வைரம் சினிமாஸ் சார்பில் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிக்க , ரஞ்சித், மேகாலி மீனாட்சி, விட்டல் ராவ், கதிரவன் , புதுப்பேட்டை சுரேஷ், சிறுமி மவுனிகா, சிறுவன் நீலேஷ் நடிப்பில் வெங்கட் ஜனா எழுதி இயக்கி இருக்கும் படம்.
ஜவுளிக்கடை உரிமையாளர் ரவிச் சந்திரன் (ரஞ்சித்), தன் மகன் குமரனின் (நீலேஷ்) மருத்துவ செலவுக்காகவும் தொழில் விருத்திக்காகவும் கந்துவட்டி தாதா ராஜப்பாவிடம் (விட்டல் ராவ்) எண்பது லட்ச ரூபாய் கடன் வாங்க , வட்டி மேல் வட்டி வாங்கி, அசலுக்கு மேல பல மடங்கு கொடுத்த பின்னரும் இன்னும் ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டுகிறான் ராஜப்பா.
கடன் வாங்குபவன் வீட்டில் அழகான பெண்கள் இருக்கிறார்களா என்று கன்ஃபார்ம் செய்து கொண்டு கடன் கொடுப்பவன் அந்த தாதா . சொன்ன பணத்தை சொன்ன நேரத்தில் தராத வீடுகளின் பெண்களை ராஜப்பாவின் தம்பி காத்தவராயனும் ( புதுப்பேட்டை சுரேஷ்) சிறுமிகளை கிழவன் ராஜப்பாவும் சீரழிப்பதும் வழக்கம் .
ரவிச்சந்திரனின் மனைவி வாணிக்கும் ( மேகாலி மீனாட்சி) மகள் கவுரிக்கும் (மவுனிகா) அதே நிலைமை .
தவிர வாணி குளிப்பதை ராஜப்பாவின் ஆட்கள் ஆபாச படம் எடுத்து ரவியின் செல்போனுக்கே அனுப்புகின்றனர .
இந்த நிலையில் முண்டாசு கட்டிய சைக்கோ கொலைகாரன் என்று அடையாளப்படுத்தப்படும் ஒருவன் , முகத்தை மறைத்துக் கொண்டு , நகரில் பல பேரைக் கொலை செய்ய அவனை போலீஸ் தேடுகிறது .
ரவிச்சந்திரன் , மனைவி மக்களுக்குத் தெரியாமலே ரவியின் வீட்டில் அவன் சில நாட்கள் தங்குகிறான் .
ராஜப்பா கேட்கும் காசைக் கொடுத்து விட்டு மீளும் முயற்சியில் ரவிச்சந்திரன் குடும்பம் அடுத்தடுத்து தோல்விகளையே சந்திக்கிறது .
தப்பித்து ஊட்டிக்குப் போய் சில நாட்கள் தங்கி விட்டு அங்கேயே செத்துப் போகலாம் என்று ரகசியமாகக் கிளம்ப ராஜப்பா ஆட்கள் பிடித்து வீட்டுக்குள் அடைக்கிறார்கள். சரி வீட்டிலேயே பிரியாணியில் விஷம் கலந்து சாப்பிட்டு விட்டு செத்துப் போக முடிவு செய்ய, நடந்தது என்ன என்பதே இறுதி முயற்சி .
கந்து வட்டிக் கொடுமையின் உக்கிரத்தை விளக்கமாக விவரணையாக காட்சிப் படுத்தி இருக்கிறார்கள் . ராஜப்பா கதாபாத்திரத்துக்கான வசனங்களை மட்டும் ரசித்து ருசித்து எழுதி இருக்கிறார்கள்.
உணர்ந்து நடித்து இருக்கிறார் ரஞ்சித் .
ஆனால் மிக அட்டகாசமாக நடித்து படத்தை தோளில் சுமக்கிறார் மேகாலி மீனாட்சி . செயற்கையாக நடிக்காமல் உள்ளுக்குள் உணர்ந்து நடிக்கிறார் .
சும்மா சும்மா டப்பிங்கில் ம்ம்.. க்கும் …. எபக்ட் தருவதை மட்டும் குறைத்துக் கொண்டிருக்கலாம். ஆனாலும் மிக சிறப்பு மீனாட்சி .
குழந்தைகளில் மவுனிகா சிறப்பு, நீலேஷ் ஒகே .
மீன் தொட்டி மீன்கள், இவர்கள் நிலைமை இவற்றை வைத்து இன்னும் கனமாக எழுதி இருக்கலாம் . இப்போ ஜஸ்ட் மேட்டர் ஆஃப் ஃபேக்ட் போல அந்தக் காட்சிகள் கடக்கின்றன .
சொல்லப்பட வேண்டிய கதை , அதனால் பார்க்கப் பட வேண்டிய படம் என்பது இந்தப் படத்தின் சிறப்பு.
ஆனால் யதார்த்த வாழ்வில் நடக்கிற பிரச்னைகளுக்கு காட்சி அமைப்பும் அதே யதார்த்தமாக இருந்தால்தான் அது படம் பார்ப்பவனை பாதிக்கும் .
ராஜப்பாவாக வரும் விட்டல் ராவ் நடிப்பு படு செயற்கை . பக்கா சினிமாத்தனம் . அந்த காமெடி போலீசும் அப்படியே .
சூர்ய காந்தியின் ஒளிப்பதிவு, சுனில் லேசரின் இசை, வடிவேல் விமல் ராயின் ஒளிப்பதிவு யாவும் பலன் தரவில்லை.
அவ்வளவு பெரிய பிள்ளைகள் உள்ள வீட்டில் பாக்கிற சுவர்களில் எல்லாம் குழந்தைக் கிறுக்கல் போல கிறுக்கி வைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் பாபு எம் பிரபாகரன் . சுவர் கிறுக்கல்களை அழிக்க வேண்டிய பக்குவத்தில் இருக்கிறார் மகள் கவுரி .
குடியிருக்கிற வீட்டை பிரிச்சு பிரிச்சு வாடகைக்கு விட்டாலே , அந்தக் காசில் ராஜப்பா பொண்டாட்டியையே தூக்கலாமே போல இருக்கிறதே என்று படம் பார்க்கும்போதே நமக்குத் தோன்ற , பாதி ஷூட்டிங்கில் படக் குழுவுக்கும் அதே எண்ணம் வந்திருக்கும் போல . அது வாடகை வீடு என்று ஒரு போன் கட் காட்சியில் சமாளித்து விடுகிறார்கள் . சபாஷ்
ஆனால் அது போல எல்லா காட்சியிலும் செய்ய முடியல .
ரவி தற்கொலை செய்து கொள்ள கையை வெட்டிக் கொள்ள , அதைப் பார்க்கும் வேணி சட்டென்று அவன் கையில் கட்டுப்போட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல் பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறாள். லாஜிக்படி அவள் பேசி முடிக்கும் முன்பே ரவி, உடம்பு ரத்தம் முழுக்க வடிந்து செத்திருக்க வேண்டும் . அவ்ளோ நீளம் .
ரவியின் குடும்பம் என்ன ஆனது? யாருமே வரல. வேணியின் அக்கா மட்டும் ஒரு போன் ஃகட்டில் முகம் காட்டாமல் பேசி விட்டுப் போகிறார் .
வேணியின் அப்பாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்று தகவல் வருது . ” நான் எப்படி உன் அப்பா முகத்தில் விழிப்பேன்” என்று ரவி சொல்வது சரி. ஆனால் வேணி ஏன் பிள்ளைகளை விட்டு விட்டு போக வேண்டும் ? அவர்களை அழைத்துக் கொண்டு போவதும் அங்கே உறவினர்களிடம் தங்களுக்கு உள்ள ஆபத்தை சொல்வதும் ஒரு நல்ல வழி அல்லவா? அப்படி ஒரு காட்சி வரும்போது அதற்குத்தானே ரசிகன் ஆசைப்படுவான் .
அதுகூடப் போகட்டும் .
போன வேணி கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வருகிறாள் . ”அப்பா உங்கள வரச் சொன்னாரு..” என்று சொல்வார் என்று பார்த்தால், ”அப்பா செத்துட்டாரு” என்கிறாள். அந்த அப்பாவை கணவனும் பிள்ளைகளும் பார்க்க வேண்டாமா?
யதார்த்தத்தில் தகவல் சொல்லி அப்பா செத்துட்டாரு; நீங்களும் பிள்ளைகளும் வாங்கன்னு தானே ”சொல்லணும் . கந்து வட்டி ஆட்கள் விட மாட்டார்கள் என்ற லாஜிக் இங்கே ஒர்க் அவுட் ஆகுமா?
வீட்டில் இருந்து தப்பிக்கும் முயற்சி .. மாட்டிக் கொள்வதற்காகவே எடுக்கும் முயற்சி போல இருக்கிறது .
ஆள் இல்லாத ரோட்டில் தன் வீட்டு வாசலில் ராஜப்பா அடியாட்கள் காத்துக் கொண்டு இருக்க , ”பக்கத்து வீட்டு வாசல்ல வந்து நில்லுங்க ” என்று கேப் டிரைவரிடம் சொல்வார்களாம். ”இந்தா இப்ப நாங்க தப்பிக்கப் போறோம் . வந்து புடிச்சுக்குங்க ” என்று அடியாட்களிடம் மறைமுகமாக சொல்வது போல ஒரு சீன்.
இன்னும் சொல்லலாம். முதல் படம் . சிறு படம் என்பதால் போதும்
கடைசியில் ஒரு கேரக்டருக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்து இருக்கிறார் . அவரிடம் ஒரே ஒரு குளோசப் ஷாட் வாங்கி இருந்தால் அந்தக் குரலுக்கான உயரமும் அதிகரித்து இருக்கும் . அதையும் செய்யவில்லை.
பல இடங்களில் நிகழுமொரு நிகழ்வை கதையாக தேர்ந்தெடுத்தது பாராட்ட வேண்டிய விஷயம் என்றாலும் சொன்ன விதத்தில் சறுக்கி இருக்கிறது படம் .
மொத்தத்தில் இறுதி முயற்சி …தரமான அரிசி பருப்பு. சமையல்தான் சரி இல்லை.
