ( திரிஷா) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
அர்ஜுனின் வேலை நிமித்தமாக இருவரும் ஜார்ஜியாவில் உள்ள பாக்கு என்ற நகருக்கு குடிபெயர்ந்து வாழ்கிறார்கள்.
கயல் கர்ப்பிணியாக இருக்கும் சூழலில் ஒரு விபத்து ஏற்பட்டு இனி அவரால் குழந்தைக்கு தாயாக முடியாது என்ற பின்னடைவு .
இந்த நேரம் பார்த்து கயல் தனக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே பிரகாஷ் என்ற நபரோடு தொடர்பு இருந்ததாகக் கூறி , இப்போதைய வாழ்க்கை சலிப்பாக இருப்பதால், விவாகரத்து வேண்டும் என்று கேட்கிறார் . அர்ஜுனின் சமாதானங்கள் (?) எடுபடாத நிலையில், தான் திபிலிசி யில் உள்ள பிறந்த வீட்டுக்குப் போய் விட விரும்புவதாகக் கூறுகிறார் .
கயலை அழைத்துக் கொண்டு திபிலிசி போகும் வழியில் ஒரு அடாவடி இளைஞன் மற்றும் அவனது நண்பர்கள் சிலர் ( ஆரவ் & கோ) வம்பிழுக்கிறார்கள். அந்த நிலையில் அர்ஜுனின் காரும் ரிப்பேர் ஆகிறது. செல்போன் சிக்னலோ பெரிதாக ஆளரவமோ வழியில் இல்லாத நிலையில்,
பயணத்தில் கயலுக்கு அறிமுகமான தீபிகா ( ரெஜினா கசான்ட்ரா) மற்றும் அவரது கணவர் ரக்ஷித் ( அர்ஜுன்) ஆகியோருடன் மனைவியை அனுப்பும் அர்ஜுன், பக்கத்து நகரில் உள்ள விடுதியில் இறக்கி விடச் சொல்ல, அவர்களுடன் போகிறார் கயல்.
கார் ரிப்பேரை சரி செய்து அந்தப் பக்கத்து ஊர் விடுதிக்குப் போனால் அங்கே கயல் இல்லை.
காரில் விரைந்து ரக்ஷித்தைப் பிடித்து எங்கே கயல் என்று கேட்டால் அவர் ”நீங்க யாரு? யாரு கயல்?” என்கிறார் .
கயலுக்கு என்ன ஆச்சு? அப்புறம் படத்துக்கு என்ன ஆச்சு படம் பார்க்கும் ரசிகர்களுக்கு என்ன ஆச்சு என்பதே விடாமுயற்சி .
படத்தின் முதல் பலம்…. வேறு யார் அஜித் தான். அவரே அடித்து விரட்டினாலும் விட்டு விலகாத அவரது ரசிகர்கள்தான்.
அடுத்து திரிஷா . எனினும் நடிப்பில் எல்லோரையும் தூக்கி சுருட்டி விழுங்குகிறார் ரெஜினா கசான்ட்ரா. ஆரவ்வும் அர்ஜுனும் போகிற போக்கில் நடித்து விட்டுப் போகிறார்கள்.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, அனிருத்தின் ஹாலிவுட் பாணி பின்னணி இசை . சண்டைக் காட்சிகள் , சேசிங் காட்சிகள் இவை யாவும் தரமோ தரம் .
மற்ற எல்லாமே அவசியமில்லாமல் அடிக்கப்பட்ட ஆணிகள்தான். .
முதலில் பிரேக் டவுன் படமே ஒரு ஒன்றரை மணி நேர, சிங்கிள் லேயர் திரைக்கதை கொண்ட படம். ஓ டி டி யில் பார்த்தால் ரசித்துப் பாராட்டலாம் .அது நம்ம ஊரு தியேட்டரிக்கலுக்கு செட் ஆகாது அதுவும் அஜித் போன்ற ஆகப் பெரும் சம்பளம் வாங்கும் ஹீரோவுக்கு அநியாயம் . முக்கியமாக ரிப்பீட் ஆடியன்ஸ் சான்சே இல்லாத படம்.
ஒரு பெரிய ஹீரோ நடிக்கும் படத்தில் அதுவும் ஆரம்பத்தில் காதல், கல்யாணம் , கர்ப்பம், பழைய காதல் , விவாகரத்து என்று கனமான விசயங்களோடு ஆரம்பிக்கும் படத்தில் பிற்பகுதியில் வரும் வில்லத்தனங்கள் கூட ,
அதுவரையிலான கதையோடு சம்மந்தப்பட்டதாக இருந்தால்தான் என்கேஜ் ஆக வரும் . எங்கயோ போற மாரியாத்தா .. இங்க வந்து ஏறு ஆத்தா என்பது போன்ற விஷயங்களும் வில்லத்தனங்களும் கொட்டாவியைதான் வர வைக்கும் .
தவிர பிரேக் டவுன் படத்தில் இருந்து அப்படியே தூக்கி வைக்கப்பட்டு இருக்கும் வில்லன் வில்லி அவர்கள் கதைகள் எல்லாம் நம்ம ஊருக்கு பத்து பைசாவுக்குத் தேராது. (ஆனால் முப்பத்து ஐந்து கோடி கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். )
இப்படி எடுத்து வைத்த விசயங்கள்தான் எடுபடாமல் நிற்கிறது என்றால், இந்தப் படத்தக்கு என்று புதிதாக உருவாக்கிய கதைப் போக்கும் உருப்படாமல் போய் விட்டது
ஓர் ஆங்கிலப் படத்தை ரீமேக் செய்வது அல்லது அதன் அடிப்படைக் கதையை வைத்துக் கொண்டு தமிழில் படம் செய்வது தப்பில்லை.
தமிழுக்கு இது ஒன்றும் புதியது இல்லை. பீம்சிங் , உள்ளிட்ட நமது அந்நாள் மாபெரும் இயக்குனர்கள் இயக்கிய பல படங்களின் கதை அல்லது மூலக்கதை அல்லது கரு வங்காள மராட்டிய நாவல்களில் இருந்து எடுக்கப்பட்டவை .
ஆனால் அந்தக் கதையை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி அப்புறம் திரைக்கதை வசனம் எழுதி எடுப்பார்கள் . படம் ஹிட் அடிக்கும்.
அப்படி பல படங்களை மூல மொழி ஆட்களே பாத்து அசந்து போயிருக்கிறார்கள்.
”ஒரு அண்ணனும் தங்கையும் லவ்வர்சை விடவும் அன்பா இருக்காங்க…” என்று கொட்டாரக்காரா ஒன் லைன் சொல்லி ஆரம்பித்த கதையைத்தான் பீம்சிங்கும் ஆரூர்தாசும் பாசமலர் ஆக்கினார்கள் என்றால்.. நம்ப முடிகிறதா? அவர் சொன்ன ஒன் லைனுக்கு அப்படியே ஸ்ட்ரைட்டாக நியாயம் செய்து இருந்தால் என்ன ஆகி இருக்கும்?
மனைவியின் குறைகளையும் இயலாமையையும் மீறி அதற்காக கோபப்படாமல் கணவன் நல்லவனாக அன்பானவனாக பெருந்தன்மையானவனாக இருக்கும்போது , அவள், ‘ எனக்கு முன்னயே ஒருத்தன் கூட தொடர்பு இருந்தது… உன்கூட இப்ப லைப் போரடிக்குது . விவாகரத்து குடுறா” என்று கேட்டால் ….
போண்டா மணி கூட ”போடி கூந்தலு…” என்று சொல்ல வேண்டும் என்றுதான் ஒரு ரசிகன் ஆசைப்படுவான் .
ஆனால் இதில் அழுது கெஞ்சி கூடவே இருக்கச் சொல்கிறார் அஜித் அவள் மறுத்த பின்பும் ”உன்னை உன் வீட்டுல கொண்டு போய் டிராப் பண்ற வரைக்குமாஆஆஆஆவது உன் கூடவே ஏ ஏ ஏ ஏ இருக்கேன்..” என்று சொல்லி , நெஞ்செரிச்சல் வரும் வரை நெஞ்சை நக்குகிறார்.
இந்தப் படத்துக்கு எதுக்கு இந்த விவாகரத்துக் கதை என்றே தெரியவில்லை.
காதலித்து உயிரைப் பணயம் வைத்து கல்யாணம் செய்து கொண்ட காதல் மனைவி என்று ஒரு பிளாஷ்பேக் சொல்லி இருந்தாலாவது மனைவி காணமல் போன பிறகு கணவனின் தேடல் காட்சிகளுக்கு ஓர் எக்ஸ்ட்ரா கனம் கிடைத்து இருக்கும் .
