ரெட் ஃபிலிக்ஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் மற்றும் முயற்சி படைப்பகம் சார்பில் சந்திரசேகர் மாணிக்கம் மற்றும் கார்த்திக் தாஸ் தயாரிக்க, கார்த்திக் தாஸ், சப்னா தாஸ், ஆவிஸ் மனோஜ், கணேஷ் , கிருஷ்ணகுமார் லக்ஷமன், பாலாஜி ராஜசேகர் நடிப்பில் கார்த்திக் தாஸ் எழுதி இயக்கி கதாநாயகர்களில் ஒருவராக நடித்து இருக்கும் படம் வரிசி.
வரிசி என்றால் தூண்டில் என்று பொருள் .
கால் டாக்சி டிரைவர் ஒருவர் ஐ டி கம்பெனி பணி முடிந்து இரவு நேரத்தில் கால் டாக்சியில் வீடு திரும்பும் ஓர் இளம்பெண்ணை, கால் டாக்சி டிரைவர் முகத்தில் மயக்க மருந்து செலுத்தி , ஒருவன் கடத்துகிறான் . கடத்தல்கள் தொடர்கின்றன
அனாதை இல்லத்தில் சிறு வயது முதலே வளர்ந்த ஓர் ஆணும் பெண்ணும் ( கார்த்திக் தாஸ் – சப்னா தாஸ் ) காதலிக்கிறார்கள். அவர்களுக்குள் ஊடலும் வருகிறது .
முக நூலில் ஒருவன் தன்னை பெண் என்று கூறி பல் பெண்களிடம் பேசுகிறான் . குற்றவாளிகள் காதல் ஜோடியோடு ஒரு புள்ளியில் இணையும் போது என்ன நடக்கிறது என்பதே இந்த படம் .
படம் முழுக்க இளமை வழிகிறது .
செல்போன்கள், கேமராக்கள் , இணையச் செயலிகள் இவற்றை வைத்து எப்படி யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்பதை அதிரும்படி சொல்கிறார்கள்.
நந்தா இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது . முத்து மோகனின் ஒளிப்பதிவு ஆடை வடிவமைப்பு இவையும் அருமை .
ஆரம்பத்தில் நன்றாகப் போகும் படம் , ஒரு நிலையில் திரைக்கதையில் மிகவும் குழம்புகிறது . தேவைக்கு மேல் நீள்கிறது . வலுவிழக்கிறது . பெரும்பாலான பேருக்கு நடிப்பு கைவரப் பெறவில்லை .
இன்னும் நல்ல திரைக்கதை, நடிக நடிகையர் , படத் தொகுப்பு அமைந்து இருந்தால் படம் ரசிகர்களையும் வரிசி போட்டு இழுத்திருக்கும்.