வன்மம் @ விமர்சனம்

Vanmam Movie New Stills (23)

நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் ஜெபக் தயாரிப்பில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா ஆகியோர் நடிக்க , ஜெய் கிருஷ்ணா இயக்கி இருக்கும் படம் வன்மம் . படம் அன்பு செலுத்தும்படி இருக்கிறதா? பார்க்கலாம் .

நாஞ்சில் நாடு எனும் குமரி மாவட்டத்தில் நடக்கிற கதை இது.

பெரிய குடும்பத்துப் பிள்ளையான ராதாவுக்கும்( விஜய் சேதுபதி) , நடுத்தரக் குடும்பத்துப் பையனான செல்லதுரைக்கும்(கிருஷ்ணா) நெருங்கிய நட்பு. செல்லதுரைக்கும் தடிய ரத்தினம் என்ற (கோலி சோடா மதுசூதனராவ்) பணக்கார-  கோபக்கார மர வியாபாரியின்  தங்கை வதனாவுக்கும் (சுனைனாவுக்கும்) காதல். தடிய ரத்னத்தை வியாபாரத்தில் ஏமாற்றிய அவனது பங்குதாராரான ஜே பி க்கும் (சுப்பிரமணியபுரம் ராஜா) தடிய ரத்னத்துக்கும் பகை.

இந்நிலையில் தன் தங்கை செல்லதுரையைக் காதலிப்பது அறிந்த தடியரத்னம்,  தங்கையை ஒன்றும் சொல்லாமல் செல்லதுரை மீது கோபப்படுகிறான் . ஒரு நிலையில்கோபத்தில்  செல்லதுரையைக் கொல்ல முயல , நண்பனைக் காப்பாற்ற போராடுகிறான் ராதா . அந்தக் கைகலப்பில் தடிய ரத்னம் கையில் இருந்து கத்தி அவன் கழுத்தையே கிழித்துப் போட , தடிய ரத்னம் மரணம் அடைகிறான் . ராதா கொலைகாரன் ஆகிறான்.

செல்லத்துரை மட்டுமல்லாது , தடிய ரத்னத்தின் உதவியாளர்கள் இருவர் அதை கண்ணால் பார்க்க, அவர்களை ” உண்மையை வெளியே சொன்னால் கொன்று விடுவேன்” என்று மிரட்டுகிறான் ராதா. அவர்களும் மௌனியாகிறார்கள்

அண்ணன் இறந்த துக்கத்தில் வதனா அழும் அழுகை செல்லதுரையின் மனத்தைக் கரைக்கிறது . அந்த வேதனையை ராதாவிடம் பகிர்ந்து கொள்ளும்போது செல்லத்துரை தன்னையும் அறியாமல் “நீ கொஞ்சம் அவசரப் பட்டுட்ட ராதா ” என்று ஒரு வார்த்தை சொல்ல …..

நொந்து வெந்து துடித்து … கொந்தளிக்கிறான் ராதா . ” அவன் உன்னை கொன்னு போட்டு இருப்பான். நான் உன்னை காப்பாத்தறதுக்காக கொலைகாரனா மாறி நிக்கறேன் . நான் அவசரப்பட்டுட்டேனா ?” என்று பொங்கும் ராதா, அந்த விரக்தியில்  செல்லதுரையை புறக்கணிக்கிறான். சமாதானம் செய்ய முயன்ற செல்லதுரையும் ஒரு நிலையில் கோபக்காரன் ஆகிறான் .

Vanmam Movie New Stills (3)ஜே பி , தடிய ரத்னத்தை பிசினசில் ஏமாற்றிய வகையில் இருபது கோடி ரூபாய் பணம் தரவேண்டும் என்று நீதிமன்றம் சொல்லிவிட , தடிய ரத்னம் இறந்து விட்ட  நிலையில் , தடிய ரத்னத்தின் குடும்பத்தை மிரட்ட சிறுமியான மகளை கொலை செய்ய முயல்கிறான் ஜே பி . அந்த குழந்தையை ராதா காப்பாற்றுகிறான். விளைவாக , தடிய ரத்னத்தை கொன்ற ராதா,  இப்போது  அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாகிறான் . அதே நேரம் கொலைகாரனாகிவிட்ட நிலையில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடனான திருமணத்தையும் நிறுத்திக் கொள்கிறான். அந்தப் பெண் ராதாவால் கண்ணீரோடு நிற்கிறாள்.

” நீ காதலிக்கும் தடிய ரத்னத்தின் தங்கையை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் ” என்று செல்லதுரைக்கு ஜே பி ஆசை காட்ட, அவனுடன் நெருக்கமாகிறான் செல்லத்துரை.

தடியரத்னத்தை ராதா கொன்றதை நேரில் பார்த்த இருவருக்கும் ஆரம்பத்தில் ராதா மீது கோபம் இருந்தாலும்,  ஒரு நிலையில் அது திட்ட மிட்ட கொலை இல்லை என்பதை அவர்கள் உணருகின்றனர் . அந்த நேரத்தில் தங்களையும் கொல்ல  வாய்ப்பு இருந்தும் ராதா மன்னித்து விட்டது …இப்போது முதலாளியின் குடும்பத்துக்கு பாதுகாப்புதவியாக இருப்பது…போன்றவற்றால் ராதாவை மனதளைவில் குற்றமற்றவனாக ஏற்கிறார்கள்.

அதே நேரம் முதலாளி இறக்கக் காரணம் வத்னாவை செல்லத்துரை காதலித்ததுதான் என்பதுவும் , இப்போது செல்லதுரை  ஜேபி பக்கம் இருப்பதும் செல்லதுரையை மட்டுமே குற்றவாளியாக பார்க்க வைக்கிறது.

தடிய ரத்னம் – ஜேபி சொத்துப் பிரச்னை பகையில் தடிய ரத்னம் குடும்பத்தை அழிக்க ஜே பி முயல அதை நிறைவேற்றும் ஜே பி யின் அடியாட்களை ராதா தடுக்க,  தடிய ரத்னத்தின் உதவியாளர்களில் ஒருவரை ஜே பி யின் அடியாள் கொல்ல, பதிலுக்கு ஜே பி யின் அடியாள் ஒருவனை ராதா கொல்கிறான்.

இதன் விளைவாக ராதாவும் செல்லதுரையும் பழைய நட்பை மறந்து சூடான வன்மத்துடன் நேரிடயாக மோதிக் கொள்ள, செல்லத்துரை வீட்டில் ஒரு உயிர் போகிறது

 ஒரு நிலையில்  நிதானம் இழக்கும் செல்லத்துரை “தடிய ரத்னத்தை உண்மையில் கொன்றது ராதாதான் . எனக்கும் என் காதலியின் அண்ணனுக்கும் ஆயிரம் பிரச்னை இருக்கும் . அடிதடி இருக்கும் . அதற்காக என் மாமனை இவன் எப்படி கொல்லலாம்?” என்று ஊருக்கு முன்னால் போட்டு உடைக்க , ராதா நொறுங்கிப் போய் நிற்க …

அப்புறம் என்ன ஆச்சு என்பதே வன்மம் .

Vanmam Movie New Stills (5)

சும்மா சொல்லக் கூடாது . திரைக்கதையில் ஆக்ஷன் , எமோஷன் , செண்டிமெண்ட்  , அடுத்தடுத்த அட்டகாச திருப்பங்கள் என்று,  இப்படி ஒரு முழுமையான கமர்ஷியல் படம் பார்த்து … அடடா! ரொம்ப நாளாச்சு .

நட்பு,  காதல், காதலால் நட்புக்குள் விரிசல், அதனால் எழும் ஈகோ என்று இந்தப் படத்தின் அடிப்படைக்கதை நமக்கு பழகிய ஒன்றுதான் என்றாலும் திரைக்கதையில் வழக்கமான விசயங்களை எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு தவிர்த்த வகையில் இயக்குனர் ஜெயகிருஷ்ணாவின் திறமை பளிச்சிடுகிறது .

உதாரணமாக குடிப்பழக்கம் உள்ள செல்லத்துரை குடி போதையில் உண்மையை உளறி விட்டான்  , குடும்பத்துக்கு உதவும் ராதாவுக்கே வத்னாவை திருமணம் செய்து வைக்க குடும்பம் முடிவு செய்கிறது … தன் காதலியையும் ராதாவையும் சேர்த்து ஜே பி பேசுவதை செல்லத்துரை நம்பி விட்டான் .. என்றெல்லாம் ”அய்யய்யோ… அய்யகோ” காட்சிகளை படத்துக்குள்  கொண்டு வந்து விடாமல் தவிர்த்த வகையில் ஜொலிக்கிறார் இயக்குனர் .

கதை இப்படிதான் போகும என்று அவ்வப்போது ஒரு உணர்வினை ஏற்படுத்தி பார்வையாளனை நம்ப வைத்து ஆனால் அப்படி இல்லாமல் வேறு திசையில் நகர்த்தி சுவாரசியக் கண்ணாமூச்சி ஆடிய விதத்தில் கவனிக்க வைக்கிறார் ஜெய் கிருஷ்ணா.  படம் முடியும் வரை இருக்கும் இந்த வித்தைதான் படத்தின் பெரும்பலம் .

Vanmam Movie New Stills (13)

ஒவ்வொரு நடிகனும் நடிக்க ஏங்கும் அட்டகாசமான கேரக்டரில் விஜய் சேதுபதி ! . அந்த கேரக்டரை அப்படி உணர்த்து வாழ்ந்திருக்கிறார். தடிய ரத்னத்தை கொலை செய்தது தான்தான் என்று செல்லத்துரை சொன்ன காட்சியில் சுக்கு நூறாகி அமைதியாக நிற்கும்போதும் கிளைமாக்ஸ் காட்சியிலும் கண்களை ஈரமாக்குகிறார் விஜயசேதுபதி.

விட்டேத்தியான இளைஞன் கதாபாத்திரத்தில் உற்சாகமாக ஸ்டைலாக துள்ளலாக நடித்து இருக்கிறார் கிருஷ்ணா . என் நியாயத்தை யாருமே கேட்க மாட்டேங்கறீங்க என்று வத்னாவிடம் புலம்பும இடத்தில் இதயம் தொடுகிறார் .

சுனைனா நடிப்பில் ஒகே .

Vanmam Movie New Stills (22)விஜய் சேதுபதியின் அப்பாவாக வருபவர், தடிய ரத்னத்தின் அடியாளாக வருபவர்கள், மனைவியாக வரும் ஸ்ரீரஞ்சனி, கிருஷ்ணாவின் அண்ணனாக வரு போஸ் வெங்கட் , அண்ணியாக வரும் வினோதினி, .. என்று பாத்திரங்களுக்கு சரியான நடிகர்களை சிறப்பாக தேர்வு செய்து அசத்தி இருக்கிறார் இயக்குனர். வில்லனாகவே இதுவரை வந்த வழக்கு எண் முத்துராமனை மடை மாற்றி தடிய  ரத்னத்தின் மாமனாராக கேரக்டர் ரோலில் நடிக்க வைத்து இருப்பதும் நேர்த்தி .

தமனின் இசையில் பாடல்கள் பாஸ் ஆனாலும் பின்னணி இசை முக்கால் கிணறு மட்டுமே தாண்டுகிறது . ஆரம்பத்தில் வரும் புலியாட்டக்காட்சிகளில் எல்லாம் இன்னும் பின்னிப் பெடல் எடுத்து இருக்க வேண்டாமா ?

லொக்கேஷன் அட்டகாசமாக இருப்பதால் பாலபரணியின் ஒளிப்பதிவும அசத்தலாக இருக்கிறது .

நாஞ்சில் நாட்டுக் கதை என்பதால் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் சிலையை காட்டி படத்தை ஆரம்பிப்பது அழகு . அந்த மண்ணின் பழக்க வழக்கங்கள், சடங்குகள் , சம்பிரதாயங்கள், கூட்டு நிகழ்வுகளில் அந்த மக்களின் உடல் மொழிகள் (குறிப்பான தடிய ரத்னத்தின் மரணம் தொடர்பான காட்சிகள் ) ஆகியவற்றை சிறப்பாக பதிவு செய்து படமாக்கலிலும் அசத்தி இருக்கிறார் இயக்குனர்  ஜெய் கிருஷ்ணா.

இதுவரை தமிழ் சினிமா அதிகம் அறியாத நாஞ்சில் நாட்டுத் தமிழ் வழக்காடல் படத்துக்கு ஒரு புதுமைத் தன்மையை கொடுத்து இருப்பதையும் பாராட்டாமல் இருக்க முடியாது .

வன்மம் …. திண்மை

மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————
இயக்குனர் ஜெய் கிருஷ்ணா, விஜய் சேதுபதி, கிருஷ்ணா , விஜய் சேதுபதியின் அப்பாவாக வருபவர்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →