Rise East Entertainment சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, லாவண்யா, பார்வதி, ஜீவா ரவி நடிப்பில்,
பவன் எழுதி இயக்க, அக்டோபர் 10 முதல் Zee 5 ஓ டி டி யில் காணக் கிடைக்கும் தொடர் ‘வேடுவன்’ .
வேடுவன் என்ற செ(ழு)ந்தமிழ் சொல்லுக்கு வேட்டையாடுபவன், காவல் வேலை செய்பவன் , போர்த் தொழில் செய்பவன், ஒரு குறிப்பிட்ட பழங்குடி பிரிவினர் , ஒரு வகையான கொட்டும் குளவி என்று பொருள். இலங்கையில் வாழ்ந்த ஆதித் தமிழ் சமூகம் ஒன்றுக்கு வேடுவர்கள் என்ற பெயரும் இருந்தது.
இந்த வேடுவன் வலைத் தொடர் ஒரு என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியின் கதை .
ஆனால் முன்பே ரஜினிகாந்தே இதே கேரக்டரில் வேட்டையன் என்ற பெயரில் என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடித்து விட்டதால் இதற்கு வேடுவன் என்ற பெயரை வைத்துள்ளனர். எனினும் ஒரு நல்ல தமிழ்ப் பெயரை வைத்ததற்குப் பாராட்டுகள் .
சினிமா ஹீரோ அருண் (கண்ணா ரவி) .
அவரது சமீபத்திய படங்கள் வெற்றி பெறாதது அவருக்குப் பெரும் பிரச்னையாக இருக்கிறது . எந்தப் படத்தின் கதையிலும் மூக்கை நுழைத்து அவர் கதையைக் கெடுப்பதும் அவரது தோல்விக்கு ஒரு காரணம் என்ற கருத்து சமூக ஊடகங்களில் இருக்கிறது .
இந்த நிலையில் அவருக்கு கதை சொல்ல வருகிறார் ஓர் இயக்குனர் . அது ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் கதை . கேட்க ஆரம்பித்த சில நிமிடங்களில் கதை பிடித்து நடிக்க ஒத்துக் கொள்கிறார் ஹீரோ .
உயர் அதிகாரியின் ரகசிய உத்தரவுப்படி பெரிய தாதாக்கள் ரவுடிகளை, தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் சுட்டுக் கொல்லும் என்கவுன்ட்டர் அதிகாரி கேரக்டர் (அதுவும் கண்ணா ரவி) . மனைவி (ஸ்ரவ்னிதா ஸ்ரீகாந்த்). ஒரு மகன்
சென்னை கடற்கரையில் ஒரு தாதாவை நாற்பது நாட்கள் இரவும் பகலும் பிச்சைக்காரன் வேடம் போட்டு , சமயம் பார்த்து அவர் போட்டுத்தள்ள , தாதாவின் மனைவியும் கேங்கும் ஆள் யார் என்று கண்டு பிடித்துப் போட்டுத்தள்ள அலைகிறது .
என்கவுன்ட்டர் அதிகாரிக்கு போலீஸ் துறையில் செய்யோன் என்ற ரகசிய பெயர் உண்டு என்ற விவரம் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது . ஆள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அந்த என்கவுன்ட்டர் அதிகாரியை தென் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரில் வாழும் தாதாவும் ஒரு சிறிய கட்சியின் தலைவருமான ஆ……..தி ( சஞ்சீவ்) வெங்கட்) என்பவனை போட்டுத் தள்ள, அனுப்புகிறார் உயர் அதிகாரி,
அந்த ஊருக்குப் போய் ஒரு பரோட்டா கடையில் மாஸ்டராக வேலை செய்து கொண்டு தக்க சமயத்துக்கு காத்திருக்கிறார் என்கவுன்ட்டர் அதிகாரி .
இந்த நிலையில் அதே ஊரில் – தனது கல்லூரிக் காலக் காதலியாக இருந்து, ஒரு நிலையில் எங்கு போனாள் என்று தெரியாமல் போன பெண்ணை (வினுஷா தேவி), சந்திக்கிறார் .
அவள் வீட்டுக்குப் போனால்… எஸ்…. யூ ஆர் கரெக்ட் , அந்த முன்னாள் காதலியின் கணவர் தான் , அந்த அரசியல்வாதி தாதா ஆதி .
எனினும் போலீஸ் அதிகாரியை மனைவியின் கல்லூரி கால நண்பர் என்று மட்டும் புரிந்து கொண்டு, அந்த ஆதி வீட்டுக்குள் மனைவி குழந்தைகளிடம் பழக விடுகிறார் . அந்த நட்பில் மனைவியும் பிள்ளைகளும் மகிழ்வதை உணர்கிறார் .
என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரிக்கு இப்போது உயர் அதிகாரி சொன்னதை செய்வதா , இல்லை முன்னாள் காதலிக்காக தாதாவை விட்டு விடுவதா என்ற குழப்பம்.
இந்த நிலையில் ஆதிக்கு , தன்னைக் கொல்ல வந்திருக்கும் என்கவுன்ட்டர் அதிகாரிதான் , மனைவியின் நண்பன் என்று தெரிய வர, நடந்தது என்ன தொடர் .
அட்டகாசமான மேக்கிங்கில் படத்தை இயக்கியுள்ளார் பவன் . ஷாட்ஸ், ஃபிரேம்ஸ், கேமரா நகர்வுகள் யாவும் அருமை . ஸ்ரீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவுக்கும் இதில் பெரும்பங்கு உண்டு .
விபின் பாஸ்கரின் இசை பரபரப்பை ஏற்றி அதிர வைக்கிறது . கேமரா நகர்வுகளுக்கு ஒத்திசைவான இசை கொடுத்து பாராட்டுப் பெறுகிறார் விபின் பாஸ்கர் .
சூரஜ் கவியின் படத் தொகுப்பு பட்டுத் துணியை சாணை தீட்டிய கத்திரிகோலில் நறுக்குவது போல, சும்மா தெறிக்கிறது . ஒவ்வொரு எபிசோடையும் முடித்து , அடுத்த எபிசோடை சும்மா வெட்டியாக இழுக்காமல் விட்ட இடத்தில் இருந்தே தொடங்கும் விதம் ஷார்ப்.
ஹீரோ மற்றும் என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியாக கண்ணா ரவி, அசத்தல் கண்ணா . .
இந்த நாலு பெரும் சேர்ந்து சித்திரவதைக்கு ஆளாகாமல் ரசிகர்கள் தொடரைப் பார்க்கின்றனர்
சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், ஜீவா ரவி உட்பட பலர் சிறப்பாக நடித்துள்ளனர்
வசனங்கள் சில இடங்களில் மிக சிறப்பாக உள்ளன . அதுவும் ‘ எது உண்மை , வரலாறு என்பது எப்படி ‘ என்பது பற்றிய அந்தக் கடைசி வசனம் மிக சிறப்பு . (ஆனால் அதை முதலில் ஆர்ட்டிஸ்ட் பேசும் வசனமாக வைத்து அப்புறம் டைட்டிலாக ரிபீட் செய்யாமல், கடைசியில் டைட்டிலாக மட்டும் வைத்து இருக்கலாம். )
இப்படி பாராட்டப்பட்ட பல விஷயங்கள் இருந்தாலும் திரைக்கதைதான் இந்த சீரியஸை பெரிதாகப் பார்க்கிறது .
தாதாக்கள்…. என்கவுன்ட்டர்… அதில் என்கவுன்ட்டர் அதிகாரிகளில் சாகசங்கள், கஷ்டங்கள் , பரபரப்புகள் இவை எல்லாம் யதார்த்தமான விஷயங்கள். அந்த யதார்த்தத்தை ஆடியன்ஸ் உணர்ந்தால்தான் கனெக்ட் ஆகும் .
இல்லாவிட்டால் பார்க்கும் போதுதான் என்னதான் வேகமாகப் போனாலும் பார்த்து முடித்த உடன் எந்த உணர்வையும் தராமல் கடந்து போய்விடும்
இங்கேயும் அதுதான் நடந்துள்ளது .
உண்மைக்கு நெருக்கமான கதைக்கு நாடகத்தனமான காட்சிகள் , அல்லது லாஜிக் இல்லாத காட்சிகள் அல்லது தேவையற்ற விசயங்களை சொல்லி அவையும் பெரும்பாலும் சாதாரண ரசிகனும் எளிதில் யூகிக்க முடிவதாகவே இருப்பது … . இது போன்ற விசயங்களால் , எடுத்தவர்களே தங்கள் படைப்பை பார்ப்பவர்களிடம் இருந்து அன்னியப்படுத்துகிறார்கள்.
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகர் ஆம்ஸ்ட்ராங் போன்றோரை நினைவு படுத்த முயன்றனர் . ஆனால் இந்தக் கதைப்போக்கு அது பலன் தரவில்லை.
என் கவுண்டர் போலீஸ் அதிகாரியின் காதலி, தன் குடும்பத்தில் பிரச்னை வந்தபோது என் காதலனிடம் சொல்லவில்லை. எதற்கு ஒரேயடியாக ஊரை விட்டு ஓடிப் போனாள்? எனில் அது நிஜக் காதல் இல்லையா? இல்லை எனில் அதன் பிறகு, எதற்கு இப்படி ஒரு திரைக்கதை வளர்ச்சி ?
ரோட்டில் உட்கார்ந்து இருந்தபோது ஆதி வந்து சாப்பிட்டியா என்று கேட்டாராம் அதன் தொடர்ச்சியாக அவர் மனைவி ஆனாளாம் அந்தக் காதலி . போங்க பாஸ்.
அதுவும் அவள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகத்தான் இருந்தாளாம் . தாதா ஆதி அவளைத் ‘தொடவே’ இல்லியாம் .
ஏன் ? எனில் அவள் இத்தனைக்குப் பிறகும் முன்னாள் காதலனான போலீஸ் அதிகாரியோடு வாழக் காத்திருந்தாளா?
ஐயோ… அவள் ஆதியோடு வாழ்ந்துதான் இருக்கட்டுமே .அந்தப் பிள்ளைகள் அவளுக்கும் ஆதிக்குமே நிஜமாகப் பிறந்து இருக்கட்டுமே . இப்போது இருக்கிற கிளைமாக்சுக்கு அதனால் என்ன குடி முழுகிப் போய்விடும் ?
இதுவாவது கடைசியில் வரும் காட்சி .
‘இவர் என்ன தாதாவா இல்லை (காந்தித்) தாத்தாவா?/’ நெகிழ்ந்து நெக்குருகி கண்ணீர் சிந்தியபடி கேட்கும் அளவுக்கு அநியாயத்துக்கு நல்லவராக இருக்கிறார் ஆதி . .
‘இவரை என்கவுன்ட்டர் பண்ண எதற்கு இந்த போலீஸ் அதிகாரி வேலை மெனக்கெட்டு வந்திருக்கான்?’ என்று நமக்கு தாதா ஆதி அறிமுகமாகும். ஆனால் அதற்கு மூன்று எபிசோடுக்கு அப்புறம், பள்ளிப் பிள்ளைகள் வந்து ”கடவுள் உள்ளமே.. கருணை இல்லமே…” ரெஞ்சுக்குப் பாடிய பிறகுதான் போலீஸ் அதிகாரிக்கு புரிகிறது .
”பதினேழு வயசுல ஜெயிலுக்கு போனான் . நாற்பது கொலை பண்றான்” என்று பின்னணிக் குரல் கொடுத்தால் மட்டும் போதுமா? பேர் வச்ச மாதிரி கொஞ்சம் சீன் என்கிற சோறும் வைக்க வேண்டாமா?
