வெள்ளிமலை @ விமர்சனம்

சுபர்ப் கிரியேசன்ஸ் சார்பில் ராஜகோபால் இளங்கோவன் தயாரிக்க, சூப்பர் குட் சுப்பிரமணியம், அஞ்சு கிருஷ்ணா, வீர சுபாஷ் நடிப்பில் ஓம் விஜய் இயக்கி இருக்கும் படம். 

அடர்ந்து செழித்த ஒரு மலையின் அடியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் சித்த மருத்துவர் ஒருவர் ( சூப்பர் குட் சுப்பிரமணியம்) .  அவரது,  தாயில்லா மகள் (அஞ்சு கிருஷ்ணா) . 
 
நவீன மருத்துவம் அந்த கிராமம் வரை ஊடுருவிய நிலையில் அவருக்கு எந்த மரியாதையும் இல்லை. ஊரார் , உற்றாரின் கேலி கிண்டல் மாத்திரமல்ல… அவரின் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை அமைவதற்கே அவரது தொழில் தடையாக இருக்கிறது.  எனினும் மகள் அப்பாவின் வழி. 
 
பாம்பு கடித்த ஒரு சிறுவனை தன்னால் காப்பாற்ற முடியும் என்று  சித்த மருத்துவர் கதறியும்  கேட்காமல், பல மைல் தள்ளி இருக்கும் நவீன  மருத்துவமனைக்கு கொண்டு போக முயன்று வழியிலேயே அவனை கொல்கிறது ஊர் . 
இந்த நிலையில் சென்னையில் வைரஸ் மூலம் பரவும் புதுவகை அரிப்பு நோயுடன் ஊருக்கு வரும் ஒரு நபர் அந்த நோயை ஊர் முழுக்க பரப்பி விடுகிறான் . அதீத அரிப்பு அதன் விளைவாக மரணம் என்று ஊர் சிரமப்பட, நோயை கொண்டு வந்தவனுக்கு சிகிச்சை செய்கிறார் சித்த மருத்துவர் . அவனுக்கு சரியாகிறது . ஆனால் எப்படி சரியானது என்று அவருக்கே தெரியவில்லை . 
 
ஊரார் தங்களையும் குணப்படுத்தும்படி கெஞ்ச , என்ன செய்வது என்று புரியாத நிலையில் அவர் என்ன செய்தார் ? என்ன நடந்தது என்பதே படம். 
 
படத்தில் முதலில்  கவர்வது தேனி பக்கத்தில் அமைந்த அந்த லொக்கேஷன். பெருமாளின் ஒளிப்பதிவு சிறப்பு . 
முதல் பகுதி முழுக்க இழையோடும் நகைச்சுவை அட்டகாசம் . 
 
ரகு நந்தன்  இசையில் அர்த்தமுள்ள சிறப்பான பாடல்கள் எழுதி இருக்கிறார் கு. கார்த்திக் .  பின்னணி இசையும் சிறப்பு . 
 
அரிப்பு பிரச்னை வந்த நிலையில் வித்தியாசமான சிச்சுவேஷனில் வரும் – திண்டுக்கல் லியோனி பாடிய பாடலும் ரசிக்க வைக்கிறது 
 
வசனங்கள் நன்றாக இருக்கின்றன. 
 
இப்படி பல சிறப்புகள் எல்லாமே முதல் பாதி வரைதான் . 
 
சூப்பர் குட் சுப்ரமணியம் முழு  நீள கதாபாத்திரத்தில் உற்சாகமாக நடித்து இருக்கிறார் . கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் உள்ளம் கொள்ளை கொள்கிறார் அஞ்சு கிருஷ்ணா . வசனங்களை அவர் உணர்ந்து உள்வாங்கி பேசும் விதம் ரம்மியம்.
முறைப் பையனாக வரும் வீர சுபாஷும் சிறப்பு. 
 
இரண்டாம் பகுதியில் எழுத்து ரொம்ப பலவீனம் . காட்சிகளே இல்லாமல் இழுத்து இருக்கிறார்கள் . திருப்பங்கள் என்று அவர்கள் சொல்லும் விஷயங்கள் முதல் பாதிக்கு எந்த வகையிலும் உதவவில்லை. 
 
மருத்துவர் கதாபாத்திரம் திரைக்கதையின் வெற்றிக்கு எதிராகப் போகும் வரையில் முடித்து வைக்கப்படுகிறது . அதனால் பெருத்த ஏமாற்றமே ஏற்படுகிறது 
 
எனினும் சித்த மருத்துவத்தின் பெருமை சொல்லும் படம் என்ற வகையில் சிறப்புப் பெறுகிறது  வெள்ளிமலை. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *