E4 என்டர்டைன்மென்ட் சார்பில் முகேஷ் மேத்தா தயாரிக்க, பாலா இயக்கத்தில் , நடிகர் விக்ரமின் மகன் துருவா கதாநாயகனாக அறிமுகம் ஆகும் படம் வர்மா.
மேகா கதாநாயகியாக நடிக்கிறார் . முக்கியக் கதாபாத்திரத்தில் ரைசா நடிக்கிறார். தெலுங்கில் வெளி வந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மறு உருவாக்கமே இது . பாலா இயக்கும் முதல் மறு உருவாக்கப் படமும் இதுதான் . இசை யுவன் சங்கர் ராஜா .
படத்தின் சிறு முன்னோட்ட வெளியீட்டு விழாவில் அது துருவ் வின் பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது .
வெளியிடப்பட்ட சிறு முன்னோட்டத்தில் ,மழு மழு சவரம், அரை குறை தாடி, முனி புங்கவ தாடி என்று பல்வேறு தோற்றங்களில் வருகிறார் துருவ்.
உள்ளே இருந்து எட்டிப் பார்க்கிறது அப்பனின் முகம் .
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் முகேஷ் , ” அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் தயாரிக்க நினைத்தபோது, துருவ் வெளியிட்டிருந்த சில டப்ஸ்மாஷ்கள் பார்த்தேன் .
இந்த பையன்தான் ஹீரோ என்று முடிவு செய்தேன் . அப்பா யார் என்று தெரிந்த பிறகு ரொம்ப சந்தோஷமாக இருந்தது . ஹீரோ ஆக்கி விட்டேன் ” என்றார் .
தயாரிப்பாளர் காட்றகட்றபிரசாத் தனது பேச்சில், ” புலிக்குப் பிறந்தது பூனையாகாது . துருவ் பெரிய உயரங்களை அடைவார்” என்றார் .
“பாலா சார் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது பெருமை ” என்றார் நாயகி மேகா.
சீயான் விக்ரம் , “என்னை உருவாக்கிய பாலா சார் என் மகனின் முதல் படத்தையும் இயக்குவது பெருமையாக இருக்கிறது .
அதுவும் ரீமேக் பண்ண விரும்பாத பாலா என் மகனுக்காக இறங்கி வந்து ரீமேக் செய்தது சந்தோசம் .
ஷூட்டிங் போன மூன்றாம் நாள் பாலா என்னிடம் , ‘ துருவ் ஃபார்முக்கு வந்துட்டான்’ என்றார் . சந்தோஷமாக இருந்தது .
பாலாவிடம் போனால் கல்லும் கூட நடித்து விடும் . என் மகன் நன்றாக நடித்திருக்கிறான் ” என்றார் .
பாலா தனது பேச்சில் ” என்னை அதிகம் கஷ்டப்படுத்தாத ஹீரோவாக துருவ் இருந்தான் . மிக நல்ல நடிகன் அவன் ” என்றார் .
துருவ் பேசும்போது, ” நான் வெட்டியாக இருந்தபோது சும்மா போட்ட டப்ஸ்மாஷ்கள் அவை. அது எனக்கு படம் வாங்கித் தரும் என்று நான் நினைக்கவே இல்லை . நான் சின்ன வயசில் இருந்து பாலா மாமா வீட்டுக்கு எல்லாம் போய் விளையாடுவேன் . எனவே அவர் எனக்கு ரொம்ப நெருக்கம் ,
இருந்தாலும் ஷூட்டிங் போன முதல் நாள் டென்ஷனாக இருந்தது . அப்புறம் சரியாகி விட்டது .
என் மீது மிகுந்த அன்பு கொண்டு ஆதரிக்கும் அப்பாவின் ரசிகர்களுக்கு நன்றி ” என்றார் .