சக்கரவர்த்தி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நேரு நகர் நந்து தயாரிக்க, விதார்த் மற்றும் புதுமுகம் சமஸ்கிருதி இணையர் நடிப்பில் ஸ்டாலின் ராமலிங்கம் என்பவர் இயக்கி இருக்கும் படம் காடு . படத்தில் ரசனைப் பசுமை எந்த அளவுக்கு இருக்கிறது ? பார்ப்போம் .
தருமபுரி மாவட்டத்தின் மலைக்கிராமங்களில் நிகழும் கதை . அப்படி ஒரு கிராமத்தில் வாழும் இளைஞனான வேலு (விதார்த், ) படிப்பறிவு இல்லாத போதும் அனுபவ அறிவு காரணமாக காடுகள் , தாவரங்கள், பல்லுயிர், இயற்கை இவற்றை நேசிப்பவன் . ‘வயிற்றுப் பிழைப்புக்காக மரம் வெட்டிப் பிழைப்போம் . ஆனா வசதியான வாழ்வுக்காக காட்டில் உள்ள ஒரு செடியை கூட பிடுங்க மாட்டோம்’ என்ற கொள்கை உடையவன் . விறகு வெட்டி விற்று பிழைப்பு நடத்தும் அவனுக்கும் ஊரில் டீக்கடை வைத்து இருக்கும் செட்டியாரின் (தம்பி ராமைய்யா) மகள் பூங்கொடி (சம்ஸ்கிருதி) என்ற பள்ளி மாணவிக்கும் காதல் .
சந்தன மரம் செம்மரம் கடத்தும் கும்பல் ஒன்று வேலுவை வளைத்துப் போட்டால் நிறைய கடத்தல் செய்யலாம் என்று எண்ணி முயன்றும், வேலு தனது நேர்மை காரணமாக அவர்களை வெறுக்கிறான் . வேலுவின் நண்பனும் ஃபாரஸ்ட் ரேஞ்சர் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கும் படித்த இளைஞனுமான கருணா (முத்துக்குமார்), அந்த வேலைக்கு அதிகாரிகள் கேட்கும் இரண்டரை லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க முடியாததால் கஷ்டப்படுகிறான் .
அந்தப் பணத்துக்காக அவன் கடத்தல்காரர்களுக்கு உடன்படுகிறான். சந்தன மரம் கடத்தும்போது போலீசிடம் சிக்கிக் கொள்கிறான் . ‘தன் மேல் வழக்கு விழுந்து விட்டால் அப்புறம் வேலைக்கே போக முடியாது’ என்பதால் வேலுவை மாட்டி விடுகிறான் . வேலு ஜெயிலுக்கு போகிறான். ஜெயிலில் நந்தா (சமுத்ரக்கனி) என்ற புரட்சி எழுத்தாளரால் சமூகத்தை பார்க்கும் பார்வையில் வேலு தெளிவு பெறுகிறான் . கொண்ட கொள்கையை விட முடியாமல் ஜெயிலில் மரிக்கிறார் நந்தா .
வெளியே, கருணா ஃபாரஸ்ட் ரேஞ்சர் ஆகிறான். ஆன பிறகும் நேர்மையானவனாக மாறாமல் கடத்தல் நபர்களுக்கு துணை போகிறான் . அது மட்டுமல்ல, கடத்தல்காரர்களுக்கு வசதி செய்வதாக, காலம் காலமாக காட்டில் வாழும் மக்களை அங்கிருந்து துரத்தி நகர்ப்புறங்களுக்கு கூலிக்காரர்களாக அனுப்பும் இனத் துரோகத்தையும் கருணா செய்கிறான் . விஷயம் அறிந்து ஜெயிலில் இருந்து விடுதலையாகும் வேலுப்பிள்ளை … அதாவது வேலுவுக்கும் , கருணாவுக்கும் இடையே என்ன நடந்தது என்பதுதான் காடு .
படம் துவங்கி முடியும் வரை நாமும் ஒரு மலைக் கிராமத்தில் அடர் வனத்தில் வாழ்வது போன்ற உணர்வு . அதற்கு காரணம் இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கத்தின் காட்சி அமைப்பும் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவும் , மு.காசி விஸ்வநாதனின் படத் தொகுப்பும் .
மலைக் கிராம முகங்கள் , அவர்களது பழக்க வழக்கம் , சடங்குகளின் மண் சார்ந்த தன்மை , ஆன்மீகம் , வாழ்வியல் , என்று கொஞ்சம் கூட அந்நியத்தன்மை இல்லாமல் படம் விரிகிறது .
மலைவாழ் மக்களும் தங்கள் சொந்த மண்ணில் இருந்து பிய்த்துப் பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப் படுகிற கொடுமையை கவனமாகவும் ஆழமாகவும் சொல்கிறது படம்.
வேலு கேரக்டருக்காகவே பிறந்தது போல அவ்வளவு பொருத்தமாக பொருந்துகிறார் விதார்த்.சின்னப் பெண்ணா இளம்பெண்ணா என்ற குழப்பத்தை ஏற்படுத்தினாலும் புதுமுகம் சம்ஸ்கிருதி ‘ஃபிரெஷ்’ஷாக இருக்கிறார் .
சாக்ரடீஸ் , பகத்சிங் , இவர்களின் பாதிப்பில் உருவாக்கப்பட்டு இருக்கும் நந்தா கேரக்டரில் சமுத்ரக்கனி … முக்கனி !
”இந்தக் காட்டில் இருக்கும் ஒவ்வொரு மரமும் உன் பாட்டன் , பூட்டன் முப்பாட்டன் . அவங்கள வெட்டுறவன நீ வெட்டு “, என்ற வசனம் , “காட்டை அழிக்கிற மனிதனை காட்டைத் திருத்தினான் னு சொல்றோம். ஆனா தன்கள் இடத்தில் உலவும் மிருகங்களை பார்த்து வன விலங்குகள் அட்டகாசம் பண்ணுதுன்னு சொல்வோம் ” என்ற வசனம்…. …..”உலகத்தில் சமாதானம் முன்வைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அதிகாரம்தான் ஜெயித்து இருக்கு. உரிமைகளை முழுமையாக பெற ஒரே வழி, போராடி பெறுவதுதான் ” இவை போன்ற வசனங்கள் உலகத்தரம்.
எல்லாம் சரிதான் .. ஆனால் திரைக்கதையில்தான் மிகவும் பலவீனப்படுத்திவிட்டார்கள் படத்தை .
எடுத்த எடுப்பிலேயே படம் பேச இருக்கும் பிரச்னை பற்றிய ஒரு விசயத்தை அழுத்தமாக அதிர்ச்சி கொடுக்கும்படி சொல்லி எதிர்பார்ப்பை உண்டு பண்ணி அப்புறம் கதாபாத்திரங்கள் காதல் என்று திரைக்கதையை வனைந்திருக்க வேண்டாமா?
முன்பகுதியை அநியாயமாக ஆக்கிரமிக்கிறது தம்பி ராமய்யா சிங்கம் புலியின் சவசவ டீக்கடை காட்சிகள் . அதில் எப்போதாவது ஒரு முறை சிரிப்பதற்காக பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருக்க வேண்டி இருக்கிறது .
காதல் காட்சிகளிலும் அழுத்தமில்லை . ஈர்ப்பும் இல்லை .
ஒரு காட்சியை எவ்வளவு நேரம் சொல்ல வேண்டும் என்பது அதன் உள்ளடகத்தை பொறுத்த விஷயம் . அந்த அளவீட்டில் ரொம்பவும் தவறி இருக்கிறார் இயக்குனர் . டீக்கடைக் காட்சிகள் அனைத்தும் இதற்கு உதாரணம் . தவிர, வேலுவும் இளைஞர்களும் சைக்கிளில் விறகு கட்டிக் கொண்டு வருவதை எவ்வளவு நேரம் காட்டிக்கொண்டு இருப்பீர்கள்? அதில் சம்பவங்களும் பெரிதாக இல்லை .
படத்தின் ஒரு கட்டத்தில் திடீரென்றுதான் வேலுவும் கருணாவும் சந்தித்துக் கொள்கிறார்கள் . இருவரும் எந்த அளவுக்கு நெருக்கமான நண்பர்கள்? அவ்வளவு நேர்மையான வேலு, தன்னிடம் கருணா வந்து “என்னை போலீஸ் பிடித்து விட்டது . குற்றத்தை நீ ஏற்றுக் கொள் ” என்று சொல்லும்போது கருணா கூடப் போவது ஏன் ? அங்கே போய் நான் கடத்தவில்லை என்று சொல்வது ஏன் ? தன்னை அடிக்கும் அதிகாரியை திருப்பி அடிப்பது ஏன் ? குற்றத்தை ஏற்றுக் கொள்ள சொல்லி கெஞ்சும்போது “ஒரு வாரத்தில் உன்னை ஜெயிலில் இருந்து மீட்டு விடுவேன்” என்று சொன்ன கருணா , வராத போதே அவன் அயோக்கியன் என்பதை உணராதது ஏன் ? இத்தனைக்கும் பிறகு ‘கருணாதான் உன்னை பிடிச்சுக் கொடுத்தான்’ என்று பூங்கொடி சொல்லும்போது ‘அப்படியெல்லாம் இருக்காது’ என்று உணர்ச்சிவசப்படுவது ஏன் ?கடைசியில் உயர் அதிகாரியிடம் ”நீங்க லஞ்சம் கேட்டதாலதான் அவன் தப்பான வழிக்கு போனான் ” என்று செத்துப் போன கருணாவுக்கு பரிந்து பேசுவது ஏன்? இவ்வளவு நடக்கும் ஒரு கதையின் அடிப்படையில் வேலு கருணா நட்பை ஆழமாக சொல்லாதது ஏன் ?
— இப்படி ஏகப்பட்ட கேள்விகள் .
அதோடு, இது பாமர மக்களுக்குள் போய் சேர வேண்டிய விஷயத்தை சொல்லும் படம் என்பதால் நந்தா யார் ? அவர் என்ன செய்தார் ? எதனால் ஜெயிலுக்கு வந்தார் ? அவரது எதிரிகள் யார் ?அவரை சாகடிக்க அவர்கள் திட்டமிடுவது ஏன் ? என்பதை வார்த்தைகளிலாவது எல்லோருக்கும் புரியும்படியும் அழுத்தமாகவும் சொல்லி இருக்கலாம் . இன்னொரு பக்கம் அவரையும் வேறு விதத்தில் வனம் சம்மந்தப்பட்ட ஒரு போராளியாகவே சித்தரித்து இருந்தால் இன்னும் கனம் கூடி இருக்கும் .
படத்தின் கடைசியில் பேசப்படும் முக்கியக் கோரிக்கையை ஆரம்பத்திலேயே வேறு ஒரு இடத்தில் வசனமாக வைத்து தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்து இருக்கிறார் இயக்குனர் .
முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் வனம் சம்மந்தப்பட்ட இன்னும் பல விசயங்களை அழகாக சொல்லி இருக்க முடியும் . அது படத்துக்கு பெரும் பலமாகவும் இருந்து இருக்கும். அந்த வகையில் கால்பந்து மைதானத்தில் கோலி குண்டு ஆடி இருக்கிறார் இயக்குனர் .
ஆனாலும் என்ன …
“நகரத்தில்பிறந்து மாநகரத்தில் படித்து பிட்சாவும் பர்கரும் தின்று வளர்ந்தவனை காட்டிலாகா அதிகாரியாகப் போட்டால் என்ன பலன் ? அரசுக்கு பணம் வருது என்ற ஒரே காரணத்துக்காக காடு முழுக்க, தேக்கு மரமும் தைல மரமும் மட்டும் போடறீங்க . மற்ற மரங்கள் எல்லாம் எங்க ? புலி இருக்கும் காடுதான் முழுமையான காடு . இருக்கிற புலியை எல்லாம் கூண்டுல அடிச்சு வச்சிட்டு காட்டை நாசப் படுத்திட்டீங்க . இனிமேலாவது எங்க காட்டை பாதுக்காக்கும் வேலையை அரசு எங்ககிட்டேயே கொடுக்கணும் . நாங்க உங்களை விட காட்டை நன்றாக பாதுகாப்போம் ” என்ற அற்புதமான விசயத்தை அரசுக்கு கோரிக்கையாக வைத்து நிறைவடையும் விதத்தில் ரசிகர்கள் ஆதரிக்க வேண்டிய படமாகிறது இது .
நிச்சயமாக இந்தப் படத்தை விருதுகள் அலங்கரிக்கும் . இல்லை இல்லை…. விருதுகளை இந்தப் படம் அலங்கரிக்கும் . இப்படி ஒரு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் பாராட்டுக்குரியவர்
காடு …. அடர்த்தி
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————
விதார்த், சமுத்ரக்கனி, ‘வசனகர்த்தா’ ஸ்டாலின் ராமலிங்கம் , மகேந்திரன் ஜெயராஜ் , மு.காசி விஸ்வநாதன், நேரு நகர் நந்து