ஹேஷ்டேக் எஃப் டி எஃப் எஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து பாடல்கள் எழுதி படத் தொகுப்பு செய்து திரவ் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக இஸ்மத் பானு… இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர், ரமா, மாஸ்டர் கார்த்திகேயன் , தேவ் ஹபிபுல்லா நடிப்பில் அறிமுக இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து இயக்கியுள்ள படம் வெப்பம் குளிர் மழை .
மாட்டுக்கு சினை ஊசி போடும் வேலை செய்யும் நாயகன் ( திரவ்) . ஆனால் அவன் மனைவி (இஸ்மத் பானு) ஒரு குழந்தைக்குத் தாயாகாத நிலையில் கணவன் ஊராலும் மனைவி குடும்பம் மட்டும் சுற்றத்தாலும் கேள்விக்கும் அதன் வழியே கேலிக்கும் ஆளாக , ஒருபடி மேலே போய் அது மனைவியின் வாழ்க்கைக்கே கேள்விக்குறியாகிறது
நாயகனின் அம்மா தனது மகளின் மகளை நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க முயல, ஒரு நிலையில் மனைவி கர்ப்பாமகிறாள். குழந்தையும் பிறந்த நிலையில் , கணவனுக்கு உள்ள குறைபாடால் வேறு மாதிரி பிரச்னை முளைக்கிறது . குழந்தை தொடர்பான விசயத்தில் கணவன் நிம்மதி இழக்க, நடந்தது என்ன ? குழந்தை விசயத்தில் நடந்தது என்ன என்பதே படம்
வெப்பம் அதிகரிக்கும் போது, காற்று சூடாகி இடம்பெயர , அங்கே வரும் புதுக் காற்றால் முதலில் குளிர்ச்சி அப்புறம் மழை பெய்வது போல மனித வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பால் நேர்மாறான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதே படம்.
அச்சு அசலாக ஓர் இயல்பான கிராமிய சூழலை அழகாக பதிவு செய்கிறார் இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து . ஹீரோ ஹீரோயின் மற்ற கதாபாத்திரங்கள் மட்டுமின்றி இயல்பான கிராமத்து மனிதர்களிடமும் அழகாக நடிப்பை வாங்கி இருக்கிறார் . குழந்தை இன்மை பிரச்னையில் கிராமியச் சூழலில் ஊரார் உறவுகளின் வார்த்தைகள் எப்படி அவர்கள் நிம்மதியைக் கெடுக்கிறது என்பதை சொன்னதோடு , குழந்தை பெற்றுக் கொள்ள விஞ்ஞான ரீதியாக உள்ள வழிமுறைகள் பற்றி எல்லாம் கூட தனக்குத் தெரிந்தவரை பேசி இருக்கிறார்.
எம் எஸ் பாஸ்கர் கதாபாத்திரம் மூலம் , இன்றைய தலைமுறைகளை விட முந்தைய தலைமுறை சிறப்பாக வாழ்ந்ததை பதிவு செய்திருக்கும் விதமும் நன்று.
பிரீத்தி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு கிராமியச் சூழலையும் காட்சிகளின் உணர்வுகளையும் சரியாக படம் பார்ப்பவருக்குப் படைக்கிறது . சங்கர் ரங்கராஜன் இசையில் பாடல்கள் தூய்மையாக கனிமமாக இருக்கிறது. பின்னணி இசை எளிமை
இமேஜ் பார்க்கும் ஹீரோக்கள் நடிக்கத் தயங்கும் நாயகன் பாத்திரத்தில் இயல்பாக சிறப்பாக உயிர்ப்பாக நடித்து இருப்பதோடு , தயாரித்தும் , அவ்வளவு பக்குவமில்லாத வார்த்தைகளோடு பாடல்கள் எழுதியும் படத் தொகுப்பு செய்தும் இன்னும் சில தொழில்நுட்ப வேலைகள் செய்தும் இருக்கிறாரா திரவ் . தானே காசு போட்டு தானே தயாரித்தும் இருப்பதால் , தானே செய்த படத் தொகுப்பில் கோட்டை விட்டு இருக்கிறார் . ஆரம்பம் முறை கிளைமாக்ஸ் வரை நீ……. ளும் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன.
மிக சிறப்பாக ஈர்க்கும்படி நடித்து இருப்பதோடு ஆபாசம் இல்லாத .அன்னியோன்யக் காட்சிகளில் ரசிக்கவும லயிக்கவும் வைக்கிறார் நாயகின் இஸ்மத் பானு. நாயகனின் அம்மாவாக வரும் ரமா, மற்றும் முக்கியக் கதாபாத்திரங்களில் வரும் நடிக நடிகையரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
குழந்தை இல்லை என்றால் அதற்கு எப்படி எப்படி எல்லாமோ முயல வழி சொல்பவர்கள் , அநாதைக் குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி மட்டும் சொல்வதே இல்லை என்பதே வருத்தம் .
வெப்பம் குளிர் மழை …. தாகம் தீர்க்கும். விவசாயம் நடக்குமா ?