ஆதியைப் பார்த்தால் தனது வாழ்வில் நாற்பது தென்னங்குலையை கூட வெட்டி இருக்க மாட்டான் போல . அநியாயத்துக்கு அறை என் 305 இல் கடவுள் , சாரி, Zee 5 ஓடிடி யில் கடவுள் போல இருக்கிறார் ஆதி . அடி ஆத்தி !
அவர்தான் அப்படி என்றால் அவரது அடியாட்களும் பார்ப்பதற்கு கரடு முரடாக தாடியும் வெட்டுத் தழும்புமாக இருந்தாலும் குணத்தில் பிள்ளைப் பூச்சிகளாக, சைவ டைனோசார்கள் போல இருக்கிறார்கள் .
ஆதிதான் தனது காதலியின் கணவன் என்று தெரியாமலே , தனது காதலியைப் பார்க்கப் போகும் என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி, எதற்கு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு போக வேண்டும் . ஒரு வேளை அவர் 24 X 365X 100 போலீஸ்காரரா என்ன ? ஒரு விஷயம் டைரக்டருக்குத் தெரிந்தால் போதுமா? கேரக்டருக்கு தெரிய வேண்டாமா?
அப்படியே இருந்தாலும், ஏதாவது ஒரு சைடு முடிவு எடுக்கணும் . இப்படியும் போய் அப்புறம் அப்படியும் போய் அப்படிப் போனதற்காக இப்படி ஆகி அது எப்படியோ ஆகிறது .
என்கவுன்ட்டர் போலீஸ் பற்றி கடைசியாக கேட்கும் கேள்வியை நடிகன் கேட்கிறான் என்று சொல்லாமல், டைரக்டர் கேட்கிறார் . ஹீரோ கதையை மாற்றுகிறேன் என்ற அவப் பெயரில் இருந்து தப்பிக்க, மாற்றக் கூடாது என்று சொல்கிறான் . டைரக்டர் தானே விரும்பி மாற்ற முயல்கிறார் என்று போனால் கூட இன்னும் சுவையாக இருக்கும் . அதுவும் இல்லை.
இப்படி பல எபிசோட் அளவுக்கு கேள்வி கேட்கலாம் . ஆனால் போதும்.
தாதா பொண்டாட்டி என்பதால் ஓங்குதாங்க இருக்க வேண்டும் என்பதற்காக அவரது மனைவி கேரக்டரில் வினுஷாவை போட்டு இருக்கிறார்கள் . ஆனால் அவரிடம் இயக்குனர் முழு கதையையும் முன்னரே சொல்லி விட்டார் போல. எல்லாம் தெரிந்த ஏக நாயகியாக அவர் சும்மா நடித்துக் குவிக்கிறார் .
உண்மையில் அந்த கேரக்டர் செய்யும் எல்லாமும் கடைசிவரை நியாயமானதே . அப்படி இருக்க இன்னொரு வெர்ஷனில் அந்தக் கேரக்டரை என்னமோ வில்லி போல அரசியல் ஆசை கொண்டவர் போல சித்தரிப்பது ஒரு கொடுமை என்றால் அதற்கு . ஐஸ்வர்யா ரகுபதியைப் போட்டு இருப்பது காமெடி. அவர் ஏதோ வில்லி போல முறைக்கும்போது தயிர்வடை தேசிகனுக்கு ராஜராஜ சோழன் கிரீடம் வைத்த மாதிரி இருக்கிறது .
எனினும் பார்க்கும்போது ரசிகர்களை பதம் பார்க்காது எந்த வேடுவன் .
”இன்னும் இட்லி கடை காந்தாராவே பாக்கல. தீபாவளி பட்ஜெட் பத்தல..” என்பவர்கள் தயங்காமல் அக்டோபர் பத்து முதல் Zee 5 தளத்தில் இந்த வேடுவன் தொடரை பார்க்கலாம் .
மொத்தத்தில் வேடுவன் … கெட்டப் எல்லாம் ஓகே . வில், அம்பு, கவண் கல் ஆகிய செட்அப்தான் பலவீனம் .