இல்லையில்லை… ஒரு வேளை மனைவியே கணவனைக் கொல்ல செய்யும் சதிதான் இந்தக் கடத்தல் என்ற திரைக்கதைப் போக்குக்கு பலம் கிடைக்கதான் அப்படி ஒரு மனைவியின் காதலன் , விவாகரத்துக் கதை வைக்கப்பட்டது என்றால் அப்போது திரிஷா போன்ற ஒரு நடிகையை போட்டு இருக்கக் கூடாது .
ஒரு சேஞ்சுக்காகஉண்மையாக திரிஷாவே அப்படி செய்வதுதான் கதை என்று யோசித்தால் கூட அது எந்த அளவு பலன் தரும் என்று தெரியவில்லை. ஆனாலும் அஜித் ரசிகர்களுக்கு ஒகே தான். ஆனால் படத்தின் கதை அது அல்ல.
இந்தக் கதைக்கு எதற்கு ஜார்ஜியா , அஜர்பைஜான் என்று தெரியவில்லை.
இல்லை இல்லை மொழி தெரியாத நாட்டில் அந்நிய தேசத்தில் பாலைவனச் சாலையில் மனைவியைத் தேடினால்தான் இன்னும் பதட்டம் இருக்கும் என்று படக்குழு எண்ணி இருக்கலாம்.
ஆனால் ராஜஸ்தானே தார் பாலைவனமே போதும் . சொல்லப் போனால் இன்னும் பெட்டர் . அஜர்பைஜான்காரர்கள் இந்தியர் என்பதால் காட்டும் வெறுப்பை விட வடக்கத்திக்காரர்கள் மதராசி என்றால் இன்னும் அதிக வெறுப்பை காட்டுவார்களே .
அஜர்பைஜான் எதற்கு ? திரிஷா எதற்கு ? அந்த பிளாஷ் பேக் எதற்கு? அந்த வில்லன் விவகாரம் எல்லாம் எதுக்கு ? இந்தப் படத்துக்கு அஜித் எதுக்கு என்று கேட்டுக் கொண்டே போனால் ஒரு நிலையில் இந்தப் படமே எதற்கு என்ற கேள்விதான் வருகிறது .
இந்தக் கதையைத்தான் எடுக்க வேண்டும் என்றால்..
அஜித் திரிஷா இருவரும் இல்லாமல் ஓர் இ சாதாரண ஹீரோ ஹீரோயினைப் போட்டு படத்தில் வரும பிளாஷ்பேக்கை நான் சொன்னது உயிரைப் பணயம் வைத்து வென்ற காதல் என்று மாற்றி, வில்லத்தனத்துக்கு அதுவரையிலான கதையில் இருந்தே லீட் எடுத்து ஒரு படம் பண்ணி இருந்தால் கூட, அது ஒரு நல்ல படமாக இருக்கும் .
அப்போது… இதை எதுக்கு பாரமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ரைட்ஸ் வாங்கிப் பண்ண வேண்டுமென்ற கேள்வி வரும்.
ஆக இந்தப் படமே ஒரு வேண்டாத வேலை என்பது புரியும்.
”எந்த ஹீரோயிசமும் இல்லாமல் கதைக்கு ஏற்றவாறு இயைந்து நடித்திருக்கிறார் அஜித் , அதை பாராட்டும் அறிவு இல்லையா//” என்று கேட்கலாம். நியாயம்தான் . ஆனால் லாபம் ? அட்லீஸ்ட் போட்ட காசு?
அஜித்துக்கு வயசான கெட்டப், நரை முடி, தாடி என்பது எல்லாம் தப்பில்லை. ஆனால் அதையும் மீறி சில காட்சிகளில் அவரைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
திரிஷா தன் கை விரல்களால் போனை ஸ்க்ரால் செய்யும் வேகத்துக்கு முற்றிலும் மாறாக வெள்ளித் திரையில் அவரது போனின் வாட்ஸ் அப் திரை மேல் நோக்கி நகரும் வேகம் மெதுவாக இருக்கு. அவ்வளவு அலட்சியமான போஸ்ட் புரடக்ஷன் .
மொத்தத்தில் விடாமுயற்சி …. ரசிகர்கள் மனதைத் தொடா முயற்சி !